விஜயகாந்துக்கு சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்த பிரபல இயக்குனர் SD சபாபதி காலமானார்!
இயக்குனர் சபாபதி தட்சிணாமூர்த்தி, உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடைய முதல் படத்திலேயே, கேப்டன் விஜயகாந்தை வைத்து இயக்கியவர் இயக்குனர் SD சபாபதி. 1992 ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்தை ஹீரோவாக வைத்து இவர் இயக்கிய திரைப்படம் 'பரதன்'. இந்த படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடிகை பானுப்பிரியா நடித்த நிலையில், விஜயகாந்தின் ராவுத்தர் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்தது. சுமார் 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வசூல் சாதனை செய்த இந்த படத்திற்கு, இளையராஜா இசையமைத்திறந்தார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, பிரசாந்த் நடித்த எங்கள் தம்பி, ரம்பா - லிவிங்ஸ்டன் நடிப்பில் வெளியான சுந்தர புருஷன், பிரபுதேவா - அப்பாஸ் இணைந்து நடித்த விஐபி போன்ற படங்களை இயக்கி வெற்றி கொடுத்தார். இதன் பின்னர் 2003 ஆம் ஆண்டு இவர் இயக்கிய புன்னகை பூவே, நாம், ஆகிய படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. கடைசியாக 2011 ஆம் ஆண்டு, தமிழில் 16 என்கிற திரைப்படத்தையும் கன்னடத்தில் ஜாலிபாய் என்கிற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். ஆனால் இந்த படங்களும் அவருக்கு கைகொடுக்காமல் போனது.
திரைப்பட இயக்கம் மட்டும் இன்றி, கதை, திரைக்கதை எழுதுவது, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்தும் அறிந்த மனிதராக இருந்தார் SD சபாபதி. கடந்த சில வருடங்களாகவே உடல் நலம் குன்றி தன்னுடைய சொந்த ஊரான திண்டிவனம் பகுதியில் வசித்து வந்த இயக்குனர் SD சபாபதி, தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவு திரையுலகினர் மட்டும் இன்றி.. ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.