Vishal meets Vijay : மார்க் ஆண்டனி டீசரை வெளியிடுவது யார்? விஜய்க்காக ஸ்கிரிப்ட் ரெடி செய்த விஷால்... சந்திப்பின் போது நடந்த ஸ்வாரஸ்யங்கள்
விஷால் மற்றும் மார்க் ஆண்டனி படக்குழுவினர் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து இன்று மாலை வெளியாக இருக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தின் டீசரை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஷால் நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தினை தயாரித்துள்ளார் 'மினி ஸ்டுடியோஸ்' வினோத் குமார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை அபிநந்தன் மேற்கொள்ள நிர்வாக தயாரிப்பாளராக ஹரிகிருஷ்ணன் பணியாற்றியுள்ளார். மிரட்டலான வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடிக்க ஹீரோயினாக நடிக்கிறார் ரித்து வர்மா.
விஜய்யுடன் நேரில் சந்திப்பு :
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மார்க் ஆண்டனி படத்தின் டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாக உள்ளது என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. அந்த வகையில் நடிகர் விஷால், மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், நிர்வாக தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து படத்தின் டீசரை காண்பித்துள்ளார். சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கியதற்காக விஜய்க்கு நன்றி தெரிவித்த விஷாலை, 'நண்பனுக்காக இதை செய்ய மாட்டேனா' என கூறி நெகிழ்ச்சியடைய செய்து படக்குழுவினரை வாழ்த்தியும் உள்ளார் நடிகர் விஜய். சந்திப்பின் போது விஜய்க்கு படக்குழுவினர் பூங்கொத்து வழங்க, விஷால் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் உணவு வழங்கிய ரசீதை வழங்கியுள்ளார்.
விஜய்யை இயக்கும் விஷால் :
நீண்ட நாட்களாக படம் இயக்க வேண்டும் என்ற ஆசையை 'துப்பறிவாளன் 2 " திரைப்படம் மூலம் நிறைவேற உள்ளது. அதனை தொடர்ந்து படங்களை இயக்க விருப்பம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி விஜய்க்காக இரெண்டு ஸ்க்ரிப்ட் தயார் செய்து வைத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கு நடிகர் விஜய் " வா நண்பா... நான் இருக்கிறேன்... சேர்ந்து பயணிப்போம்" என கூறியதாகவும் கூறப்படுகிறது. நடிகர் விஜய் மற்றும் விஷால் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.
குழப்பத்தில் ரசிகர்கள் :
'தளபதி விஜய் ஃபார் மார்க் ஆண்டனி ' என்ற விஜய் ட்வீட் பார்த்த ரசிகர்கள் இன்று மாலை வெளியாக இருக்கும் மார்க் ஆண்டனி படத்தின் டீசரை வெளியிடுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் ட்விஸ்ட்டாக விஷால் மற்றும் படக்குழுவினர் நடிகர் விஜய்யை சந்தித்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விஜய் டீசரை வெளியிட போகிறாரா அல்லது வேறு ஏதாவது ஒரு திரை பிரபலம் டீசரை வெளியிடுவாரா என குழம்பியுள்ளனர் ரசிகர்கள்.