Ilaiyaraaja : பணத்திற்கு ஆசைப்படுகிறாரா இளையராஜா..? பாஸ் எதுவா இருந்தாலும் தெரிஞ்சிட்டு பேசுங்க...
தனது பாடல்களுக்காக இளையராஜா போராடுவது பணத்திற்காக இல்லை உலகம் முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களால் அடையாளங்களை இழந்து வரும் எண்ணற்ற கலைஞர்களுக்காகவும் தான்

பணத்திற்கு ஆசைப்படுகிறாரா இளையராஜா ?
உலகளவில் தலைசிறந்த இசைக்கலைஞர்களில் ஒருவராக மதிக்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் மக்கள் மனதில் தனது இசையின் வழி என்றும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். தான் இசையமைத்த பாடல்களின் காப்புரிமை தொடர்பாக அடிக்கடி சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார் இளையராஜா. மஞ்சுமெல் பாய்ஸ் , டிஸ்கோ , தற்போது அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படக்குழுவுக்கு ஐந்து கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இளையராஜா. குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா இசையமைத்த மூன்று பாடல்கள் ரீமிக்ஸ் செய்து பயண்படுத்தப்பட்டிருக்கின்றன. அனுமதியில்லாமல் தனது பாடல்களை ரீமிக்ஸ் செய்ததற்காக எழுத்துப்பூர்வமாக படக்குழு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று இளையராஜா தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
மறுபக்கம் இந்த மூன்று பாடல்களுக்கான காப்புரிமைக்கு சொந்தமான நிறுவனத்திடம் முறையாக அனுமதி வாங்கிவிட்டோம் என மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணத்திற்காக இளையராஜா இந்த மாதிரி செய்வதாக பலர் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனால் உண்மையில் இளையராஜா போராடுவது தன்னைப் போன்ற சக கலைஞர்களுக்காகவும் தான்
ஜிப்லி ட்ரெண்ட்
சமீபத்தில் சான் ஜி.பி.டி ஜப்பானிய அனிமேஷன் ஜிப்லி ஸ்டைலில் புகைப்படங்களை உருவாக்கும் வசதியை அறிமுகப்படுத்தியது. கோடிக்கணக்கான மக்கள் தங்களது புகைப்படங்களை ஜிப்லி ஸ்டைலில் மாற்றி சமூக வலைதளத்தில் பதிவிட்டார்கள். ஜப்பானிய இயக்குநர் ஹாயாவோ மியாஸாகி தனது கைப்பட வரைந்து உருவாக்கியவை ஜிப்லி அனிமேஷன் படங்கள். இவ்வளவு தனித்துவமான ஒரு கலையை ஒரு ஏ.ஐ மூலம் உருவாக்குவது அந்த கலைஞருக்கு செய்யும் அவமரியாதை . இதனால் கலைஞருக்கு போய் சேர வேண்டிய அங்கீகாரமும் தடைபடும் அதே நேரத்தில் இது அவரது அடையாளத்தையும் நகல்செய்வது என பலர் தங்கள் விமர்சனத்தை முன்வைத்தார்கள். கிட்டதட்ட இதே நிலைமைதான் இளையாராஜாவுக்கு ஏற்பட்டுள்ளது.
இளையாராஜா ஏன் பாடல்களுக்கு உரிமை கேட்கிறார் ?
1957 ஆம் ஆண்டு காப்புரிமை சட்டம் நடைமுறைக்கு வந்தது. எழுத்து , இசை , கண்டுபிடிப்பு என ஒருவரின் படைப்பு மற்றும் அவரது அறிவுசார் சொத்துரிமையை பாதுகாக்கும் விதமாக இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. சினிமாத் துறையிலும் இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்கள் இடையில் பரஸ்பரம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயங்கி வந்தார்கள் .
காப்புரிமை சட்டம் சொல்வது என்ன
ஒரு இசைக்கலைஞர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையில் தனிப்பட்ட ஒப்பந்தம் இல்லாத பட்சத்தில் இசைக்கலைஞர்கள் இயற்றிய பாடல்கள் மீது அந்த திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கே முதல் உரிமை உள்ளது 1957 ஆம் ஆண்டு காப்புரிமை சட்டம் என கூறுகிறது. ஆனால் இளையராஜா தனது பாடல்களுக்கான உரிமைகளை எந்த ஒரு தனி ஒப்பந்தம் மூலமாகவும் பெற்றுக் கொள்ளவில்லை. ஏ.ஆர். ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்கள் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்கள் பாடல்களுக்கான காப்புரிமையை கைப்பற்றிக் கொண்டார்கள். இதை செய்யாதது தான் இளையராஜாவின் மிகப்பெரிய தவறு. இன்று அவருடைய பாடல்கள் மீது அவருக்கே உரிமை மறுக்கப்படுவது இதனால் தான்.
4500 பாடல்களை விட்டுக்கொடுப்பதா
1970 முதல் 1990 வரை இளையராஜா இசையமைத்த 4500 பாடல்களுக்கான காப்புரிமையை இளையராஜா கைப்பற்றவில்லை. இந்த மொத்த பாடல்களின் காப்புரிமை எக்கோ ரெக்கார்டிங் என்கிற தனியார் நிறுவனம் வைத்துள்ளது. இளையராஜாவே நினைத்தாலும் இந்த பாடல்களை இன்னொரு முறை பயண்படுத்த இந்த தனியார் நிறுவனத்திடம் அனுமதி கேட்கவேண்டும் என சட்டம் சொல்கிறது. இந்த நிறுவனம் நினைத்தால் இளையராஜாவின் பாடல்களை எத்தனை முறை வேண்டுமானாலும் ரீமிக்ஸ் செய்யலாம். கதையே இல்லாத மொக்கை படங்களில் பாடல்களை பயண்படுத்தலாம்.
இளையராஜா போராடுவது தனக்காக மட்டுமில்லை
சமீபத்தில் இளையராஜாவின் என் இனிய பொன் நிலாவே பாடலை அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜா பயண்படுத்தி இருந்தார். இந்த பாடலை அனுமதி இல்லாமல் பயண்படுத்தியதாக சாரிகாமா நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து. தான் இசையமைத்த பாடலை இன்னொரு படத்தில் பயண்படுத்துவதற்கான அனுமதி வழங்கும் உரிமை இளையராஜாவுக்கு கிடையாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் இந்த பாடலை பயண்படுத்த 20 லட்சம் ரூபாய் கேட்டது அந்த நிறுவனம் . சட்டரீதியான குழப்பத்தால் இன்று ஒரு கலைஞருக்கு அவரது சொந்த படைப்பின் மீதான உரிமை மறுக்கப்படுகிறது. இது தெரியாமல் இளையராஜா பணத்திற்கு ஆசைப்படுகிறார் என போகிற போக்கில் பேசுபவர்களுக்கு ஒன்றுதான் சொல்ல இருக்கிறது. இளையராஜா போராடுவது தனக்காக மட்டுமில்லை உலகம் முழுவதும் கார்பரேட் நிறுவனங்களால் அடையாளத்தை இழந்து வரும் எண்ணற்ற கலைஞர்களுக்காகவும் தான் .





















