(Source: ECI/ABP News/ABP Majha)
Ethirneechal: டி.ஆர்.பி ரேட்டிங்கில் நிகழ்ந்த சம்பவம்.. குணசேகரன் கேரக்டர் இல்லாமல் ஒளிபரப்பாக உள்ளதா எதிர்நீச்சல் சீரியல்?
Ethirneechal: நடிகர் மாரிமுத்துவின் இறப்புக்கு பிறகு ஆதி குணசேகரன் காட்சிகள் இல்லை என்றாலும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது எதிர்நீச்சல் சீரியல்.
சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்குமே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கும். அதிலும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணி வகிக்க வேண்டும் என போட்டி போட்டு கொண்டு ஒவ்வொரு சீரியலும் ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதல் இடத்தை யாருக்குமே விட்டு கொடுக்காமல் பல மாதங்களாக முன்னிலையில் இருந்து வருகிறது எதிர்நீச்சல் தொடர்.
'கோலங்கள்' சீரியல் மூலம் மிகவும் பிரபலமான இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடருக்கு பட்டி தொட்டி எங்கும் ரசிகர்கள் உள்ளனர். மேலும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் முதல் நாளில் இருந்து இன்று வரை அதே பரபரப்புடனே பார்வையாளர்களை வைத்துள்ளது. அடுத்து என்ன அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை தூண்டுவதால் தான் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைத்துள்ளது.
மதுரையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பிகள் நால்வர் தேடி தேடி படித்த பட்டதாரி பெண்களை திருமணம் செய்து வைக்கிறார் மூத்த அண்ணனான ஆதி குணசேகரன். வீட்டில் பெண்களை அடிமைகளாக நடத்தப்படுவதை எதிர்த்து நியாயத்திற்காக போராடுகிறாள் கடைசி மருமகளான ஜனனி. அதன் காரணமாக வீட்டில் ஏற்படும் பிரச்சினைகள் அதை எப்படி அவர்கள் எதிர்கொண்டு முன்னேறி வருகிறார்கள் என்பது தான் எதிர்நீச்சல் சீரியலின் கதைக்களம்.
இன்று வரை எதிர்நீச்சல் சீரியல் வெற்றியை தக்க வைப்பதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது விறுவிறுப்பான கதைக்களம் மற்றும் நடிகர்களின் எதார்த்தமான நடிப்பு. அதிலும் ஆதி குணசேகரனாக நடித்து வந்த இயக்குனர் மற்றும் நடிகருமான மாரிமுத்துவின் அர்ப்பணிப்பு அபாரமானது. இந்த சீரியல் இத்தனை ஸ்வாரஸ்யமாக நகர்வதற்கு மிக முக்கியமான காரணமான மாரிமுத்து சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் இழப்பு அனைவரையும் புரட்டிப்போட்டது.
குணசேகரன் கதாபாத்திரம் சீரியலின் பக்கபலமாக இருந்ததால் அந்த கதாபாத்திரத்தில் அடுத்து யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவரின் இடத்தை எந்த ஒரு நடிகராலும் ஈடு செய்ய முடியாது என்றாலும் கதை அடுத்த கட்டத்திற்கு நகர அவரின் கேரக்டர் அவசியம்.
கடந்த சில நாட்களாக குணசேகரன் கதாபாத்திரம் வீட்டை விட்டு சென்றதாகவும் அவரை தேடுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டது. அடுத்தபடியாக அவரின் லெக் ஷாட் மட்டுமே காண்பிக்கப்பட்டாலும் விரைவில் குணசேகரன் கதாபாத்திரத்தின் முழு என்ட்ரி இருக்கும் என்பது போல கதை நகர்த்தப்படுகிறது. இவருக்கு பதில் இவர் என போட்டு சீரியலை நகர்த்தாமல் அந்த நடிகருக்கான மரியாதையை கொடுத்து கதைக்களத்தை மாற்றியமைத்த ஒரே தொடர் இந்திய தொலைக்காட்சிகளில் இதுவாகவே இருக்கும். இப்படியான நிலையில் இன்னும் சில நாட்களுக்கு குணசேகரன் கேரக்டர் இல்லாமல் தான் சீரியல் நகரும் என சொல்லப்படுகிறது.
குணசேகரன் கதாபாத்திரத்தின் காட்சிகள் கடந்த இரண்டு வாரமாக வராமல் இருந்ததால் அதன் டி.ஆர்.பி ரேட்டிங்கில் ஏதாவது மாற்றம் இருந்ததா என கேள்விகள் எழுந்தன. அந்த கேள்விகளுக்கு சரியான பதிலடியாக கடந்த வார டி.ஆர்.பி ரேட்டிங்கின் படி எதிர்நீச்சல் தொடர் 10.79 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும் 10.74 புள்ளிகள் பெற்று கயல் சீரியல் இரண்டாவது இடத்தையும் கைப்படத்தியுள்ளது. அதை தொடர்ந்து சுந்தரி, வானத்தை போல மற்றும் இனியா தொடர்கள் கைப்பற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.