Valentine's Day Special | ‛வீட்டை விட்டு வந்துட்டேன்... வெளியே வா...’ அதிகாலை போனில் அலறிப்போனேன்; மதன்பாப் சொல்லும் காதல் ரீவைண்ட்!
‛இன்று இரவுக்குள் உங்கள் மனைவி ஆக வேண்டும்... இல்லையென்றால் உலகம் தவறாக பேசும்’ என்று என் மனைவி கூறினார்.
![Valentine's Day Special | ‛வீட்டை விட்டு வந்துட்டேன்... வெளியே வா...’ அதிகாலை போனில் அலறிப்போனேன்; மதன்பாப் சொல்லும் காதல் ரீவைண்ட்! Valentine's Day Special, Actor Madhan Bob sharing his romantic experiences Valentine's Day Special | ‛வீட்டை விட்டு வந்துட்டேன்... வெளியே வா...’ அதிகாலை போனில் அலறிப்போனேன்; மதன்பாப் சொல்லும் காதல் ரீவைண்ட்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/14/c1f9246c55a386dc495ff52de9b23d3a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மனிதனுக்கு சிரிப்பும் அடையாளம் அடையாளம் என்பார்கள். நாம் பார்க்கவிருப்பவருக்கு சிரிப்பு மட்டுமே அடையாளம். ஆனால், அது மட்டுமே அவரது அடையாளம் அல்ல. கித்தாரிஸ்ட், பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பல திறமைகளை கொண்டவர் மதன் பாப். காதலர் தினமான இன்று பல பிரபலங்களின் காதல் அனுபவங்களை திரும்பிப் பார்க்க முன்வந்தோம். இதோ ஒரு பேட்டியில் மதன் பாப், தனது காதல் போராட்டத்தை கூறுகிறார்.
‛‛என் மனைவி நல்ல பாடகி. நான் கித்தாரிஸ்ட். ராமன் என்பவரின் கச்சேரி, தூர்தர்ஷனில். நாங்கள் அனைவரும் அவருக்காக சென்றோம். ஊட்டியில் ஜாலியா இருந்தோம். நான் கலகலப்பா- பேசுவேன். என்னை அவங்களுக்கு பிடிச்சிருச்சு. அதற்கு முன் என் மனைவியை சந்திருந்தேன். ஆனால், நெருக்கம் இல்லை. ஊட்டியில் கேத்தியில் நடந்த கச்சேரியில் அவரை பிடிக்க ஆரம்பித்தது.
‛டார்லிங்... டார்லிங்... ஐ லவ் யூ...’ பாடல் பாடினார். அந்த பாடல் கேட்கும் போது எதுவும் தெரியவதில்லை. அங்கிருந்து ஊட்டியில் இருந்து இறங்கும் போது, வெறுமையாக தோன்றியது. வீட்டில் அவரது எண் இருந்தது. போய் தேடலாம் என்று போய் பார்த்தால் வீட்டில் எல்லாம் வெள்ளையடித்திருந்தார்கள். அவரும் அதே ஃபீலிங் அனுபவித்துள்ளார் என்பது பிந்நாளில் இருந்தது. பின்னாளில் பணம் ஒன்று கொடுப்பதற்காக அவர் வீட்டிற்கு சென்றேன், அப்போது அவருக்கு கித்தார் கற்றுத்தர அவரது தாயார் சொன்னார். அப்போது எங்களுக்குள் நெருக்கம் அதிகரித்தது.
என் வீட்டில் வந்து பெண் கேட்குமாறு என் மனைவி கூறினார். அவர் வீட்டிற்கு போனேன், கிருஷ்ணஜெயந்திக்கு தயாராகிக் கொண்டிருந்தது வீடு. அவரது தாயாரிடம் சென்று, உங்கள் மகளை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறுகிறேன். அவங்க வீட்டில் ரொம்ப டென்ஷன் ஆகிட்டாங்க. அவங்க அக்காவுக்கே அப்போ திருமணம் ஆகவில்லை. கோபித்துக் கொண்டதால் வெளியேறிவிட்டேன்.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலை ஒரு போன் வந்தது. எடுத்தால், என் மனைவி, ‛வீ்ட்டை விட்டு வெளியே வந்துட்டேன்... வாங்க’ என்றார். அலறி அடித்து போனேன். சரி, அவரை சமரசம் செய்து வீட்டுக்கு அனுப்பலாம் என அழைத்துச் சென்ற போது, என்னை வீட்டில் அடித்து கொள்வார்கள் என்றார் என் மனைவி. அப்படியே யூ டேர்ன் அடித்தேன். நம்மை நம்பி வந்த பெண், நமக்காக அடி வாங்க வேண்டுமா என்று, மனதை மாற்றி, ஹாஸ்டலில் சேர்க்க முடிவு செய்தேன்.
‛இன்று இரவுக்குள் உங்கள் மனைவி ஆக வேண்டும்... இல்லையென்றால் உலகம் தவறாக பேசும்’ என்று என் மனைவி கூறினார். அங்கே இங்கே பணத்தை சேர்த்து தாலியை வாங்கிவிட்டேன். இப்போ என் வீட்டில் போய் சொல்ல வேண்டும். என் அப்பாவிடம் போய், ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறினேன். சரிடா... பார்க்கலாம் என்றார். இல்லப்பா... நாளைக்கு கல்யாணம் என்றேன். அவர் அதிர்ந்து போனார். சரி இருடா பேசிக்கலாம் என அவர் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வரவில்லை.
யாரும் வேண்டாம் என நேரா திருத்தணி போய்விட்டோம். வழிநடத்த யாரும் இல்லை. அங்கே போய் குருக்களிடம் கேட்டால், விதிமுறைகளை கூறி அதை செய்து வாருங்கள், 30 நாளில் திருமணம் செய்துவிடலாம் என்று கூறினார்கள். ‛அட போங்கய்யா...’ என அடுத்த முயற்சிக்கு இறங்கினேன். அதன் பின் பதிவு திருமணம் செய்தோம். உடன் வந்தவர்களுக்கு செங்கல்பட்டில் விருந்து வைத்தேன். மதுரையில் ஒய்ஜி நாடகம். ரயில் சிரமப்பட்டு போய், அந்த வேலையை முடித்தோம். அதன் பின், அங்கிருந்து நேரா கொடைக்கானல் கிளம்பினோம்.
‛அமைதியான நதியினிலே ஓடம்...’ என்ற பாடலை எங்கள் டூயட்டாக மாறி மாறி பாடிக்கொள்வோம். அதன் பின் எங்கள் வீட்டில் அழைத்தார்கள். பின், என் அப்பாவுக்கு பிடித்த மருமகளாக என் மனைவி மாறினார். ஆனால், அவர் வீட்டில் இறங்கி வர கொஞ்சம் நேரம் ஆனாது. அவளது மாமா, எனக்கு சப்போர்ட் செய்தார். நானும் அந்த அளவிற்கு அயோக்கியன் இல்லையே...! ’’ என ஜாலியாக பேசி முடித்தார் மதன்பாப்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)