Vijayakanth Birthday: வியப்பை கொடுக்கும் விஜயகாந்தின் தன்னம்பிக்கை..! புருவம் உயரவைக்கும் ஆச்சரியம்..
கருப்பான ரஜினிக்காவது, நகரத்து வாடை, வாட்ட சாட்டமான உடல்வாகு போன்ற அம்சங்கள் இருந்தன. ஆனால் விஜயராஜ் என்ற விஜயகாந்த்திற்கோ, தன்னம்பிக்கை ஒன்றைத்தவிர எல்லாமே பின்னடைவுகள்தான்.
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இன்று தனது 69-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட விஜயகாந்த் தொடர்பான சில தகவல்கள் நம்மை ஆச்சரியமூட்ட வைக்கின்றன.
நமக்குத் தெரிந்ததை சொல்லுவோம் #Hbd
தமிழ்சினிமாவில் ஒரு பின்பற்றுதல் உண்டு. எவ்வளவு பெரிய ஸ்டாரானாலும் தொடர்ந்து சில படங்கள் வழுக்கினால், அம்போவென கைதட்டிவிட்டு அடுத்த நட்சத்திரத்தின் பக்கம் போய் விடுவார்கள் தயாரிப்பாளர்கள். ஆனால் துரதிஷ்டவசமாக தொடர் தோல்வியை கொடுத்தாலும் சிலரை மட்டும் விட்டு போகவேமாட்டார்கள். காரணம் யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்பதைப்போல, வெற்றியை கொடுக்காவிட்டாலும் நஷ்டத்தை ஏற்படுத்தமாட்டார் என்ற உண்மையே அது.
இப்போது தேமுதிக என்ற அரசியல் தலைவராக இருக்கும் நடிகர் விஜயகாந்த், என்றைக்குமே தயாரிப்பாளர்களை அழவிட்டதில்லை. பி அண்ட் சி ஏரியாக்களில் அவருடைய படங்கள் வசூலை போதிய அளவில் ஈட்டிவிடும். எம்ஜிஆரும் சிவாஜியும் இறுதியாய் ஆக்கிரமிருந்த 1970-களில், அவர்களுக்கு பிறகு ரஜினி கமல் ராஜ்ஜியம் ஆரம்பமானது. இருவருமே தனித்தனி ராஜ்ஜியங்களை அமைக்கமுடியவில்லை.
1990-களுக்கு பிறகே கமலும் ரஜினியும் வசூலில் முதல் இரு இடங்களை தீர்மானிக்க முடிந்தது.
காரணம், தமிழ்சினிமாவை பொறுத்தவரை 1980-கள் என்பது, ஏராளமான வசூல் சுல்தான்கள் இருந்த கலப்படமான காலகட்டம்.
ரஜினி கமலைத்தாண்டி மோகன், கார்த்தி, ராமராஜன் சத்யராஜ், பிரபு போன்றோரும் கொடிகட்டி பறந்த நேரம் அது.
இவர்களில் வெள்ளி விழாநாயகன் என பேரே எடுத்தார் படத்துக்கு படம் மைக்கை பிடித்துகொண்டு பாடிய மோகன்.
அப்படிப்பட்ட சூழலில் பாமர மக்களின் கலைஞனாக அவதாரம் எடுத்து விஸ்வரூபம் காட்டியவர் புரட்சிக்கலைஞர் என்று சினிமா பட்டம் பெற்ற விஜயகாந்த்.
சிவப்பு தோல்தான் அழகு என்று தீர்மானிக்கப்பட்ட தமிழ் சினிமாவில், கன்னங்கரேல் தோற்றதுடன் நட்சத்திர கனவோடு மதுரையில் இருந்து சென்னை வந்தபோது அவருக்கிருந்த தன்னம்பிக்கையை நினைத்துப் பார்த்தால் வியப்பாகவே இருக்கும்.
இவனெல்லாம் நடிக்க வந்துட்டான் என்று எத்தனையோ பேர் அவமானப்படுத்தி கிண்டல் செய்தாலும் அதை கொஞ்சமும் காதில் போட்டுக்கொள்ளாமல் திரையில் தன்னை மட்டும் நம்பி முன்னேறியவர்களில் முதன்மையானவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. அதற்கப்புறம் விஜயகாந்த்தான்.
