Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
Chennai Schools Colleges Holiday (03-12-2025): காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தொடர் மழை பெய்துவரும் நிலையில், சென்னையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக, சென்னையில் நாளை(03.12.25) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே மையம் கொண்டுள்ள நிலையில், தொடர் மழை பெய்து வருகிறது. இதையடுத்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக் கடலில் உருவான ‘டிட்வா‘ புயல், தமிழ்நாடு நோக்கி நகர்ந்தது. மேலும், தமிழ்நாட்டை நெருங்கம்போது, அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, பின்னர் சென்னைக்கு அருகே வந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழந்து, தற்போது சென்னைக்கு 60 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது 12 மணி நேரம் வரை அதே நிலையில் இருந்து, பின்னர் மேலும் வலுவிழந்து, சென்னை-புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது.
சென்னைக்கு இன்று விடுக்கப்பட்ட ஆரஞ்சு அலெர்ட்
இந்நிலையில், சென்னைக்கு அருகே நிலைகொண்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, இன்று 5 மாவட்டங்களுக்கும், நாளை 3 மாவட்டங்களுக்கும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை அடங்கும்.
சென்னைக்கு நாளை ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்படவில்லை என்றாலும், மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
இந்த சூழலில், சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நாளையும் மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















