Stranger Things: ஸ்ரேஞ்சர் திங்ஸ் நடிகர் மீது காதல்? கணவரை கைவிட்ட பெண்ணுக்கு கடைசியில் நடந்த சோகம்..!
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் வெப் தொடரில் நடித்த நடிகர் என நம்பி பெண் ஒருவர் அவரது கணவரை பிரிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் வெப் தொடரில் நடித்த நடிகர் என நம்பி பெண் ஒருவர் அவரது கணவரை பிரிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக சினிமா பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் இடையேயான பிணைப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு பெரியது. பின்னணி என்னவென்று கூட தெரியாது,ஆனால் திரையில் தான் ரசிக்கும் பிரபலத்துக்காக உயிரைக் கூட விட துணிவார்கள். அதேபோல் ஏதேதோ ஊரில் இருந்தெல்லாம் பிரபலங்களை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் வயது வித்தியாசமில்லாமல் கிளம்பி வருவார்கள். இவர்களை குறிவைத்து மோசடியான சம்பவங்களும் அவ்வப்போது நடைபெறும்.
இப்படியான நிலையில் 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' வெப் தொடரில் நடித்திருக்கும் நடிகர் என நம்பி, பெண் ஒருவர் தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார். காதல், நட்பு, அறிவியல் என அனைத்தும் கலந்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிவந்த வெப் தொடர் 'ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்'. குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை இந்த தொடருக்கு ரசிகர்களாக இருக்கும் நிலையில், சமீபத்தில் இதன் 4 ஆம் பாகம் வெளியானது. முதல் பாகத்தில் பள்ளி குழந்தைகளாக இருந்தவர்கள் இப்போது கல்லூரி பருவத்தில் இருப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த தொடரில் பில்லியாக நடிகர் டாக்ரே மாண்ட்கோமெரி நடித்திருந்தார். இந்த நடிகரின் பெயரில் சமூக வலைத்தளத்தில் போலி கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதில் கென்டக்கி நகரை சேர்ந்த பெண்ணான மெக்கலா என்ற பெண் நட்பு அழைப்பு கொடுத்துள்ளார். உண்மையில் நடிகர் தான் தன்னிடம் நட்பில் இருக்கிறார் என தொடர்ந்து அப்பெண் பேசி வந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய எதிர்தரப்பு நபர் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களை (தோராயமாக ₹8.3 லட்சம்) வாங்கியுள்ளார்.
இந்த பெண்ணுக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ள நிலையில், கணவருடன் சுமூக உறவு இல்லாததை அந்த போலி கணக்கு ஆசாமி தெரிந்து வைத்துள்ளார். இதுவே இருவருக்குள்ளும் பிரச்சினையை பெரிதாக்கி பிரிவை நோக்கி அழைத்துச் சென்றது. ஒரு வருடம் கழித்து அந்த நபர் மெக்கலாவை ஒருநாள் வீட்டை விட்டு வெளியேறுமாறு சொல்லியுள்ளார். நம்பி சென்ற பின் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை மெக்கலா உணர்ந்துள்ளார். ஏற்கனவே தான் யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வந்த நிலையில், கணவரை விவாகரத்து செய்தது எப்படி என்றும், மோசடி நபரிடம் வீழ்ந்தது எப்படி என்றும் மெக்கலா வீடியோவாக பகிர்ந்துள்ளார். அவருக்கு ஏராளமான இணையவாசிகள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.