கருப்பான ரஜினிக்காவது, நகரத்து வாடை, வாட்ட சாட்டமான உடல்வாகு போன்ற அம்சங்கள் இருந்தன. ஆனால் விஜயராஜ் என்ற விஜயகாந்துக்கோ, தன்னம்பிக்கை ஒன்றைத்தவிர எல்லாமே பின்னடைவுகள்தான். 1979-ஆம் ஆண்டில் இனிக்கும் இளமை படத்தில் பெண்ணை அலங்கோலமாய் படமெடுத்து பிளாக்மெயில் செய்யும் சோட்டா வில்லனாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகனாக மாறி, 80-களில் அவர் தொடர்ந்து வெற்றிக்கொடியை நாட்டியபோது வியக்காத ஆட்களே கிடையாது..
பெரிதும் பிரபலம் ஆகாத தூரத்து இடிமுழக்கம் படத்தில், ‘’உள்ளம் எல்லாம் தள்ளாடுதே’’ என்ற பாடல் விவிதபாரதியில் அவ்வளவு தெறி ஹிட்.. ரெக்கார்ட் பிளேயர்களிலும் தூள் கிளப்பும். ஆனால் படத்தில் கன்னங்கரேல் விஜயகாந்த் அந்த பாடலுக்கு தோன்றியபோது ஒரு தரப்பு வியந்தது, இன்னொரு தரப்போ பெர்சனாலிட்டியை வைத்து கிண்டலடித்தது.
ஆனால் விஜயகாந்த் என்ற கருப்பு மனிதன் எதற்கும் கலங்கவில்லை. காலம் அந்த வெள்ளை உள்ளம் கொண்ட கருப்பனை கைவிடவில்லை.
அட்ட கருப்பு என்று சொல்லியே கருப்பு விஜயகாந்துடன் நடிக்க அப்போது மறுத்த முன்னணி நடிகைகள் பலர் உண்டு.
விஜயகாந்த் நடிக்க வந்த புதிதில் அவரை காப்பாற்றியது எதுவென்றால் சில பாடல்களைச் சொல்லலாம்.
ஷோபா உடன் நடித்த அகல்விளக்கு என்றொரு படம். அதில் இடம் பெற்ற "ஏதோ நினைவுகள் கனவுகள் மலருதே" பாட்டு.. பட்டிதொட்டியெங்கும் படு ஹிட்.
அதேபோல சட்டம் ஒரு இருட்டறை படத்தின், "தனிமையிலே ஒரு ராகம்" பாட்டு, ஆட்டோ ராஜா படத்தில் நடிகை ரஜினி சர்மாவுடன் பாடும் 'சங்கத்தில் பாடாத கவிதை.. '
சிவப்பு மல்லி படத்தின் எரிமலை எப்படி வெடிக்கும் என்ற பாடலும் இப்படித்தான் விஜயகாந்தை உயிர்பித்து உயிர்ப்பித்து வைத்துவந்தன.
நமக்கு தெரிந்த விஜயகாந்தின் முதல் மெகா ஹிட் திரைப்படம் என்றால் அது 1981-ல் வந்த சட்டம் ஒரு இருட்டறை.
பெற்றோரை பக்கா பிளானோடு கொலை செய்தவர்களை, பதிலுக்கு பக்கா பிளான்களை தீட்டி ஒவ்வொருத்தராய் போட்டுத்தள்ளுகிற விறுவிறுப்பான படம். அட்டகாசமாய் செய்து முடித்தார் விஜயகாந்த். ஹீரோ திரையில் வரும்போதெல்லாம் தியேட்டரில் கிளாப்ஸ் பறக்கிற ரகமான படம் அது.
அந்தப்படம் எந்த அளவுக்கு ஹிட் என்றால் அமிதாப், ஹேமாமாலினி ரஜினி போன்ற டாப் ஸ்டார்களை வைத்து ஹிந்தியில் ரீமேக் செய்கிற அளவுக்கு ஹிட்டோ ஹிட்..
