Sleeping Tips: தூங்கும்போது சாக்ஸ் அணிவது உடலுக்கு நல்லதா? - ஆய்வு சொல்வது என்ன?
சாக்ஸ் அணிவது இந்த செயல்முறையை துரிதப்படுத்தி நமக்கு விரைவாக தூக்கத்தை வரவழைக்கிறது. சாக்ஸ் நமது கால்களை சூடாக வைத்திருக்க உதவுவதால் மூளைக்கு ஓய்வெடுக்க வேண்டிய நேரம் என்பதை தெரிவிக்கிறது.

சமீபகாலமாக பலரும் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வருகின்றனர். என்னதான் உடனடியாக படுக்கைக்கு சென்றாலும் தூக்கம் பலரும் எட்டாகனியாகவே உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தூக்கமின்மை பிரச்னையால் தவிக்கின்றனர். சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளுதல், மின்சாதனங்களில் இருந்து ஒதுங்கி இருத்தல், மூலிகை தேநீர் குடிப்பது போன்ற பல விஷயங்களையும் முயற்சி செய்தாலும் தூக்கம் என்பது அரிதாகவே உள்ளது. அப்படியானவர்கள் சாக்ஸ் அணிந்து படுத்தால் தூக்கத்தின் தரம் மேம்படுவதாக நம்பப்படுகிறது. இதுதொடர்பாக ஹார்வர்டு மருத்துவ பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது.
மேம்படும் தூக்கத்தின் தரம்
படுக்கைக்கு செல்வதற்கு முன் உங்கள் கால்களை சிறிது சூடாக வைத்திருப்பது சிறந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது. இதனால் தான் வெளிநாடுகளில் குளிர்காலம், கோடைகாலம் எந்த காலமாக இருந்தாலும் சாக்ஸ் அணிந்து தூங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு செய்யும்போது உடல் சூடாவதால் அனைத்து உறுப்புகளும் அமைதியாகி தன்னைத்தானே குளிர்விக்கத் தொடங்குகிறது.
இது மருத்துவ ரீதியாக வெப்ப ஒழுங்குமுறை என்று அழைக்கப்படுகிறது. உங்கள் கைகளும் கால்களும் சூடாக இருக்கும்போது அதிலிருக்கும் இரத்த நாளங்கள் விரிவடைகிறது. இதன் காரணமாக மெதுவாக உடல் உள் வெப்பத்தை தோல் மூலமாக வெளியிடுவதால் உடல் குளிர்ச்சியடைய தொடங்கும். இதுவே நாம் சோர்வாகி தூங்க செல்லலாம் என்ற அறிகுறியை நமக்களிக்கிறது.
சாக்ஸ் அணிவது இந்த செயல்முறையை துரிதப்படுத்தி நமக்கு விரைவாக தூக்கத்தை வரவழைக்கிறது. சாக்ஸ் நமது கால்களை சூடாக வைத்திருக்க உதவுவதால் மூளைக்கு ஓய்வெடுக்க வேண்டிய நேரம் என்பதை தெரிவிக்கிறது. தூங்குவதற்கு முன் உங்கள் சருமத்தை சிறிது சூடேற்றுவது தூங்குவதற்கு எடுக்கும் நேரத்தைக் குறைத்து தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
தூங்கும் போது சாக்ஸ் அணிவது பெரும்பாலும் தூக்கக் கலக்கம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கும் எனவும் நம்பப்படுகிறது. மேலும் தூங்கும் போது சாக்ஸ் அணிவது தூக்க மாத்திரைகளை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாக்ஸ் அணிவதில் கவனம் தேவை
சாக்ஸை எக்காரணம் கொண்டும் இறுக்கமாக அணியக்கூடாது. மிகவும் தளர்வாகவும் இருக்க வேண்டாம். மென்மையான, சரியான அளவு கொண்ட சாக்ஸை அணிய வேண்டும். படுக்கையில் தூக்கத்திற்கு செல்லும் அரை மணி நேரம் முன்பு அதனை அணிந்து பழகுங்கள். உங்கள் கால்களை சூடாக வைத்திருக்க விரும்பும் போது, அறை சற்று குளிர்ச்சியாக இருக்க வேண்டும். அறை சூடாக இருந்தால் அணியாமல் இருக்கலாம். இதனை குளிர் இருக்கும்போது மட்டும் முயற்சிப்பது நல்லது.
(இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் நிபுணர்களால் பகிரப்பட்டுள்ளன. ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. இதற்கு ஏபிபி நாடு பொறுப்பேற்காது)
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )





















