Yogi Babu: ராமர் கோயில் பற்றிய கேள்வி: டென்ஷனான யோகி பாபு! இதுதான் ரியாக்ஷன்!
Yogi Babu: நடிகர் யோகிபாபு, கே.எஸ் ரவிகுமார், மற்றும் இயக்குநர் பாக்கியராஜ் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.
ஸ்கூல்
வைத்தீஸ்வரன் படத்தை இயக்கிய வித்யாதரன் தயாரித்து இயக்கியுள்ள படம் ஸ்சூல். யோகிபாபு , பூமிகா மற்றும் கே.எஸ் ரவிகுமார் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். குவாண்டம் ஃபிலிம் ஃபாக்டரி இந்தப் படத்தை வழங்குகிறது. பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதை மையமாக வைத்து ஹாரர் திரைப்படமாக இந்தப் படம் இயக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நடிகர் யோகிபாபு, கே.எஸ் ரவிகுமார், மற்றும் இயக்குநர் பாக்கியராஜ் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யோகிபாபு (Yogi Babu) படம் குறித்து பேசினார்.
சொல்றதுக்கு கூச்சமா இருக்கு
இந்தப் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து யோகி பாபு பேசினார். "எனக்கு சொல்றதுக்கு கொஞ்சம் கூச்சமாக தான் இருக்கிறது. இந்தப் படத்தில் நான் மாணவனாக நடிக்கவில்லை ஆசிரியராக நடித்திருக்கிறேன். பூமிகா மேடம் மற்றும் கே.எஸ் ரவிகுமார் சார் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். நிச்சயமாக இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இந்த படத்திற்கு நீங்கள் உங்களது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார்.
இஷ்டத்துக்கு கேள்வி கேட்காத..
தான் நடிக்கும் படங்களின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத காரணம் குறித்து ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த யோகி பாபு “இந்தக் கேள்விய நீ கேப்பனு எனக்கு தெரியும். இரவு, பகலாக தான் ஷூட் போய் வருகிறேன். என்னை லீடாக வைத்து படம் எடுக்கும் இயக்குநர்களிடம் கேட்டால் உங்களுக்கு என்னுடைய நிலைமை தெரியும்” என்று பதிலளித்தார்.
தொடர்ந்து பத்திரிகையாளர் தூக்குதுரை படத்தின் ஆடியோ லாஞ்சுக்கு வராமல் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்றது தொடர்பாக கேள்வி கேட்டபோது, யோகி பாபு சற்று கடுமையாக பதிலளித்தார். “நீ சாப்பிடுற சாப்பாட்டுக்கு தகுந்த மாதிரி கேள்வி கேட்கணும். தூக்குதுரை படத்தில் நான் 6 நாட்கள் நடித்திருக்கிறேன்.
அந்தப் படத்தில் நான் ஹீரோ கிடையாது. நான் ஏன வரவில்லை என்று படக்குழுவிற்கு எல்லாம் தெரியும். அந்தப் படத்தின் இயக்குநர் என்னை வைத்து ட்ரிப் என்று ஒரு படம் இயக்கியுள்ளார். இன்னும் ஒரு படம் அவர் இயக்கத்தில் நான் நடிக்க இருக்கிறேன். எதுவும் தெரியாமல் சும்மா கேள்வி கேட்கக் கூடாது’ என்று அவர் பதில் கொடுத்தார்.
தொடர்ந்து அதே பத்திரிகையாளர் ராமர் கோயிலுக்கு அழைப்பு வந்தும் போகாததற்கான காரணம் தொடர்பாக தனது கேள்வியைத் தொடங்கியபோது யோகிபாபு கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்து விட்டு அந்த இடத்தைவிட்டு சென்றார். அவர் போகிற போக்கில் “ இவன் எங்க இருந்தோ கிளம்பி வந்திருக்கான்’ என்று புலம்பியபடியே சென்றது கவனத்தை ஈர்த்துள்ளது.