Saala Movie: பிரபல நடிகர் அல்லு அர்ஜூன் வெளியிட்ட சாலா ட்ரெயிலர்! எப்போது ரிலீஸ் தெரியுமா?
அறிமுக இயக்குனர் மணிபால் இயக்கியுள்ள சாலா படத்தின் ட்ரெயிலரை தெலுங்கின் பிரபல நடிகர் அல்லு அர்ஜூன் வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழ்வது பீப்பிள் மீடியா ஃபேக்டரி. இந்த நிறுவனம் தமிழில் நேரடியாக படம் தயாரிக்க விரும்பியது. இதையடுத்து, 'சாலா' எனும் நேரடி தமிழ் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர். T.G. விஷ்வபிரசாத் தயாரிப்பில், விவேக் குச்சிபொட்லா இணை தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ்.டி. மணிபால் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
அல்லு அர்ஜூன் வெளியிட்ட சாலா ட்ரெயிலர்:
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, 'சாலா' படத்தின் ட்ரெயிலரை தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் வெளியிட்டார். இந்த ட்ரெயிலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சாலா திரைப்படம் உலகெங்கும் வரும் 23ம் தேதி வெளியாகிறது. இத்திரைப்படமானது வட சென்னையில் உள்ள பிரபல மதுபானக் கூடத்திற்காக இரண்டு துருவங்கள் மோதிக் கொள்ளும் போராட்டத்தை விறுவிறுப்பு குறையாமல் விவரிக்க உள்ளது.
'சாலா' படத்தில் தீரன், ரேஷ்மா வெங்கடேசன் ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். இவர்கள் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'மெட்ராஸ்' பட புகழ் சார்லஸ் வினோத், அருள்தாஸ், ஸ்ரீநாத், சம்பத்ராம், மற்றும் ஐடி அரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'சாலா' படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வெளியாக உள்ளது.
படத்தின் கதை:
படத்தின் இயக்குனர் மணிபால் பிரபல இயக்குனர் பிரபு சாலமனிடம் இணை இயக்குனராக பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இயக்குநர் மணிபால் இதுகுறித்து பேசும்போது, "வட சென்னையின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள ஒரு மதுபானக் கூடம் (பார்) தான் 'சாலா' படத்தின் மையக்கரு. இந்த பாரை கைப்பற்ற சக்தி வாய்ந்த இரு குழுக்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே, மதுக்கடையே இருக்கக் கூடாது என்று பெண் ஆசிரியர் ஒருவர் கடும் போராட்டத்தை முன்னெடுக்கிறார். இந்த மூன்று தரப்புக்கு இடையே நடக்கும் மோதல்களை காரமும் சாரமும் குறையாமல் திரையில் கொண்டு வந்திருக்கிறோம்.
வட சென்னை எனக்கு மிகவும் பிடித்த பகுதி. அங்குள்ள மக்களை பற்றியும், அவர்களது வாழ்க்கை குறித்தும் சினிமாவில் பதிவு செய்ய வேன்டும் என்ற ஆசை எனது முதல் படத்திலேயே நிறைவேறி உள்ளது மிக்க மகிழ்ச்சி. வட சென்னை மக்கள் மட்டுமில்லாமல், அனைத்து ரசிகர்களாலும் 'சாலா' பாராட்டப்படும் என நம்புகிறேன்" என்றார். இந்த படத்திற்கு ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவு செய்ய, தீசன் இசை அமைத்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

