கமல் படம் பார்த்து ரொம்ப அழுதேன்.. அதில் சின்ன வாய்ப்பு கிடைத்தது எனக்கு பெருமை: தலைவாசல் விஜய்
1992 ஆம் ஆண்டு வெளிவந்த தலைவாசல் படத்தில் அறிமுகமானவர், இவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமடைந்தால் தனது பெயருக்கு முன்னாள் தான் நடித்த முதல் படத்தின் பெயரை அடைமொழியாக வைத்துக்கொண்டார்.
கமல் நடித்து பெரிய ஹிட் அடித்த மகாநதியை படத்தைப்பார்த்து என்னை அறியாமல் வருத்தப்பட்டு அழுதேன் எனவும், இப்படத்தில் எனக்கு ஒரு சிறிய ரோல் கிடைத்ததில் பெருமை கொள்வதாக நெகிழ்கிறார் நடிகர் தலைவாசல் விஜய்.
தமிழ் சினிமாவில் ஹூரோக்களுக்கு மட்டுமில்லை சில குணச்சித்தர கதாபாத்திரத்தில் வரும் நடிகர்களும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப்பிடித்துள்ளார்கள் என்று தான் கூற வேண்டும். இப்படி குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன் கேரக்டர் என பலவற்றில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒர் இடத்தைப்பிடித்துள்ளவர் தான் தலைவாசல் விஜய். 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தலைவாசல் படத்தில் அறிமுகமானவர், இவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமடைந்தால் தனது பெயருக்கு முன்னாள் தான் நடித்த முதல் படத்தின் பெயரை அடைமொழியாக வைத்துக்கொண்டார்.
மேலும் காதல் கோட்டை படத்தில் தல அஜித்தின் காதலுக்கு உதவி செய்வது போன்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார். அதிலும் “கவலைப்படாதே சகோதரா“ என்ற பாடல் இன்னமும் பல காதலர்களுக்கு அருமருந்தாக உள்ளது என்று தான் கூற வேண்டும். இப்படி பல படங்களில் தன்னுடைய நடிப்புத்திறமையை திறம்பட வெளிப்படுத்தியிருக்கிறார் தலைவாசல் விஜய். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், அவர் வாழ்வில் நடந்த மறக்க முடியாத அனுபவங்கள் சிலவற்றை பகிர்ந்திருந்தார். அதில் “ஒரு முறை ஆனந்த விகடனில் ஒரு கார்டூன் வந்திருந்தது. இதில் விஜய் மாதிரி முடி வெட்டுன்னு ஒருவர் கேட்ட நிலையில், தலைவாசல் விஜய் போல் முடியை வெட்டியுள்ளனர். ஏன் இப்படி செஞ்சீங்கனுக்கு கேட்ட போது, நீங்க விஜய்னு சொன்னதும், தலைவாசல் விஜய்னு நினைச்சிட்டேன். ஏன் நீங்க இளைய தளபதி விஜய்னு சொல்லிஇருக்கலாம்மே? என்று தெரிவிப்பது போல் அந்த கார்டூன் அமைந்திருந்தது. இதனைப்பார்த்த போது என்னையும் வைத்து கார்டூன் போட்டுஇருக்கிறார்களே? என்று நினைத்து பெருமைப்பட்டேன்” எனவும் இது என்னால் மறக்கமுடியாத அனுபவம் என தெரிவித்திருந்தார்.
இதோடு ”நான் சாதாரண மனிதன் தான், ஆனால் சில யூடியூப் சேனல்கள் என்னுடைய வீடு பெரிய பங்களா போல் உள்ளது. அதில் நீச்சல் குளம், பெரிய தோட்டம் உள்ளது போன்று காண்பித்துள்ளனர். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நான் சாதாரண மனிதன் தான். இனி அப்படி போடாதீர்கள். என்னோட குழந்தைகள் திருமண வயதில் இருக்கிறார்கள். இதனைப்பார்த்து வரன் பார்க்க வருபவர்கள் ஏமாறப்போகிறார்கள். எனவே கொஞ்சம் யோசித்துப்போடுங்கள்” என்று யூடியூப் சேனல்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் சினிமாத்துறையில் எனக்கு கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி வருகிறேன் என தெரிவித்த அவர், நான் படம் பார்த்து பயந்து அழுதேன் என்றால் அது பூம்புகார் என்றும், அதில் விஜயகுமாரி வந்ததைப்பார்த்தால் இன்னும் அச்சம் போகவில்லை என தன்னுடைய நினைவுகளைப் பகிர்கிறார். இதேப்போன்று மகாநதி படத்தைப்பார்த்து வருத்தப்பட்டு அழுதேன் என்றும், அதில் தெருக்கூத்து கலைஞராக சிறிய கதாபாத்திரத்தில் இருந்தாலும் எனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டேன் என்கிறார். இதோடு ஒரு காட்சியில், அய்யரே. வயசுக்கு மரியாதைக்கொடுக்கிறேன். நெஞ்சுல இருக்கிற மஞ்சா சோர எடுத்துருவேன்னு அர்த்தம் தெரியாமல் சொன்னது ரெம்ப ரீச் ஆச்சு. கமலே என்ன வசனம் எனக்கேட்டதாகவும், இது நல்லா இருக்கே என்று தெரிவித்ததாக மகிழ்ச்சியுடன் பகிர்கிறார்.
இதனையடுத்து உங்களது வாழ்வில் மிகப்பெரிய அட்வைஸ்னா என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த தலைவாசல் விஜய், என்னுடைய அப்பா கொடுத்த அட்வைஸ் தான் என்னை இந்த அளவிற்கு உயர்த்தியுள்ளதாக தெரிவித்தார். ”என்னுடைய அப்பா மத்தியபிரதேசத்தில் ரயில்வேயில் பணிபுரிந்தப்போது பத்தாம் வகுப்பு முடித்து விடுமுறைக்கு சென்றிருந்தேன். மீண்டும் சென்னை திரும்பும் போது, அப்பா ’இது உனக்கு முக்கியமான காலகட்டம் என்றும், வாழ்வில் நிறைய விஷயங்கள் உள்ளது. எனவே மது, புகைப்பிடித்தல் போன்றவற்றிற்கு அடிமையாகக்கூடாது’ என தெரிவித்தார். மேலும் நீ உன்னோட கன்ட்ரோல்ல இருக்கனும், அதோட கன்ட்ரோல்ல இருக்கக்கூடாது என சொன்ன விஷயத்தை இதுவரை பின்பற்றி வருகிறேன்” என கூறினார். இதனைத்தான் தற்போது கொஞ்சம் மாற்றி என்னோட குழந்தைகளுக்கும் கூறுகிறேன் என தெரிவிக்கும் தலைவாசல் விஜய், நீங்கள் உங்களோட கன்ட்ரோல்ல இரு, மொபைல், லேப்டாப் போன்ற தொழில்நுட்ப சாதனங்களுக்கு அடிமையாகிவிடாதீர்கள் என தலைவாசல் விஜய் தெரிவித்துள்ளார்.