23 years of Narasimha vs Dhill : ரணகளம் செய்த 'தில்' விக்ரம் - அதிரடி காட்டிய விஜயகாந்தின் 'நரசிம்மா'... ஒரே நாளில் வெளியான இரு வெற்றி படங்கள்!
Narasimha vs Dhill : விஜயகாந்தின் 'நரசிம்மா' மற்றும் விக்ரமின் 'தில்' இரண்டு படங்களுமே 23 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே நாளில் வெளியானதுடன் இருவரின் திரைப்பயணத்திலும் மிக முக்கியமான படங்களாக அமைந்தன.
தமிழ் சினிமாவில் கேப்டன் என அழைக்கப்பட்ட மறைந்த நடிகர் விஜயகாந்த் திரைப்பயணத்தில் கம்பீரத்துக்கு என்றுமே குறை இருந்ததே கிடையாது. தனக்கென ஒரு தனி ஸ்டைல் கொண்ட தனித்துமான நடிகர். போலீஸ் கெட்டப்பையும் விஜயகாந்தையும் என்றுமே பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு அத்தனை படங்களில் நேர்மை தவறாத போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். அப்படி விஜயகாந்த் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'நரசிம்மா'.
மறைந்த இயக்குனர் திருப்பதி சாமி இயக்கத்தில், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கேப்டன் சினி கிரியேஷன்ஸ் கீழ் விஜயகாந்துடன் இஷா கோபிகர், ரகுவரன், நாசர், ஆனந்தராஜ், ராகுல் தேவ், வடிவேலு, தியாகு உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்துக்கு மணி ஷர்மா இசையமைத்து இருந்தார்.
காஷ்மீர் பிரிவினைக்காக போராடும் தீவிரவாதிகள் சில இந்தியாவில் உள்ள பல இடங்களை தகர்க்கவும், முக்கியமான பிரமுகர்கள் சிலரை கொல்லவும் திட்டம் போடுகிறார்கள். அவர்களின் சதித்திட்டத்தை எப்படி அதிரடியாக முறியடிக்கிறார் கடமை தவறாத நேர்மையான அதிகாரியான விஜயகாந்த் என்பது தான் 'நரசிம்மா' படத்தின் கதைக்களம். இப்படத்தின் விறுவிறுப்பான கதைக்களம் பார்வையாளர்களின் கவனத்தை சற்றும் சிதறவிடாமல் கவனம் ஈர்த்தது. வடிவேலு காமெடி, மணிசர்மா இசை இவை இரண்டும் படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது. 'நரசிம்மா' படம் சூப்பர் ஹிட் வெற்றிபெற்றதுடன் விஜயகாந்த் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது.
அதே நாளில் வெளியான மற்றுமொரு சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் தரணி இயக்கத்தில் நடிகர் விக்ரம், லைலா, ஆஷிஷ் வித்யார்த்தி, விவேக் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான தில்லானா 'தில்' திரைப்படம். திறமையான நடிப்பு, அழகான ஆணழகனுக்கான தோற்றம் என அனைத்துமே பிளஸ் பாயிண்ட்டாக அமைந்து இருந்தாலும் விக்ரமுக்கு பெரிய அளவு வாய்ப்புகளும் ரசிகர் கூட்டமும் இல்லாமல் போனது.
ஆனால் அதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விக்ரம் திரைப்பயணத்தில் மிக முக்கியமான டர்னிங் பாய்ண்ட் படமாக அமைந்தது இயக்குநர் பாலாவின் 'சேது' படம். அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த அப்படத்துக்கு பிறகு தன்னை ஒரு முழு ஆக்ஷன் ஹீரோவாக நிலைநிறுத்தி கொள்ள கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொண்டு முறுக்கேறிய உடம்புடன் ரணகளம் செய்து இருந்தார் நடிகர் விக்ரம். அப்படம் மூலம் நட்சத்திர அந்தஸ்தையும் அடைந்தார்.
நேர்வழி தவறாத ஒரு இளைஞன் தன்னுடைய இலக்கை அடையும் பயணத்தில் எதிர்தொண்ட தடைகள் அனைத்தையும் எப்படி தகர்த்து வெற்றி பெற்றான் என்பதை ஸ்வாரஸ்யமான கதைக்களத்துடன் பரபரப்பான திருப்பங்களுடன் விறுவிறுப்பாக திரைக்கதையை அமைத்து ரசிகர்களின் அப்லாஸ் பெற்று பாராட்டு மழையில் நனைந்தது 'தில்' திரைப்படம்.
விஜயகாந்தின் 'நரசிம்மா' மற்றும் விக்ரமின் 'தில்' இரண்டுமே அதிரடி ஆக்ஷன் படங்களாக நேர்மை தவறாத போலீஸ் அதிகாரியாக ஒருவரும் வருங்ககால போலீஸ் அதிகாரியாக வர போராடும் இளைஞனின் பயணமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன் நல்ல பொழுதுபோக்கு படங்களாக வெற்றிபெற்றன. 23 ஆண்டுகளை கடந்தும் இந்த படங்கள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.