Vasantha Malaigai: ஏன் 'வசந்த மாளிகை' இன்றும் கொண்டாடப்படுகிறது? மூன்றாவது முறையாக ரீ ரிலீஸ்..
தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காதல் காவியமாக கொண்டாடப்படும் வசந்த மாளிகை மீண்டும் ஜூலை 21ம் தேதி தமிழகமெங்கும் மேம்படுத்தபட்ட டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் ஒரு முறை ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இயக்குநர் பிரகாஷ் இயக்கத்தில் 1971-ஆம் ஆண்டு அக்கினேனி நாகேஸ்வரராவ், வாணிஸ்ரீ நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் 'பிரேம நகர்'. மாபெரும் வெற்றி படமாக அமைந்த அப்படம் தமிழில் காதல் காவியமாக வெளியாக திட்டமிடப்பட்டது. அது தான் 1972-ஆம் ஆண்டு வெளியான 'வசந்த மாளிகை' திரைப்படம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஜோடியாக வாணிஸ்ரீ நடிக்க தெலுங்கில் இசையமைத்த கே.வி. மகாதேவனே தமிழிலும் இசையமைத்தார்.
தாய் பாசம் இல்லாத ஒரு ஜமீன்தாரிணியின் மகன் நல்ல இதயம் கொண்டவராக இருந்தாலும் குடி ஒன்றையே வாழ்க்கையின் ஒரே லட்சியமாக வைத்து வாழ்ந்து வரும் கதாபாத்திரமாக சிவாஜி கணேசன். அவரை ஏன் நடிகர் திலகம் என இந்த தமிழ் சினிமா கொண்டாடுகிறது என்பதற்கு உதாரணமாக அமைந்த படம் வசந்த மாளிகை. தனது மாளிகைக்கு வேலைக்கு சேரும் அழகான யுவதியாக வாணிஸ்ரீ. கவர்ச்சியும், நேர்மையும் ஒன்றே சேர்ந்த உருவமாக தனது சுயமரியாதையை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காத ஒரு கதாபாத்திரமாக நடித்திருந்தார். இளைய ஜமீன்தாரை திருத்தி நற்பாதைக்கு கொண்டு வருவதோடு அவரின் மனதையும் கவர்ந்துவிடுகிறார். அந்த உள்ளம் கவர் கள்ளிக்காக அழகான மாளிகை ஒன்றை எழுப்புகிறான் நாயகன் அதுதான் வசந்த மாளிகை.
ஜமீன்தாருக்கு ஏழை பெண் மீது காதல் வந்தால் அதை அவ்வளவு எளிதில் சேர்த்து விடுவார்களா என்ன? மனதை கவர்ந்தவளை சதியின் சூழ்ச்சியால் சந்தேகிக்க அதை தாங்கிக் கொள்ள முடியாத நாயகி நாயகனை பிரிகிறாள். பிரிவை தாங்க இயலாத நாயகன் நோய் படுக்கையில் விழ விதி அவர்களை மீண்டும் ஒன்று சேர்க்கிறது. முதலில் கிளைமாக்ஸ் காட்சியில் சிவாஜி கணேசன் இறப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டு வெளியானது. ரசிகர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதால் நாயகனும் நாயகியும் ஒன்று இணையாவது போல காட்சிப்படுத்தப்பட்டது. மாபெரும் வெற்றி படமாக அமைந்த இப்படம் 200 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி 1 கோடி ரூபாய் வரை அந்த காலகட்டத்திலேயே வசூல் செய்து சாதனை படைத்தது.
படத்தின் வெற்றிக்கு பெரும் பக்கபலமாய் அமைந்தது கே.வி. மகாதேவனின் பாடல்கள். குடிமகனே, யாருக்காக இது யாருக்காக, மயக்கமென்ன, கலைமகள் கைப்பொருளே, ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன், அடியம்மா ராசாத்தி, இரண்டு மனம் வேண்டும் என அனைத்து பாடல்களுமே ஹிட் பாடல்கள்.
சிவாஜி கணேசன் அசாதாரணமான நடிப்பு, வசனங்கள், காதல் காட்சிகள், ஸ்டைல் என அனைத்திலும் அசத்தியிருப்பார். அவருக்கு சரிசமமாக ஈடு கொடுத்த வாணிஸ்ரீயின் நடிப்பும் அபாரம்.
பொன்விழா கண்ட வசந்த மாளிகை 2013ம் ஆண்டு மற்றும் 2019ம் ஆண்டு டிஜிட்டலில் தொழில்நுட்பத்தில் மேம்படுத்தி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காதல் காவியமாக கொண்டாடப்படும் வசந்த மாளிகை மீண்டும் ஜூலை 21ம் தேதி தமிழகமெங்கும் மேம்படுத்தபட்ட டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் ஒரு முறை ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஒரு படத்தை ஒரு முறை அல்ல மூன்று முறை ரீ ரிலீஸ் செய்யப்படும் ஒரே படம் 'வசந்த மாளிகை' தான் என்பது பெருமைக்குரிய விஷயம். ஏற்கனவே ரீ ரிலீஸ் செய்யப்பட்ட போதும் நல்ல லாபத்தை இப்படம் ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.