Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு
Youtuber Irfan Controversy: யூடியூபர் இர்ஃபான் மனிதனாகவும் இல்லை, இஸ்லாமிய நம்பிக்கைகளையும் பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Youtuber Irfan Controversy: யூடியூபர் இர்ஃபான் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பிறகும், அரசு அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சர்ச்சைகள் - யூடியூபர் இர்ஃபான்:
பொழுதுபோக்கிற்கானது என்ற நிலை மாறி சமூக வலைதளங்கள் என்றாலே, சர்ச்சைக்கானது என்ற சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக யூடியூப் பிரபலங்கள் என்ற பெயரில் சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டில் பலர் உலா வருகின்றனர். அவர்களில் இர்பான் என்பவரும் ஒருவர். ஆரம்பநாட்களில் பகுதிநேர வேலையாக உணவகங்களுக்கு சென்று உணவுகளை ருசித்து விமர்சனம் செய்து வீடியோக்களை பதிவிட்டு வந்தவர், காலப்போக்கில் அதையே முழுநேரவேலையாக மாற்றிக்கொண்டார். அதோடு, வ்லாக் என்ற பெயரில் அவர் பதிவிடும் வீடியோக்களும் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குகின்றன. அந்த வரிசையில், ரம்ஜானை ஒட்டி அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ தான் புதிய சர்ச்சையாக மாறியுள்ளது.
உதவி எனும் பேரில் விளம்பரம்:
ரம்ஜானை கொண்டாடும் விதமாக ஏழைகளுக்கு உடைகள் மற்றும் பணம் வழங்கப்போவதாக, தனது மனைவி மற்றும் ஒரு உதவியாளருடன் இர்ஃபான் காரில் சென்றுள்ளார். அப்போது சாலையோரம் இருந்த சிலருக்கு பொருட்களை வழங்கியுள்ளார். இதனை கண்டதும் அங்கிருந்தவர்கள் முண்டியடித்துக்கொண்டு பொருட்களை வாங்க முயன்றுள்ளனர். இதனால் ஆவேசமடைந்தவர் பொதுமக்களை நோக்கி சத்தமிட்டு அங்கிருந்து நகர்ந்துள்ளார். இந்த சம்பவங்கள் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில், ஆடைகளுக்காக முண்டியடித்தவர்களை மோசமானவர்களை போல பேக்ரவுண்ட் மியூசிக் எல்லாம் போட்டு பில்டப் செய்துள்ளார். மேலும், “அசிங்கமாக இருப்பதாகவும், என் பொண்டாட்டியை இழுத்துச் சென்றுவிடுவார்கள் போல, நான் காப்பாற்றிக் கொண்டேன்” என்றெல்லாம் பேசியுள்ளார்.
மனுஷனும் இல்லை, இஸ்லாத்தையும் மதிக்கல:
ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும், தேவைப்படுவோருக்கும் உதவி செய்வது, இஸ்லாத்தில் ஒரு கடமையாகக் கருதப்படுகிறது. தர்மம் தலைகாக்கும் என்பது உண்மைதான், ஆனால் விளம்பரத்திற்காக உதவிகளை ஆவணப்படுத்தினால் அதன் பலன் கிடைக்குமா? என்பதே சந்தேகம் தான். ஆனால் இதை எதையும் கருத்தில் கொள்ளாமல், காரில் இருந்து இறங்கிக் கூட வராமல் போகிற போக்கில் ஆடைகளை கொடுத்துள்ளார். வெறும் வியாபார நோக்கில் மட்டுமே இந்த தானம் வழங்கும் செயலில் இர்ஃபான் ஈடுபட்டுள்ளார் என்பது வீடியோவை பார்ப்பவர்களுக்கு பட்டவர்த்தனமாக தெரிகிறது. பொதுவெளியில் பேசுகிறோம் என்பதை கூட மனதில் கொள்ளாமல், கெட்டவார்த்தைகளை கூட வீடியோவில் இடம்பெறச் செய்துள்ளார்.
மன்னிப்புக்கு வந்த அவமானம்:
வீடியோ வெளியாகி கடும் விமர்சனங்கள் குவிந்ததுமே இர்ஃபான் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். அந்த விளக்கத்தில், “முன்னேற்பாடுகள் எதுவும் இல்லாமல் என் மனைவியுடன் காரில் சென்று உதவி செய்ததால் அப்போதைய சூழலை கையாள தெரியவில்லை. அதன் காரணமாக திணறிப் போய் சில விஷயங்களை தவறாக செய்துவிட்டேன். என்னுடைய செயலுக்காக நான் மனம் வருந்துகிறேன்” என தெரிவித்தார். ஆனால், அவருடைய மன்னிப்பு செய்தியை பார்த்த பிறகு, உங்களால் மன்னிப்புக்கே அவமானம் வந்துவிட்டது என்று தான் கேட்க தோன்றுகிறது. மன்னிப்பு என்பது தெரியாமல் ஒருவர் தவறு செய்யும்போது, அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கலாம் என்பதற்காக கொடுக்கப்படுவது. ஆனால், இர்ஃபான் ஒவ்வொரு முறையும் தெரிந்தே தவறு செய்துவிட்டு, மன்னிப்பு என்ற வார்த்தை மூலம் சப்பை கட்டு கட்டுகிறார்.
