Vaccine for Pregnant Women | கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போடலாமா? வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டது அரசு!
வழிகாட்டும் நெறிமுறைகளில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக முன்களப் பணியாளர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது
உலக அளவில் பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் ஓர் ஆண்டை கடந்தாலும் முற்றிலுமாக கட்டுப்படவில்லை. இந்தியா உள்பட ஆசியா மற்றும் ஐரோப்பிய கண்டங்களில் இன்னும் பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னமும் உள்ளது. உருமாறும் கொரோனா பெரிய சவாலாக உள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முக்கியம் என்றாலும் தடுப்பூசிதான் பிரதானமான முன்னெச்சரிக்கை என்கிறது அரசு.
தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்கிடையே கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து விவரங்களை அரசு வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டும் நெறிமுறைகளில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக முன்களப் பணியாளர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
லாக்டவுன் முடிந்து வெளியே வர்றீங்களா... வெயிலில் சருமத்தை பாதுகாக்க டிப்ஸ் இதோ!
கர்ப்பிணிகளில் 35 வயதுக்கும் அதிகமானவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு அதிகம்
கொரோனா தடுப்பூசியின்தன்மை, மதிப்பு, முன்னெச்சரிக்கை குறித்து கர்ப்பிணிகளுக்கு முன்களப்பணியாளர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். அதனடிப்படையில் அவர்கள் தடுப்பூசி குறித்து முடிவெடுப்பார்கள். கொரோனா தடுப்பூசியை மற்றவர்கள் போல கர்ப்பிணிகளும் எடுத்துக்கொள்ளலாம். பாதுகாப்பானதுதான். லேசான காய்ச்சல் வரலாம். தடுப்பூசி செலுத்திய இடத்தில் வலி இருக்கும். லேசான பாதிப்புகள் நாட்களுக்கு இருக்கும்.
கர்ப்ப காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் குழந்தை பிறப்புக்கு பிறகு கொரோனா தடுப்பூசி எடுக்கலாம். கோவின் இணையதளத்திலோ அல்லது தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்றோ பதிவு செய்துகொள்ளலாம்
பக்கவிளைவுகள்:
மிக அரிதாக, 1.5 லட்சம் கர்ப்பிணிகளில் ஒருவருக்கு சில முக்கிய பக்கவிளைவுகள் இருக்கலாம். இது தடுப்பூசி போட்டு 20 நாளில் ஏற்படலாம். மூச்சுத்திணறல், வாந்தி, கைகால்கள் வலி, மூட்டுவலி, மூட்டு வீக்க,, சருமத்தில் சிராய்ப்பு, தொடர் தலைவலி ஏற்படலாம். இந்த அறிகுறிகள் இருந்தால் கர்ப்பிணிகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
முன்னதாக பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி விவரம் குறித்து பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால்,
கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக்-வி, மாடெர்னா ஆகிய தடுப்பூசிகளுக்கு தற்போதுவரை, அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த 4 தடுப்பூசிகளுமே பாலூட்டும் தாய்மார்களுக்கு செலுத்த உகந்ததாகும் என்றார். மேலும், தடுப்பூசிகளுக்கும், மலட்டுத்தன்மைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனக் கூறிய அவர், கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்த மாடெர்னா நிறுவன தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நீண்ட நேரம் மொபைல், லேப்டாப், டிவி பார்ப்பவரா நீங்கள் ? இது உங்களுக்குத் தான்!