Vijayakanth Death: “என் அப்பாவுக்கு அவர் பிள்ளை; என் அண்ணன் விஜயகாந்த்” - கண்ணீர் மல்க குடும்பத்துடன் அஞ்சலி செலுத்திய பிரபு
Vijayakanth Death: தமிழ் மக்கள், திரையுலகம் என எல்லா இடங்களிலும் அவரை பிடித்தவர்கள் மனதில் என் அருமை நண்பன் கேப்டன் விஜயகாந்த் வாழ்ந்து கொண்டிருப்பார்
அப்பாவின் இறுதி ஊர்வலம் எல்லாம் முடிந்து என்னை திரும்பவும் வீட்டில் வந்து அம்மாவிடம் ஒப்படைத்து விட்டு போனவர் விஜயகாந்த் என நடிகர் பிரபு கண் கலங்கியபடி தெரிவித்துள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி இரவு போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் சளி,இருமல் மற்றும் சுவாச பிரச்சினையால் அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து விஜயகாந்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இப்படியான நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 6.10 மணியளவில் அவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டது.
அவரது மறைவு தமிழ்நாட்டு மக்களிடையே மிகப்பெரிய அளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் வீட்டில் துக்கம் நிகழ்ந்ததை போல விஜயகாந்த் மறைவுக்கு நேரிலும், சமூக வலைத்தளங்களிலும், இருக்கின்ற இடத்திலும் கூட ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சினிமா, அரசியல் இரண்டு களத்திலும் எவராலும் வெறுக்க முடியாத அளவுக்கு தனது அன்பால் கட்டிப்போட்ட விஜயகாந்தை இறுதியாக காண திரைப்பிரபலங்கள், தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
விஜயகாந்த் உடல் இன்று மாலை 5 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. தற்போது அவரது உடல் சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே நடிகர் பிரபு, தனது குடும்பத்தினருடன் வந்து விஜயகாந்த் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “எங்க அப்பா (சிவாஜி கணேசன்) இறந்தப்ப நான் ஊர்ல இல்ல. அவரோட இறுதி ஊர்வலத்துல நான் இருந்து என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் விஜயகாந்த் முன்னாடி நின்று செய்தார். அப்பாவின் இறுதி ஊர்வலம் எல்லாம் முடிந்து என்னை திரும்பவும் வீட்டில் வந்து அம்மாவிடம் ஒப்படைத்து விட்டு போனார்.
ஏனென்றால் அவரும் எங்க குடும்பத்துல சிவாஜிக்கு ஒரு பிள்ளை தான். அந்த வகையில என் அண்ணனுக்கு நான் குடும்பத்துடன் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளேன். தமிழ் மக்கள், திரையுலகம் என எல்லா இடங்களிலும் அவரை பிடித்தவர்கள் மனதில் என் அருமை நண்பன் கேப்டன் விஜயகாந்த் வாழ்ந்து கொண்டிருப்பார் என தெரிவித்து விட்டு சுற்றியிருந்த ரசிகர்கள், தொண்டர்களிடையே “கேப்டன்..கேப்டன்” என கோஷமிட்டார். இது சுற்றியிருப்போரை கண்கலங்க வைத்தது.
மேலும் படிக்க: Vijayakanth LIVE Update: விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி பேழையின் மீது கைவைத்து கண்ணீர் விட்டார் விஜய்