World Music Day: ‘முன்னணி இசையமைப்பாளர்கள் மத்தியில் சீறிய புயல்’ ... பாலிவுட்டில் ஏ.ஆர்.ரஹ்மான் ஜெயித்த கதை..!
World Music Day 2023: உலக இசை தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் இந்திய சினிமாவின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இண்டிஇசைப்புயலாக மாறிய பயணத்தை காணலாம்.
உலக இசை தினம்(World Music Day) இன்று கொண்டாடப்பட்டு வரும் இந்திய சினிமாவின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்புயலாக மாறிய பயணத்தை காணலாம்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் பண்பலை வானொலியின் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ஏ.ஆர்.ரஹ்மானிடம், “இந்தி படங்களை விட தமிழ் சினிமாவில் ஏன் அடிக்கடி வேலை செய்கிறீர்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில், சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதாவது, நல்ல படங்கள் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால் ஒரு கும்பல் என்னைப் பற்றி தவறான வதந்திகளை பரப்புகிறது’ என தெரிவித்திருந்தார்.
தமிழ் முதல் இந்தி வரை
1992 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமாகிறார். அந்த படத்தின் பாடல்களின் வெற்றி அவரை மற்ற மொழிகளுக்கு கொண்டு செல்கிறது. முதலில் மலையாளம், தெலுங்கு என பயணப்பட்ட ரஹ்மான் 1995 ஆம் ஆண்டு ரங்கீலா படத்தின் மூலம் இந்தி சினிமாவுக்குள் நுழைகிறார். எப்படி தமிழில் இளையராஜா கொடிகட்டிப் பறந்த நேரத்தில் வீசும் இசைப்புயலாய் ரஹ்மான் நுழைந்தாரோ, அதேபோல் இந்தி திரைப்பட இசையில் ஜதின்-லலித், அனு மாலிக், நதீம்-ஷ்ரவன் போன்றவர்கள் ஆதிக்கம் செலுத்திய நேரத்தில் பாலிவுட்டின் எண்ட்ரீ கொடுத்தார்.
தாவூத், கபி நா கபி, தில் சே, தால், தக்ஷக், லகான், ரங் தே பசந்தி, குரு, ஜோதா அக்பர், ராஞ்சனா, மாம், தில் பச்சாரா, மிலி என 30 ஆண்டுகளில் குறைந்த அளவு படங்களுக்கு மட்டுமே இசையமைத்துள்ளார். அவரின் இசையின் புதிய பரிணாமம் ரசிகர்களுக்கு புதிதாக இருந்தது. அதனாலேயே ஒரு சில ஆண்டுகளிலேயே ரஹ்மான் இந்திய சினிமாவின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக கருதப்பட்டார்.
மாறிப்போன இந்தி சினிமா
மற்ற மொழி படங்களுக்கு இந்தி படங்கள் எப்படி ஒரு காலக்கட்டத்தில் முன்மாதிரியாக இருந்ததோ, அந்த நிலைமை கடந்த 10 ஆண்டுகளில் தலைகீழாக மாறியது. ஆம் பிற மொழி படங்களில் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட தொடங்கியது. இதனால் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைக்கும் படங்கள் எண்ணிக்கையும் குறைந்து வந்தது. குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த மற்ற மொழிப்பாடல்கள் அதே மெட்டுக்களோடு இந்தியில் வெளியானதால் ரசிகர்களுக்கு பெரிய ஆர்வம் இல்லாமல் போனது.
இந்நிலையில் தான் 2020 ஆம் ஆண்டு அப்படி ஒரு பேட்டியை ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்திருந்தார். அந்த சமயத்தில் தான் தோனி படத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்திருந்தார். பாலிவுட்டில் நெப்போடிசம் எனப்படும் சினிமாவில் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் தொடர்பான சர்ச்சை வெடித்தது. ஆனால் தனது பேட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிட்டதைப் போல, ' நான் விதியை நம்புகிறேன், எல்லாமே கடவுளிடமிருந்து வந்தவை என்று நான் நம்புகிறேன். எனவே எனக்கு வரும் படங்களில் எனது திறமையை வெளிக்காட்டுகிறேன்’ என தெரிவித்திருந்தார். திறமை எங்கிருந்தாலும் கொண்டாடப்படும். அதேபோல் தான் சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான் படமே பண்ணாவிட்டாலும் அவர் விட்டுச் சென்ற அடையாளங்கள் அதிகம். அதை எவராலும் அழிக்க மட்டுமல்ல..தொடக்கூட முடியாது என்பதே உண்மை.