VALIMAI UPDATE | அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ் - விரைவில் வலிமை படத்தின் ஃபஸ்ட்லுக்?
சமீபத்தில் கூட கோவில் பூசாரி ஒருவரிடம் “வலிமை அப்டேட் கொடுங்க ஐயா” என அஜித் ரசிகர்கள் கேட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது
"யாராவது வலிமை அப்டேட் கொடுங்கபானு “ சோஷியல் மீடியாவை ஓராண்டுக்கு மேலாக அதகளப்படுத்தி வருகிறார்கள் அஜித் ரசிகர்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு ஹெச்.வினோத், அஜித் குமார் கூட்டணியில் வெளியான நேர்க்கொண்ட பார்வை படத்தின் போதே இந்த கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து முதற்கட்ட படப்பிடிப்பை நடத்திய படக்குழு, படம் குறித்த எந்த அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஒரு படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னதாகவே படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் அல்லது மோஷன் போஸ்டர்கள் வெளியாகி அவரது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை எகிற செய்யும் ஆனால் வலிமை படத்தின் தலைப்பை தவிற வேறு எந்த ஒரு புரமோஷன் வேலைகளிலும் படக்குழு இறங்கவில்லை. கொரோனா ஊரடங்கு காரணமாக படமும் குறித்த தேதியில் வெளியாகவில்லை. இதனால் உற்சாகமிழந்த ரசிகர்கள், வலிமை அப்டேட் குறித்த கேள்வியை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் முன்வைத்து வருகின்றனர். இந்த ஆர்வத்தை கண்ட இசையமைப்பாளர் யுவன், படத்தில் ஒரு அம்மா செண்டிமெண்ட் பாடல் இடம்பெற உள்ளதாக தெரிவித்தார். இருந்தாலும் அது ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. சமீபத்தில் கூட கோவில் பூசாரி ஒருவரிடம் “வலிமை அப்டேட் கொடுங்க ஐயா” என அஜித் ரசிகர்கள் கேட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
இந்நிலையில் ஒரு வழியாக ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியை வெளியிட வலிமை படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற ஜூலை 15 ஆம் தேதி வலிமை படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்களை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக அஜித் மற்றும் ஹெச்.வினோத் கூட்டணியில் உருவான நேர்கொண்ட பார்வை படத்தில் ஃபஸ்ட்லுக்கும் ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்த செண்டிமென்டின் காரணமாகத்தான் மீண்டும் அதே தேதியை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வெளியாகியிருக்கும் இந்த தகவல் அஜித் ரசிகர்களை நிம்மதி பெருமூச்சடைய செய்துள்ளது.
வலிமை படம் இந்திய சினிமாவின் பிரபலங்களை ஒன்றினைத்து உருவாகி வருகிறது. வலிமை படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.தற்போது வெளியாக உள்ள மோஷன் போஸ்டரில் யுவனின் இசை மிரட்டலாக இடம்பெற உள்ளதாம் . இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரோஷி நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகை சேர்ந்த கார்த்திகேயா மிரட்டல் வில்லனாக நடித்துள்ளார். படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் , வெளிநாட்டில் எடுக்க வேண்டிய ஒரே ஒரு பிரம்மாண்ட சண்டைக்காட்சிகள் மட்டும் மீதமுள்ளதாம். அதையும் முடித்துவிட்டால் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடுவார்கள்.