OTT Platforms : ஓடிடி தளங்களுக்கு வைக்கப்பட்ட செக் பாயிண்ட்... ஆபாச விதிமீறல்களுக்கு முற்றுப்புள்ளி... அனுராக் தாக்கூர் எச்சரிக்கை!
படைப்பாற்றல் என்ற பெயரில் ஓடிடி தளங்களில் அதிகரித்து வரும் அத்துமீறிய நாகரீகமற்ற உள்ளடக்கங்களுக்கு அனுமதி கிடையாது - மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் எச்சரிக்கை
அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் மற்றும் பல ஓடிடி தளங்களின் பயன்பாடு இந்திய அளவில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஓடிடி தளங்களில் ஆபாசமான மொழி பயன்பாடு, தவறான வார்த்தைகள், அநாகரீகமான செயல்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த அத்துமீறல்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அப்படி அவை உறுதிப்படுத்தப்பட்டால் அதை மத்திய அமைச்சகம் ஏற்றுக்கொள்ளாது என்றும் தகுந்த நடவடிக்கை அவர்கள் மீது எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர்.
அதிகரிக்கும் நாகரீகமற்ற உள்ளடக்கங்கள் :
சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் அனுராக் தாகூர் பேசுகையில் " படைப்பாற்றல் என்ற பெயரில் ஆபாசங்களை, தவறான விஷயங்களை பொறுத்துக்கொள்ள முடியாது. ஓடிடி தளங்களில் அதிகரித்து வரும் அத்துமீறிய நாகரீகமற்ற உள்ளடக்கங்கள் குறித்து எழும் புகார்கள் மீது அரசாங்கம் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது' என தெரிவித்துள்ளார்.
புகார்களுக்கு தீர்வு :
மேலும் அவர் பேசுகையில் "இது சார்ந்த விதிகளில் ஏதாவது மாற்றம் செய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் உடனடியாக அமைச்சகம் அதை பரிசீலனை செய்ய தயாராக உள்ளது. ஓடிடி தளங்களுக்கு படைப்பாற்றலை உபயோகிக்க சுதந்திரம் உள்ளது. ஆனால் ஆபாசம், வன்முறை கலந்த படைப்பாற்றலை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவரையில் பெறப்பட்டுள்ள புகார்களில் இருந்து முதல் நிலையில் உள்ள 90 % புகார்களுக்கு தீர்வு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக அசோசியேஷன் லெவலில் இருக்கும் புகார்கள் கவனிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சில நாட்களாக புகார்களின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது. அதையும் அமைச்சகம் தீவிரமாக தீர்வு காண முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றையும் தாண்டி அரசிடம் வரும் புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் அனுராக் தாகூர்.
உயர்நீதிமன்றம் உத்தரவு :
ஓடிடி தளங்களின் உள்ளடக்க கருத்துக்களை முறைப்படுத்த வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. டிஜிட்டல் மீடியா நெறிமுறைகளின் விதிகள் மீறப்பட்டால் மத்திய தகவல் தொழில்நுட்பம் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள்.