தெரியாமலா வீடியோ எடிட் செய்தீர்கள்?
இர்ஃபான் சொல்வது போல எதிர்பாராத விதமாகவே, அவர் ஆவேசமடைந்து கத்தியதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், எடிட்டிங்கின்போது கூடவா அதனை வீடியோவில் இருந்து நீக்க முடியவில்லை. உதவி பெற்றவர்கள் மோசமானவர்கள் போல பேக்ரவுண்ட் மியூசிக் மூலம் சித்தரித்தரித்து இருப்பது தெரியாமல் தானா? கெட்டவார்த்தைகளை கூட நீக்காமல் வீடியோவை வெளியிட்டு இருப்பது அறியாமல் தானா? அவ்வளவு ஏன் கடும் விமர்சனங்கள் எழுந்து மன்னிப்பே கோரிய பிறகும் கூட, வீடியோவில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதியை கூட நீக்காமல் உள்ளாரே? இதை எந்த கணக்கில் சேர்க்கலாம். இதிலிருந்தே அவர் எவ்வளவு வியாபார நோக்கில் செயல்படுகிறார் என்பதை நம்மால் உணர முடியும். சர்ச்சையை கூட தனக்கு சாதகமாக்கி பணம் பார்க்கவே அவர் விரும்புகிறார்.
பெண்களுக்கு மட்டும் பொங்கி வருவார்களா?
அண்மையில் தவெக பொதுக்குழுவில் விஜய் உடன் சேர்ந்து ஒரு இஸ்லாமிய பெண் உணவருந்தி இருந்தார். உடனே பொங்கி வந்த இஸ்லாமிய நலம் விரும்பிகள், நோன்பு நேரத்தில் எப்படி அந்த பெண் உணவருந்தலாம்? பொதுவெளியில் இருக்கும்போது தலையை ஆடைகொண்டு மறைக்கவில்லை எனெற்றால் குறைகூறி கடுமையாக விமர்சித்தனர். அதேநேரம், இஸ்லாமிய மரபுகளையும் மீறி பல்வேறு சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபட்டு வரும் இர்ஃபானை இதுவரை எந்தவொரு இஸ்லாமிய அமைப்புகளோ, இஸ்லாமிய நலம் விரும்பிகளோ கேள்வி கேட்டதாகவே தெரியவில்லை. ஒருவேளை அவர்களது கட்டுப்பாடுகள் எல்லாம், பிரபலங்களுக்கு கிடையாதோ என்னவோ?
மவுனம் காக்கும் அரசு:
இந்திய அரசியலமைப்பின்படி, குழந்தை பிறப்பதற்கு முன்பே பாலினத்தை அறிவது என்பது தண்டனைக்குரியது ஆகும். ஆனால், வெளிநாட்டிற்கு சென்று மனைவியின் வயிற்றில் இருக்கும் தனது குழந்தையின் பாலினத்தை அறிந்துகொண்டு, இந்தியாவிற்கு வந்து ஒரு விழா நடத்தி அதனை அறிவித்தார். மேலும் வீடியோவாகவும் வெளியிட்டார். இது பெரும் சர்ச்சை ஆனதுமே மன்னிப்பு கடிதம் கொடுக்க தமிழ்நாடு அரசும் மன்னித்துவிட்டது.
அதைதொடர்ந்து தனது மனைவியின் பிரசவத்தின் போது உடனிருந்த இர்ஃபான், குழந்தையின் தொப்புள் கொடியை தானே வெட்டி, அதையும் வீடியோவாக வெளியிட்டார். இதுவும் சர்ச்சையாக வெடிக்க, ”இந்தமுறை இர்பான் மன்னிப்பு கேட்டாலும், விடமாட்டோம். அவர் மன்னிப்புக் கேட்டாலும், அதை ஏற்க முடியாது” என அமைச்சர் மா. சுப்பிரமணியன் சூளுரைத்தார். ஆனால் ஒரு மாதம் கழித்து இதுகுறித்து பேசுகையில், “இர்ஃபானுக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இது ஒன்றும் கொலை குற்றமில்லை. இது பெரிய விசயமல்ல” என அமைச்சர் சாந்தமாகிவிட்டார்.
திமுகவின் ஆதரவுக்கரம்?
இர்ஃபான் செய்த இந்த செயல்களை வேறு ஏதேனும் ஒரு சாதாரண நபர் செய்து இருந்தால், அரசு நிர்வாகம் அவர்களை இப்படிதான் அணுகுமா என்பதே பொதுமக்களின் கேள்வி. ஆனால், கனிமொழி மற்றும் உதயநிதி ஆகியோரை, நேர்காணல் எடுத்ததன் மூலம் திமுக வட்டாரத்திற்கு இர்ஃபான் நெருக்கமாக உள்ளதாகவும், அதன் காரணமாகவே அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன.