Vijayakanth: “இறுதிவரை மட்டும் அல்ல; இறுதி சடங்கிலும்...” - தமிழுக்காக வாழ்ந்து முடிந்த சகாப்தம் விஜயகாந்த்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமானார்.
விஜயகாந்த் இறுதிச்சடங்கின் போது என்ன செய்ய வேண்டும் என குடும்பத்தினர் அறிவுறுத்தினார்கள் என்பதை அதனை மேற்கொண்ட நபர்கள் தெரிவித்துள்ளனர்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி இரவு போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் சளி,இருமல் மற்றும் சுவாச பிரச்சினையால் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலை 6.10 மணியளவில் அவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டது. அவரது மறைவு செய்தி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
முதலில் தேமுதிக தலைமை அலுவலகத்திலும், பின்னர் தீவுத்திடலிலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டது. தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் விஜயகாந்த் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். சமூக வலைத்தளங்கள் தொடங்கி எங்கு திரும்பினாலும் விஜயகாந்த் மரணம் பற்றிய பேச்சாகத்தான் இருந்தது.
இப்படியான நிலையில் விஜயகாந்த் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் தலைவர்கள் சமாதி போல் நினைவிடம் கட்டப்படும் என விஜயகாந்த் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் விஜயகாந்துக்கு இறுதிச்சடங்குகளை சிவ சுப்பிரமணியன், சிவ ஸ்ரீ தியாகராஜன் ஆகிய இருவரும் மேற்கொண்டனர்.
அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது, “கேப்டன் விஜயகாந்த் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு வைணவம் எனப்படும் பெருமாளுக்கு உண்டான நாமங்களை பாட சொல்லி இறுதி சடங்குகளை மேற்கொள்ள சொல்லியிருந்தார்கள். அதேசமயம் வைணவ சமயத்தில் பாட சொன்ன அனைத்துமே தமிழ் மொழியில் தான் இருக்க வேண்டும் என சொன்னார்கள். அதில் சமஸ்கிருதம், தெலுங்கு மொழி பாடல்கள் இருக்கக்கூடாது என அவரது குடும்பத்தினர் தெரிவித்து விட்டார்கள்.
நாங்களும் அதற்கேற்றாற்படி எம்பெருமாள், சிவபெருமான் போற்றிய பாடல்களும், திருப்பாவை என சொல்லக்கூடிய நாலாயிர திவ்ய பிரபந்தம், தேவாரம், திருவாசகம் படித்து விஜயகாந்தின் இறுதிச்சடங்கை மேற்கொண்டோம். மூதாதையர்களுக்கு என்ன செய்தோமோ அதை பின்பற்றி தான் விஜயகாந்துக்கும் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. திருவாசகத்தில் அடைக்கல பத்து, பட்டினத்தார் பாடல்கள், தேவாரம் படித்தோம். இவை அனைத்துமே முக்தி மோட்சம் சேர வேண்டும் என்பதற்காக பாடப்படுபவை.
அதேசமயம் பிரேமலதா எங்களிடம் பேசும்போது, “என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்ய வேண்டும்” என சொன்னார். என்னதான் விஜயகாந்த் தலைவராக இருந்தாலும், தனி மனிதனாக பார்க்கும்போது அவருக்கென்று ஒரு குடும்பம் உள்ளது. அதனால் சடங்குகளை தெளிவாக செய்ய வேண்டும் என அறிவுறுத்தியபடி செய்து முடித்தோம்” என அவர்கள் தெரிவித்தனர்.