Thalaivar 173: ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி விலகியதற்கு உண்மையான காரணம் இதுதானா?
Thalaivar 173: கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் இருந்து சுந்தர் சி விலகியதற்கான காரணம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருந்த தலைவர் 173 படத்தை சுந்தர் சி இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு வெளியான ஓரிரு நாட்களிலே சுந்தர் சி அந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. இது அனைவருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
சுந்தர் சி விலகியதன் காரணம் இதுவா?
கதை பிடிக்காத காரணத்தால் ரஜினிகாந்த் நடிக்க தயங்கியதன் விளைவாகவே சுந்தர் சி இந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. அதேசமயம், இதற்கு மற்றொரு காரணம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதாவது, சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கடைசி படம் கேங்கர்ஸ்.
இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியின்போது பேசிய சுந்தர் சி, ஒரு பெரிய படத்தில் சம்பளமே 80 முதல் 85 சதவீதம் சம்பளத்திற்கே சென்றுவிடுகிறது. அப்போது, 20 சதவீதம்தான் திரையில் வருகிறது. அப்போது, தானாகவே தயாரிப்பிற்காக இயக்குனர் அதிகமாக செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால், 20 சதவீதம் 40 சதவீதமாகிறது.
20 சதவீதம் அதிகமானால் தயாரிப்பாளர் பேப்பரிலே நஷ்டத்தில்தான் அந்த படம் ஆரம்பிக்கிறது. இதில் என்ன பயன்? பெரும்பாலான பணம் ஒரு சிலருக்கு மட்டும் செல்கிறது. எல்லாருக்கும் அது யாரென்று தெரியும்.
இவ்வாறு அவர் கூறியிருப்பார்.
கதை பிடிக்காத ரஜினி:
சுந்தர்.சி குடும்பப் பாங்கான படங்கள் எடுப்பதில் மிகவும் திறமையானவர். ரஜினிகாந்தை வைத்து அருணாச்சலம் என்ற ப்ளாக்பஸ்டர் வெற்றியைத் தந்தவர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் ரஜினி லோகேஷ் போன்ற இயக்குனர்கள் மீது அதிருப்தியில் இருக்கிறார். தற்போது ஜெயிலர் 2 படத்தில் அவர் நடித்து வந்தாலும் தன்னுடைய அடுத்த படத்தின் கதையில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்.
சுந்தர் சி கூறிய கதை ரஜினிக்கு பிடிக்காத காரணத்தால் அவர் விலகியதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதேசமயம், சுந்தர் சி-யின் இந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சம்பளம்:
ரஜினிகாந்தின் கடந்த சில படங்களில் அவருடைய சம்பளமே படத்தின் தயாரிப்பில் பாதிக்கும் மேலான அளவாக இருந்து வருகிறது. குறிப்பாக, தர்பார் படத்தின் தயாரிப்பு 125 கோடி ரூபாய். ஆனால், அதில் ரஜினி, நயன்தாரா. யோகி பாபு உள்ளிட்ட அனைவரது சம்பளமுமே ரூபாய் 100 கோடி வரை நெருங்கிவிட்டது. இதனால், 25 கோடி ரூபாய் செலவில் எதிர்பார்த்தது போல படத்தை எடுக்க முடியவில்லை என்று அப்போது பேசப்பட்டது.
அதேபோல, கமல் தயாரிப்பில் ரஜினி நடிப்பதற்காக ஒப்பந்தமான அந்த படத்திலும் ரஜினியின் சம்பளம் அதிகளவில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் படத்தின் உருவாக்கத்திற்கு போதுமான அளவு செலவு செய்ய முடியாத சூழல் உருவாகலாம் என்ற காரணத்தினாலும் சுந்தர் சி விலகியிருக்கலாம் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.





















