Kannappa Movie Review : கண்ணை கட்ட வைக்கும் கண்ணப்பா...முழு திரைப்பட விம்ர்சனம் இதோ
Kannappa Movie Review : பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள கண்ணப்பா படத்தின் முழு விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்

கண்ணப்பா திரைப்பட விமர்சனம்
புராணங்களின் படி 2 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதை கண்ணப்பா. பார்வதிக்கு கொடுத்த வாக்கின்படி காளஹஸ்தியில் சிவன் எழுந்தருளிய வரலாற்றை 3 மணி நேர படமாக சொல்கிறது கண்ணப்பா படம். வேட குலத்தைச் சேர்ந்த திண்ணன் (விஷ்ணு மஞ்சு) சிறு வயதில் தனது நெருங்கிய நண்பன் கடவுளுக்கு பலி கொடுக்கப்படுவதை பார்த்து கடவுள் மீது அவ நம்பிக்கை கோவம் கொண்டு நாத்திகனாக மாறுகிறான். இதே திண்ணன் தனது முன் ஜென்மத்தில் அர்ஜூனனாக பிறந்த சிவனின் மிகப்பெரிய பக்தனாகவும் இருந்தவன். வேட குலத்தவர்கள் பாதுகாத்து வரும் வாயு லிங்கத்தை திருட வருகிறது மற்றொரு இனம. கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் தனது தந்தைக்காக (சரத்குமார் ) அவர்களுடன் போர் செய்கிறான் திண்ணன். இதற்கிடையில் சிவ பக்தரான நெமிலி (ப்ரீத்தி முகுந்தன்) காதலித்து கல்யாணம் செய்கிறார். நாத்திகனாக திண்ணன் சிவனின் கண்களில் ரத்தம் வழிவதை பார்த்து தனது சொந்த கண்களை கொடுத்து கண்ணப்பாவாக சிவனால் பெயர் சூட்டப்படுவதே படத்தின் மீதிக் கதை.
புராண கதையை எந்த விதத்திலும் மறுபரீசீலனை செய்யாமல் 3 மணி நேரத்திற்கு ஒரு நாடகத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள். விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், சரத் குமார், காஜல் அகர்வால், அர்பித் ரங்கா, பிரம்மானந்தம், சப்தகிரி, முகேஷ் ரிஷி, மதுபாலா, ஐஸ்வர்யா பாஸ்கரன், பிரம்மாஜி, தேவராஜ், ரகுபாபு, சிவா பாலாஜி, சம்பத் ராம், லாவி பஜ்னி, சுரேகா வாணி, ப்ரீத்தி முகுந்த் அத்ஹுன் அத்ஹுர் அத்ஹுர் அத்ஹுன் வாணி என படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருத்தருக்கும் காது கிளியும் வகையில் மியூசிக் போட்டு அறிமுக காட்சிகளுக்கே பாதி நேரம் போய்விடுகிறது. இதற்கிடையில் அவ்வப்போது டூ பீஸில் ப்ரீத்தி முகுந்தனுடன் ரொமாண்டிக் பாடல்கள். நம்பகத் தன்மையே இல்லாத போர் காட்சிகள் , பக்கம் பக்கமாக நீளும் வசனங்கள் . நகை கடை விளம்பரத்திற்கு வந்தவர்கள் போல் சிவன் ரூபத்தில் அக்ஷய் குமார், பார்வதி வேடத்தில் காஜல் அகர்வால். ஹை பட்ஜெட்டில் 80 மற்றும் 90 களில் வந்த திருவிளையாடல் பார்த்த மாதிரி இருந்தது கண்ணப்பா. குறைந்தபட்சம் அந்த படங்களில் இருந்த பக்தியையாவது உணர்ச்சிகரமாக கடத்தியிருந்தால் பரவாயில்லை. 3 மணி நேரம் கண்ணை கட்டவைத்துவிட்டது கண்ணப்பா





















