Tomato Fever: குழந்தைகளுக்கு பாதிப்பு! பீதி கிளப்பும் தக்காளி காய்ச்சல்! அறிகுறி என்ன? சிகிச்சை என்ன?
கேரளாவில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் ஒன்று பரவி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அச்சுறுத்தி வருகிறது. இந்தச் சூழலில் அவ்வப்போது ஒரு சில புதிய வைரஸ் தொற்றுகளும் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய வகை வைரஸ் தொற்று ஒன்று கேரளாவில் பரவி வருகிறது.
கேரளாவில் சுமார் 82 பேருக்கு தக்காளி வைரஸ் தாக்கி காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் கொல்லம், ஆரியங்காவு, அஞ்சல் உள்ளிட்ட பகுதிகளில் இந்த வகை காய்ச்சல் பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை தொற்று தொடர்பாக யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கேரள சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தக்காளி வைரஸ் என்றால் என்ன? அதற்கு ஏற்படும் அறிகுறிகள் என்ன?
தக்காளி வைரஸ் காய்ச்சல் என்பது சிக்கன்குனியா அல்லது டெங்கு காய்ச்சலுக்கு பாதிப்பிற்கு பின்பு வரும் காய்ச்சல் வகைகளில் ஒன்று. இது பெரும்பாலும் 5 வயது வரை உள்ள குழந்தைகளை அதிகமாக தாக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வகை காய்ச்சல் வருபவர்களுக்கு ரத்த சிவப்பில் கொப்பளங்கள் அல்லது கட்டிகள் உடம்பில் வரும். அத்துடன் மிகவும் அதிகமான அளவில் காய்ச்சல், உடம்பு வலி, கண் எரிச்சல் உள்ளிட்டவை ஏற்படும். இவை தவிர இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அதிகளவில் உடலில் நீர் சத்து குறைந்துவிடும். இதனால் அவர்கள் சோர்ந்து காணப்படுவார்கள்.
தக்காளி காய்ச்சலுக்கு சிகிச்சை என்ன?
இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். அத்துடன் ஏற்பட்டும் கட்டிகளை தொடாமல் இருக்க வேண்டும். அவர்களை சுற்றி உள்ளவர்கள் சுத்தமான பழக்கம் வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு ஒரு வாரம் வரை காய்ச்சல் நீடிக்கும் என்பதால் போதிய ஓய்வு எடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், ''கேரளாவின் கொல்லம் பகுதியில் பரவி வரும் தக்காளி வைரஸ் தொடர்பாக தமிழக மக்கள் அச்சம் அடைய வேண்டாம். சிவப்பு நிற புள்ளிகள் தோன்றுவதால் இது தக்காளி வைரஸ் . தக்காளிக்கும் தக்காளி வைரஸுக்கும் தொடர்பு இல்லை. இருந்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது'' என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )