9 Years Of Jeeva: கிரிக்கெட்டில் புகுந்து விளையாடும் ஆதிக்க அரசியல்.. 9 ஆண்டுகளை கடந்த ஜீவா படம்..!
சுசிந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ஜீவா திரைப்படம் இன்றுடன் 9 ஆண்டுகளைக் கடந்துள்ளது
![9 Years Of Jeeva: கிரிக்கெட்டில் புகுந்து விளையாடும் ஆதிக்க அரசியல்.. 9 ஆண்டுகளை கடந்த ஜீவா படம்..! vishnu vishal starrer suseenthiran directed jeeva movie completes nine years 9 Years Of Jeeva: கிரிக்கெட்டில் புகுந்து விளையாடும் ஆதிக்க அரசியல்.. 9 ஆண்டுகளை கடந்த ஜீவா படம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/25/a9521b92f3f7cc08b51f2df99aff43a51695664287879572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஜீவா திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் கடந்துள்ளன. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
ஜீவா
கடந்த 2014 ஆம் வருடம் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியானத் திரைப்படம் ஜீவா. விஷ்னு விஷால், ஸ்ரீதிவ்யா, ஜி மாரிமுத்து, சார்லீ உள்ளிட்டவர்கள் நடித்து டி. இமான் இசையமைத்திருந்தார்.
கதை
சின்ன வயதில் இருந்தே தனது அம்மாவை இழந்த ஜீவா( விஷ்ணு விஷால்) அப்பா ( ஜி மாரிமுத்து) வளர்ப்பில் வளர்கிறான். ஜீவா பெரும்பாலான நேரங்களில் தனது பக்கத்து வீட்டில் இருக்கும் அருள் பிரகாசம் ( சார்லி ) வீட்டில் இருக்கிறான். அவர்களும் தங்களது மகனாகவே ஜீவாவை வள்ர்த்து வருகிறார்கள். ஜீவாவின் பள்ளி பருவத்தில் அவனது வீட்டிற்கு அருகில் வந்து சேர்கிறாள் ஜெனி ( ஸ்ரீதிவ்யா) இருவருக்கும் இடையில் காதல் ஏற்படுகிறது. ஒருபக்கம் இந்திய அணிக்காக கிரிக்கெட் ஆட வேண்டும் என்கிற ஆசை மறுபக்கம் காதல் என்று போய்க்கொண்டிருக்கும் ஜீவாவின் காதல் இருவீட்டாருக்கும் தெரிந்து இருவரும் பிரிகிறார்கள்.
கிரிக்கெட்டை விட்டு நல்ல அரசாங்க வேலைக்கு தனது மகன் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஜீவாவின் தந்தை. காதல் தோல்வியில் குடித்து திரியும் ஜீவாவை மீட்க வேறு வழியில்லாமல் அவனை மீண்டும் கிரிக்கெட் விளையாட ஊக்கப்படுத்துகிறார். ஜீவாவின் வாழ்க்கையின் சவாலான கட்டம் தொடங்குகிறது. ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் திறமை இருந்தும் விளையாட்டுத் துறையில் நடக்கும் அரசியலால் என்ன மாதிரியான சவாலை எதிர்கொள்கிறார் என்பதே ஜீவா படத்தின் மீதி கதை.
நிதானமாக கையாளப்பட்ட காட்சிகள்
சுசீந்திரன் இயல்பாக உறவுகளுக்கு இடையில் உன்னதமான தருணங்களை எழுதக் கூடிய ஒரு இயக்குநர். பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் மாரிமுத்துவை ஒரு பாசக்காரத் தந்தையாக இந்தப் படத்தில் பார்க்கலாம். பெரிய அளவிலான ஆடம்பரம் இல்லாமல் உணர்ச்சிகளை நிதானமாக கையாளப்பட்ட காட்சிகளால் நகர்கிறது படம். பெரிய அளவிலான கவனத்தை படம் பெறாததற்கு காரணமும் அதுவென்றே சொல்லலாம். பொதுவாகவே ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமா என்றால் பார்வையாளர்களை எழுச்சிக்கு உள்ளாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது. அந்த சமரசத்தை முடிந்த அளவிற்கு செய்யாமல் இருந்ததே ஜீவா படத்தின் வெற்றியும்.
படத்தில் ஒரு காட்சி : தனக்கு அம்மா இல்லாததால் எப்போது தனது பக்கத்து வீட்டில் இருக்கும் அருள் பிரகாசம் ( சார்லி) வீட்டில் வளர்கிறான் ஜீவா. தனக்கு தேவையானதை எல்லாம் அருள் பிரகாசத்திடம் கேட்டு வாங்கிக் கொள்கிறான் ஜீவா. அதற்கான பணத்தை வீட்டிற்கு வந்ததும் ஜீவாவின் தந்தை ( மாரிமுத்து ) திருப்பிக் கொடுத்தனுப்புவார். ஒரு முறை கிரிக்கெட் விளையாடுவதை கைவிடச் சொல்லி ஜீவாவின் தந்தை சொல்ல அருள் பிரகாசம் ஜீவாவை ஆதரிக்கிறார்.
ஒரு கட்டத்திற்கு மேல் பேச்சு வளர ஜீவாவின் அப்பா, ” என் மகனுக்கு என்ன தேவைன்னு எனக்கி தெரியும் நீங்க இதுல தலையிடாதீங்க “ என்று கோபமாக பேசிவிட்டு வெளியேச் செல்வார். அருள் பிரகாசம் மனமுடைந்து நிற்க பார்வையாளர்களாகிய நமக்கு இந்த காட்சி இன்னும் வாசலைப் பார்த்த மாதிரி காட்டப்படும். சென்ற அதே வேகத்தில் கண்ணில் கண்ணீர் சிந்த வரும் மாரிமுத்து அருள் பிரகாசத்திடம் “என்ன மன்னிச்சுடுங்க சார் , என் பையன் எங்க வீட்ல வளர்ந்ததைவிட உங்க வீட்ல வளர்ந்ததுதான் அதிகம் . உங்ககிட்ட நான் இப்படி பேசியிருக்கக்கூடாது” என்று அவரிடம் மன்னிப்புக் கேட்கும் காட்சியில் நாம் வழக்கமாக பார்த்திராத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் மாரிமுத்து. இப்படி பல நினைவுகள் நிறைந்தது ஜீவா படம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)