அதன்பிறகு சாட்சி போன்ற படங்களால் அடித்தட்டு மக்களை ஆக்சன் காட்சிகள் மூலம் தன் வசப்படுத்திய விஜயகாந்த், கடுமையாக போராடி முன்னணி நடிகர்களுக்கு இணையாக 80-களின் மத்தியில் மாஸ் கமர்சியல் ஹீரோ என்ற அந்தஸ்த்தை பிடித்தவர்.
நடிக்க வந்த சில ஆண்டுகளில் கிராமப்புறத்து கதாநாயகராக நடித்து வெற்றிகளை குவித்தவர் விஜயகாந்த். வைதேகி காத்திருந்தாள் அம்மன் கோவில் கிழக்காலே போன்ற படங்கள் எல்லாம் இந்த ரகமே.
ஆனால் திரைப்படக் கல்லூரி மாணவர்களை வைத்து போலீஸ் அதிகாரியாக அவதாரமெடுத்த ஊமை விழிகள் படம் விஜயகாந்த்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்றது. அதன் பிறகு காவல்துறை அதிகாரி வேடம், புலனாய்வு, பாகிஸ்தான் தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடுவது என மாற்றம் கண்டுபோனது. புலன்விசாரணை, ஆனஸ்ட்ராஜ்,சேதுபதி ஐபிஎஸ் மாநகர காவல்.. என அது ஒரு பெரிய பட்டியல். படம் வெற்றியோ தோல்வியோ ஆரம்பம் முதலே எந்த காலத்திலும் விஜயகாந்த் துவண்டு போனதே இல்லை.
சாமான்யனாய் நடித்து வெற்றிகரமாய் ஜொலித்தனால்தான் முன்னணி கதாநாயகனாக ஒரே ஆண்டில் 18 படங்களை வெளிவரச்செய்து சாதனை படைக்கும் அளவுக்கு இருந்தது அவரது திரைப்பயண வேகம்.
வைதேகி காத்திருந்தாள், அம்மன்கோவில் கிழக்காலே, கேப்டன் பிரபாகன், வானத்தைபோல போன்ற படங்களின் பிரமாண்டமான வெற்றியின் முன், இன்றைய காலத்தில் வர்த்தகத்திற்காக கட்டமைப்பட்ட விளம்பர பின்னணி கொண்ட வெற்றிகள் நெருங்க முடியுமா என்பது சந்தேகமே. சினிமா உலகில், மற்ற இரண்டாம் கலைஞர்களுக்கும் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதில் தனி அக்கறை காட்டியவர்.
அற்புதமான திறமைகள் இருந்தும் கைகொடுத்து ஆதரிக்க ஆள் இல்லாமல் தத்தளித்த நவீன சிந்தனைகொண்ட இளைஞர்களுக்கு, ஊமைவிழிகள் படத்தின் மூலம் பெருங்கதவை திறந்துவிட்ட நல்ல மனதுக்காரர்.
அவரால் அறிமுகப்படுத்தப்பட்டு, வாய்ப்பு வழங்கப்பட்டு பின்னாளில் புகழின் உச்சியை எட்டிய நடிகர், நடிகை, நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பட்டியல் மிகப்பெரியது. இன்னொரு ஆச்சர்யமான விஷயம், பல முன்னணி நடிகைகள் முதன் முதலாய் சொந்தப்படம் எடுக்கும்போது நாடியது விஜயகாந்தைத்தான். வடநாட்டிலிருந்து நீண்டநாளைக்கு பிறகு திடீரென தமிழ் சினிமா மீது நடிகை ஜெயப்பிரதா கண் வைத்தபோது, ரஜினியையோ கமலையோ கேட்கவில்லை.
தமிழக அரசியல் களத்தை சுற்றிப் பின்னப்பட்ட ஏழை ஜாதி படத்திற்காக விஜயகாந்தைத்தான் தேர்ந்தெடுத்தார். பெரும் பரபரப்புடன் ஓடி அந்த படம் வசூலை வாரி குவித்தது. நினைத்தபடியே ஜெயப்பிரதா வெற்றியும் கண்டார். ஒரு முன்னணி நடிகரின் ரசிகர்கள் அவரை தாறுமாறாக கொண்டாடினாலும் அவர்களே விருப்பப்பட்டு திரும்பத்திரும்ப பார்க்கிற படங்களாக ஒரு சில படங்கள் மட்டுமே அமையும். விஜய்க்கு கில்லி அஜித்துக்கு தீனா விக்ரமுக்கு சாமி சூர்யாவுக்கு சிங்கம் என்பதுபோல் விஜயகாந்துக்கு ரமணா படம். படம்முழுக்க ஆக்சனை காட்டுவதை தவிர்த்துவிட்டு அற்புதமான மற்றும் விறுவிறுப்பான திரைக்கதைக்குள் அவ்வளவு கச்சிதமாக பொருந்திப் போனார் விஜயகாந்த்.
சினிமாவைத் தவிர்த்து சமூகத்தொண்டு அரசியல் ஆகிய இரண்டிலும் விஜயகாந்த் முடிந்தவரை சாதனை படைத்தார் என்று சொல்லலாம். ஆண்டாண்டு காலமாய் கடனில் தத்தளித்த தென்னிந்தியநடிகர் சங்கத்தை அதனிலிருந்து மீட்டது விஜயகாந்தின் செயல் திறனுக்கு என்றைக்கும் ஒரு அழிக்கமுடியாத சாட்சி. மற்றவர்களின் பசியாற்றுவதில் அவருக்கிருந்த தாயுள்ளத்தை 80' களிலேயே அவரை கூர்ந்து கவனித்தவர்களுக்கு நன்கு தெரியும்.
கல்விக்காக ஏங்கியவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் ஆகியோருக்கு உதவுவதற்காக அவர் 30 ஆண்டுகளுக்கு முன்பே அவர் நீட்டிய கரங்கள், வியக்கத்தக்கவை. அப்போதெல்லாம் அவர் அரசியலுக்கு வரவில்லை என்பது நினைத்துப் பார்க்கவேண்டிய ஒன்று. அரசியல் கட்சியை ஆரம்பித்து தோற்றுப்போன ஏராளமான தமிழக நட்சத்திரங்கள் மத்தியில், எம்ஜிஆருக்கு பிறகு கட்சிக் கொடியை தனது படங்களில் காட்டி வெற்றிகண்ட ஒரே நட்சத்திரமும் விஜயகாந்த்தான்.
ஒரு கட்சியை தொடங்கி, கலைஞர், ஜெயலலிதா அவர்கள் என்ற இருபெரும் ஆளுமைகளுக்கு இடையே நடைபோட்ட விதம் அலாதியானது. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற முக்கிய பொறுப்புவரை விஜயகாந்த் எட்டிய வேகம், தமிழக அரசியலில் ஒரு விறுவிறுப்பான வரலாறு.
2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக. தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார் விஜயகாந்த். தமிழகத்தில் பாஜக தோல்வி, ஆனால் மத்தியில் வெற்றி. மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். அப்போது விஜயகாந்த டெல்லிக்கு போய் மோடியை பார்க்கிறார். மோடி ஓடிவந்து விஜயகாந்தை வாஞ்சையோடு கட்டிப்பிடிப்பார் பாருங்கள். வெற்றியோ தோல்வியோ தன்னை நம்பினால் விஜயகாந்த் எப்படி உழைப்பார் என்பதை மோடி புரிந்துகொண்டு நன்றி செலுத்தியவிதம் இன்றளவும் மறக்கமுடியாதது. கம்பீர குரல் வளத்தால் சினிமாவிலும் அரசியல் மேடைகளிலும் வலம் வந்த அவருக்கு காலம் செய்த கோலம் உடல் நலம் விஷயத்தில் வேறுமாதிரியாக விளையாடிவிட்டது..
விரைவில், பூரண நலம் பெற்று பழைய பன்னீர் செல்வமாய்.. விஜயகாந்தாய் வரவேண்டும்.. அபரிதமான அன்பு கொண்டவர்களால் கேப்டன் என்றழைக்கப்படும் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு 69-வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
- ஏழுமலை வெங்கடேசன்