Kishore : போலியா இருந்தா மக்கள் கண்டுபிடிச்சிருவாங்க..விஜய் அரசியல் வருகை குறித்து விடுதலை நடிகர் கிஷோர்
பேரும் புகழும் ஏற்கனவே இருந்தும் மக்களுக்கு சேவை செய்ய விஜய் அரசியலுக்கு வருவதை நாம் வரவேற்க வேண்டும் என்று நடிகர் கிஷோர் தெரிவித்துள்ளார்
விஜய்
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வரும் 2026 ஆம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறது. தவெகவின் முதல் மாநில மாநாட்டில் விஜயின் உரை தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்த மாநாட்டில் ஆளும் கட்சியான திமுக வை விஜய் நேரடியாக விமர்சித்தார். ஊழல் மலிந்த திராவிட மாடல் அரசு என விஜய் குறிப்பிட்டார். விஜயின் முதல் கட்சி மாநாட்டைத் தொடர்ந்து அவர் மீது பல அரசியல் தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்தார்கள். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயின் பேச்சை விமர்சித்து பல கருத்துக்களை வெளிப்படுத்தினார். திரையுலகைப் பொறுத்தவரை விஜய்க்கு சூர்யா முதல் சிவகார்த்திகேயன் வரை பலர் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளார்கள்.
விடுதலை 2 டிரைலர்
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை 2 படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகியது. இந்த டிரைலரின் இறுதியில் வரும் வசனம் பலரது கவனத்தை ஈர்த்தது. " தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும்தான் உருவாக்குவார்கள். அது முன்னேற்றத்திற்கு வழைவகுக்காது " என்கிற வசனம் விஜயை குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ளதாக பலர் சமூக வலைதளத்தில் தெரிவித்தார்கள். விடுதலை 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் கிஷோர் விஜயின் அரசியல் வருகை குறித்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்
விஜய் பற்றி நடிகர் கிஷோர்
" நமக்கு தெரிந்த கடவுள் மனிதன் தான். தெரியாத கடவுளை நம்புவதை விட தெரிந்த மனிதனை நம்புவது மேல். அதனால் ஒருத்தர் ஒரு நல்ல விஷயத்தை சொல்கிறார் என்றால் நம்பிதான் ஆகவேண்டும். அந்த நம்பிக்கையை பாதுகாக்க வேண்டியது அவர் கையில்தான் இருக்கிறது. பொது வாழ்க்கைக்கு வருவது என்பது பணத்திற்காகவோ அதிகாரத்திற்காகவே வருவது இல்லை. அது மக்களுக்கு சேவை செய்வதற்காக வருவது. அதனால் ஒருவர் மக்களுக்கு சேவை செய்ய வருகிறார் என்றால் அவரை நாம் நம்பவேண்டும். அரசியலில் இருப்பவர் தான் வரவேண்டும் என்பது இல்லை ஒரு நடிகரும் வரலாம். நடிகன் என்பவன் ஒரு கலைஞன். ஒரு கலைஞன் ரொம்ப சென்சிட்டிவானவர். ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும்போது அந்த கதாபாத்திரத்தின் உணர்வுகளை உள்வாங்கி நடிப்பது ரொம்ப முக்கியம் . அப்படி இல்லாமல் பொய்யாக நடித்தால் மக்கள் கண்டுபிடித்து விடுவார்கள். அதனால் ஒரு கலைஞன் அரசியலுக்கு வந்தால் அவர் மக்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்வார் என்று நான் நம்புகிறேன். புதியவர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்கள் பணம் புகழுக்காக வருகிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் விஜய்க்கு இது எல்லாமே கிடைத்திருக்கிறது. அதனால் அவர் பணம் புகழுக்காக அரசியலுக்கு வரவில்லை என்று நான் நம்புகிறேன்" என கிஷோர் தெரிவித்துள்ளார்.