52 ஆண்டுகளுக்கு பிறகும் தீரா காதல்; மனைவிக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்த இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்!
திருமணமாகி 52 ஆண்டுகள் கடந்த நிலையில் தனது காதல் மனைவிக்கு இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் பிஎம்டபிள்யூ கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் அவள் ஒரு பச்சை குழந்தை படம் மூலமாக சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் எஸ் ஏ சந்திரசேகர் . தென்னிந்திய சினிமாவில் 70க்கும் அதிகமான படங்களை இயக்கியுள்ளார். ஏராளமான படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். இவரது பெரும்பாலான படைப்புகள் சமூக கருத்துக்களை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
எஸ் ஏ சந்திரசேகர் படைப்புகள்:
சட்டம் ஒரு இருட்டறை, சாட்சி, வெற்றி, நான் சிகப்பு மனிதன், சட்டம் ஒரு விளையாட்டு, செந்தூரபாண்டி, ரசிகன், தேவா, ஒன்ஸ் மோர், நெஞ்சிருக்கும் வரை என்று ஏராளமான படங்களை ஹிட் கொடுத்துள்ளார். தனது மகனான விஜய்யை நடிகராக அறிமுகம் செய்து வைத்தவரும் இவரே. மேலும், விஜய்யை வைத்து நாளைய தீர்ப்பு, செந்தூர பாண்டி, ரசிகன், தேவா, விஷ்ணு ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
ஷோபா சந்திரசேகர்:
இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாவதற்கு முன்னதாக பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான ஷோபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் திருமணம் நடைபெற்றது. இவர்களின் ஒரே மகன் தான் தளபதி விஜய். இன்று தமிழ் திரையுலகம் கொண்டாடி வரும் இவரை... வரும் காலங்களே தமிழகமே கொண்டாடம் என எதிர்பார்ப்போடு தீவிர அரசியல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
52 ஆண்டுகளுக்கு பிறகும் தீரா காதல்:
இந்த நிலையில் தான் இன்று எஸ்.ஏ.சி மற்றும் ஷோபா தம்பதி, தங்களது 52ஆவது திருமண நாளை கொண்டாடி உள்ளனர். எனவே தனது காதல் பரிசாக, அவருக்கு மிகவும் பிடித்த பிஎம்டபிள்யூ கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இது குறித்து எஸ் ஏ சி கூறியிருப்பதாவது: எங்களுக்கு திருமணம் நடந்து 52 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த 52 ஆண்டுகளில் எங்களுக்கு இடையில் எவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்கிறது.
எவ்வளவோ தொந்தரவுகள் செய்து இருக்கிறேன். நான் செய்த அத்தனை தொந்தரவுகளையும் தாங்கிக் கொண்டு என்னுடன் இத்தனை ஆண்டு காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கிறார் என் மனைவி. அதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. திருமணம் ஆன புதிதில் மனைவிக்குப் பரிசு கொடுப்பது எல்லாம் சாதாரணமான விஷயம். ஆனால் இந்த 52 ஆண்டு கால வாழ்க்கையை நினைத்து என் மனைவிக்கு நான் ஒரு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்திருக்கிறேன். இதை நினைத்து நான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் என்று கூறியிருக்கிறார்.

