Corona Third Wave | 3-வது அலையில் சுனாமி வேகம்... கவலை அளிக்கும் புள்ளிவிவரங்கள்.. கொரோனாவைத் தவிர்ப்பது எப்படி?
கொரோனா 3-வது அலை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இது ஜனவரி கடைசி வாரம் முதல், பிப்ரவரி 2-வது வாரம் வரை உச்சத்தில் இருக்கும்.
இந்தியாவில் 3-வது அலை தொடங்கிவிட்டதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். மீண்டும் கொரோனா தொற்று வேகமெடுத்து, தினசரி எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஜனவரி 6-ம் தேதி தொற்றைக் காட்டிலும் நேற்றைய (ஜன.7) எண்ணிக்கை 28 சதவீதம் அதிகரித்து, 1,17,100 ஆக உயர்ந்துள்ளது கவலை அளிக்கிறது. இதன்மூலம் ஒட்டுமொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3.52 கோடியாக அதிகரித்துள்ளது.
இதில் மொத்தம் 3,007 பேருக்கு ஒமிக்ரான் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவிலும் டெல்லியின் ஒமிக்ரான் வகை வைரஸ் அதிகரித்துள்ளது. இதே மாநிலங்களில் டெல்டா வகைத் தொற்றுகளும் அதிகமாக உள்ளன. மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 36,265 பேருக்குத் தொற்று பதிவான சூழலில், மும்பையில் மட்டும் 20,181 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நாளொன்றுக்கு 15,000 தொற்றுகள் பதிவாகி வருகின்றன.
தமிழகத்திலும் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை செங்குத்தாக அதிகரித்து வருகிறது. நேற்று (ஜன.7) 8,981 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை தவிர்த்து கொல்கத்தா, சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளும் கவலை அளிப்பவையாக உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுக்கவே கொரோனா தொற்று வீரியம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 95 லட்சம் கோவிட் தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய 7 நாட்களை விட 71 சதவீதம் அதிகம். தொற்று 41 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று எண்ணிக்கை அமெரிக்காவில் 100 சதவீதமும் தென் - கிழக்கு ஆசியாவில் 78%, ஐரோப்பாவில் 65% அதிகரித்துள்ளது.
'மக்களைக் கொல்லும் ஒமிக்ரான்'
ஒமிக்ரான் தொற்றை, மிதமான வைரஸ் தொற்று என்று வகைப்படுத்தி விடக்கூடாது. அதுவும் மக்களைக் கொல்கிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று (ஜன.6) பேசிய அவர், ''டெல்டா வகை வைரஸ் தொற்றுடன் ஒப்பிடும்போது ஒமிக்ரான் தொற்று குறைவான பாதிப்பையே ஏற்படுத்துகிறது என்றாலும், ஒமிக்ரான் தொற்றை, 'மிதமான' வைரஸ் தொற்று என்று வகைப்படுத்தி விடக்கூடாது.
சுனாமி வேகத்தில் பரவல்
முந்தைய கோவிட்- 19 தொற்று வகைகளைப் போலவே, ஒமிக்ரானும் மக்களை மருத்துவமனையில் அனுமதிக்கிறது. மக்களைக் கொல்கிறது. சொல்லப்போனால், தொற்றாளர்களின் எண்ணிக்கை சுனாமியைப் போல அதிகமாகவும் வேகமாகவும் இருக்கிறது. இதன்மூலம் உலகம் முழுவதும் சுகாதார அமைப்புகளை ஒமிக்ரான் சீர்குலைக்கிறது.
ஆல்ஃபா, பீட்டா, டெல்டா, காமா மற்றும் ஒமிக்ரான் உள்ளிட்ட திரிபுகள், மக்களிடையே குறைவான தடுப்பூசி போடப்படும் விகிதத்தையே சுட்டிக் காட்டுகின்றன. இதன்மூலம் வைரஸ் திரிபுகள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருக்க வாய்ப்புகளை உருவாக்கிவிட்டோம்.
கடந்த வாரம்தான் மிக அதிகத்தொற்று
இந்த பெருந்தொற்றுக் காலத்திலேயே கடந்த வாரம்தான் அதிகமான கோவிட் 19 தொற்று எண்ணிக்கை பதிவாகி உள்ளது. விடுமுறை நாட்களில் குறைவான பரிசோதனைகள், சுய பரிசோதனையில் தொற்று உறுதியானது அரசிடம் பதிவு செய்யப்படாத சூழல், மருத்துவ அமைப்புகளின் மீதான சுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொற்று எண்ணிக்கையைக் குறைவாகவே மதிப்பிட்டுள்ளோம்.
மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் போதவில்லை. இதனால் பிற நோய்கள் மற்றும் காயங்களால் உரிய நேரத்துக்கு சிகிச்சை பெற நோயாளிகளால் முடியவில்லை'' என்று டெட்ரோஸ் ஆதனம் கேப்ரியேசஸ் கவலை தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரானை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா, ஏபிபி செய்தி நிறுவனத்திடம் பேசினார்.
3-வது அலை தொடங்கிவிட்டது
''கொரோனா 3-வது அலை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இது ஜனவரி கடைசி வாரம் முதல், பிப்ரவரி 2-வது வாரம் வரை உச்சத்தில் இருக்கும். அந்த நான்கு வாரத்துக்குள் கணிசமான மக்கள் பாதிக்கப்படுவர். பலருக்கும் பரவியே ஒமிக்ரான் அலை ஓயும்.
அப்போது தீவிர பாதிப்புக்கு ஆளாக அதிக வாய்ப்புள்ளவர்களான இணை நோய் உள்ளோர், வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்குத் தொற்று எப்படி எதிர்வினையாற்றும் என்பது இனிதான் தெரியும். அதனால், மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளிலும் தொற்று எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. எனினும் தடுப்பூசி போடப்பட்ட மக்களுக்கு வீரியம் குறைவான தொற்றே வெளிப்படுகிறது. இந்தியாவிலும் இதேபோலத்தான் இருக்கிறது.
அறிகுறிகள் என்னென்ன?
* உடல் வலி/ சோர்வு,
* லேசான காய்ச்சல்,
* தொண்டை கரகரப்பு
* அறிகுறிகள் இல்லாமலும் தொற்று ஏற்படலாம்.
முந்தைய தொற்றுகளைப் போல நுகர்தல், சுவைத்தால் திறன் இழப்பு இதில் இருப்பதில்லை. வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பிரச்சினைகளும் இருக்காது. இத்தகைய அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல், உடனடியாகச் சென்று பரிசோதனை செய்யுங்கள்'' என்று மருத்துவர் ஃபரூக் அப்துல்லா கூறுகிறார்.
பயமும் அலட்சியமும் வேண்டாம்
அதே நேரத்தில் இரண்டாவது அலையைப் போல 3-வது அலை மோசமாக இருக்காது. பயம் வேண்டாம். ஆனால் அலட்சியமும் வேண்டாம். மக்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருந்தால் போதும் என்றும் தெரிவிக்கிறார்.
கொரோனா தொற்றை எதிர்கொள்வது குறித்தும் பேசியவர், ''தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 2வது தவணை போடாதவர்கள், காலம் தாழ்த்தாமல் செலுத்த வேண்டும். முன்களப் பணியாளர்களும், இணை நோய் கொண்ட வயதானோரும் ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
வழக்கம்போல முகக்கவசம் அணிவது, நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது, வயதானோரைப் பொது இடங்களுக்குக் கூட்டிச்செல்லாமல் இருப்பதை மேற்கொள்ள வேண்டும்.
கட்டுப்பாட்டில் பிபி, சுகர்
சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். மருத்துவமனைகளுக்கு முடிந்த அளவுக்குச் செல்லாமல் தவிர்க்க வேண்டும். தொற்றுக்கு ஆளானவர்கள் அங்கு வருவார்கள் என்பதால், அங்கு தொற்று பரவ அதிக வாய்ப்புகள் உண்டு. குடும்ப விழாக்கள் வைப்பது குறித்து யோசியுங்கள். உங்களுக்காக உறவினர்களையும் தர்ம சங்கடத்துக்கு ஆளாக்காதீர்கள். கட்டாயம் செல்ல வேண்டும் என்றாலும் பெரியவர்களை அழைத்துச் செல்லாதீர்கள்.
கட்டாயம் மருந்துகளை நீங்களே எடுத்துக் கொள்ளாதீர்கள். அறிவுரைப்படி பாரசிட்டமால் மருந்துகளை அதிகபட்சம் 2 நாட்களுக்கு உட்கொள்ளலாம். தொடர்ந்து காய்ச்சல் அதிகமாக இருந்தால், உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டியது அவசியம்.
அதேபோல ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டதாலேயே அஞ்சத் தேவையில்லை. எனினும் எளிதில் பாதிக்க வாய்ப்புள்ள பிறருக்குப் பரப்பாமல் இருந்தால்போதும். அதற்குக் குறைந்தபட்சம் 5 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்று மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.
இந்த பெருந்தொற்றுக் காலகட்டத்தில், கட்டாயம் 'சுய'நலத்துடன் இருந்து பொதுநலம் காப்போம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )