HBD Vijayakumar : பாலமுருகன் டூ மாமன்னன்... தமிழ் சினிமாவின் ‘நாட்டாமை’ விஜயகுமாருக்கு இன்று பிறந்தநாள்...!
HBD Vijayakumar : துணை நடிகர், செகண்ட் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என நடிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்த நடிகர் விஜயகுமார் பிறந்தநாள் இன்று.
தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக பல பரிணாமங்களை எடுத்து இன்று வரை கோலோச்சிய நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். அவர் நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என சொல்லும் அளவுக்கு மிக சிறந்த குணச்சித்திர நடிகராக தனது தனித்துமான கம்பீரமான நடிப்பால் திரை ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத ஒரு இடத்தை பிடித்த விஜயகுமார் இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சிறப்பாக தொடரும் திரைப்பயணம் :
குழந்தை நட்சத்திரமாக பாலமுருகன் வேடமிட்டு 1943ம் ஆண்டு வெளியான 'ஸ்ரீவள்ளி' படத்தில் தொடங்கிய விஜயகுமாரின் திரைப்பயணம் இன்று வரை மிகவும் வெற்றிகரமாக தொடர்கிறது. அதை தொடர்ந்து பல படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜயகுமாருக்கு அடித்தது ஜாக்பாட். இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் இயக்கத்தில் 'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் ஹீரோவானார். மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த அப்படம் விஜயகுமாரின் திரை வாழ்க்கையிலும் மிக முக்கியமான படமாக அமைந்தது.
சரி ஹீரோவாகிவிட்டேன் இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என வைராக்கியம் எல்லாம் இல்லாமல் துணை நடிகர், செகண்ட் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என நடிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்கள் அனைத்தையுமே சிறப்பாக செய்தவர். பெரிய ஹீரோக்களின் படங்களில் துணை நடிகராக நடித்தால் நம்முடைய மார்க்கெட் போய்விடும் என்ற செண்டிமெண்ட் எல்லாம் அவர் பார்த்ததே இல்லை. சிவகுமார், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அந்த காலகட்டத்து ஹீரோக்களின் பெரும்பாலான படங்களில் துணை ஹீரோவாக விஜயகுமார் தான் இருப்பார்.
அன்புள்ள அப்பா :
ஹீரோவாக அவர் ஜொலித்த சமயத்தில் கூட இந்த பாலிசியை ஃபாலோ செய்தார் என்பது தான் விஜயகுமாரின் ஸ்பெஷலிட்டி. 80களின் இறுதியில் ஒரு மரியாதைக்குரிய அப்பாவாக பல படங்களை அலங்கரித்தார். அதிலும் அக்னி நட்சத்திரம் திரைப்படம் நம்பர் ஒன் ரகம். அதன் வழியே பின்தொடர்ந்து கீதாஞ்சலி, பணக்காரன், சத்ரியன், நாட்டாமை போன்ற படங்கள்.
பாசக்கார அண்ணன் :
பாசமலர் சிவாஜி கணேசன் - சாவித்திரிக்கு அடுத்த இடத்தில் அண்ணன்- தங்கை பாசம் என்றால் அது கிழக்கு சீமையிலே மாயாண்டி தேவர் - விருமாயி தான். அசத்தும் நடிப்பால் அனைவரையும் அண்ணன் பாசத்துக்காக ஏங்க வைத்த விஜயகுமாருக்கு தமிழக அரசு சிறப்பு விருது வழங்கி கௌரவித்தது.
கே.எஸ். ரவிக்குமார் - விஜயகுமார் காம்போ என்றுமே ஒரு சூப்பர் ஹிட் காம்போ. அந்த வகையில் 'நாட்டமை' திரைப்படத்தில் அரை மணி நேரமே படத்தில் தோன்றி இருந்தாலும் நியாயம் தர்மத்தை உயிருக்கு மேலாக போற்றும் நாட்டாமையாக அவர் தோன்றிய காட்சிகள் படத்தையே தூக்கி நிறுத்தியது. இன்று வரை நாட்டாமை என்ற பெயர் அவருக்கு நிலைத்து இருக்க அவரின் கனகச்சிதமான நடிப்பே காரணம். அந்த வரிசையில் இதே கூட்டணியின் 'நட்புக்காக' திரைப்படமும் சிறப்பான ஒரு வெற்றி படமாக அமைந்தது.
அந்தி மந்தாரை திரைப்படம் அவரின் நடிப்புக்கு தீனிபோட்ட மற்றுமொரு சிறந்த திரைப்படமாக சிறப்பு விருதை பெற்று தந்தது. சங்கமம், ஜோடி, குஷி, ஆனந்தம், முதல்வன், சேரன் பாண்டியன், எஜமான், அமரன், உழைப்பாளி, செந்தமிழ் பாட்டு, தாய்மாமன், பாட்ஷா, இப்படி அடுக்கி கொண்டே போகலாம். கடைசியாக வெளியான மாமன்னன் படத்தில் கூட சில காட்சிகள் தோன்றியிருப்பார். இன்றும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கௌரவ கதாபாத்திரங்களில் இயங்கி வரும் விஜயகுமார் பரிபூரணமான ஆயுளும், ஆரோக்கியமும் நிறைந்து வாழ வாழ்த்துக்கள்.