Director G Marimuthu: எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க 3 நிபந்தனைகள் தான் காரணம்.. இயக்குநர் மாரிமுத்துவின் வெளிப்படையான பதில்..!
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் தான் நடிப்பதற்கான காரணத்தை இயக்குநர் மாரிமுத்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் தான் நடிப்பதற்கான காரணத்தை இயக்குநர் மாரிமுத்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகர் ராஜ்கிரனிடம் உதவி இயக்குநராக இருந்த ஜி.மாரிமுத்து, பின்னர் மணிரத்னம், வசந்த், சீமான், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். தொடர்ந்து சிம்புவின் மன்மதன் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய அவர், பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதன்பின்னர் 2014 ஆம் ஆண்டு விமல், பிரசன்னா, ஓவியா நடித்த புலிவால் படத்தையும் இயக்கியிருந்தார்.
இதற்கிடையில் மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தின் மூலம் நடிகராக மாறினார். தொடர்ந்து கமல்,விஜய், ஜெயம் ரவி, கார்த்தி, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களிலும் நடித்த மாரிமுத்து சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியல் மூலம் எண்ட்ரீ கொடுத்தார். இந்த சீரியலில் அவரது கேரக்டர் ஆரம்பத்தில் பெரும் சர்ச்சைகளை சந்தித்தது. ஆனால் இப்போது மாரிமுத்து இல்லாமல் இந்த சீரியல் இல்லை என்னும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் அவர் நடித்து வருகிறார். எதிர்நீச்சல் சீரியலில் தான் ஏன் நடித்தேன் என்பதை மாரிமுத்து நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க காரணம்
”சின்னத்திரையில் நடிக்க ராதிகா என்னிடம் சொல்லிக்கொண்டே இருந்தார். நான் சினிமா நல்லப்படியா போய்கிட்டு இருக்குன்னு சொல்லி சமாளிச்சிட்டேன். திடீர்ன்னு ஒருநாள் திருச்செல்வம் போன் பண்ணி பேசினார். அதற்கு முன்னால் நான் அவருடன் பேசியது கிடையாது. ஆனால் அவர் கோலங்கள் உள்ளிட்ட சில சீரியல்களை இயக்கியுள்ளார் என்பது தெரியும். என்னிடம் பேசிய திருச்செல்வம், இந்த மாதிரி சின்னத்திரையில் நீங்க எண்ட்ரீ கொடுக்க முடியுமா என கேட்டார்.
பெரிய கேரக்டர் என்றால் ஓகே என நான் சொன்னேன். உடனே எதிர்நீச்சல் சீரியலில் கதையை ஒரு 3 மணி நேரம் என்னிடம் சொன்னார். கிட்டதட்ட 1500 எபிசோட்கள் தயாரிப்பு தரப்பிடமிருந்து கேட்டிருப்பதாக கூறினார். ஆதி குணசேகரன் என்ற அந்த கேரக்டரில் நான் நடித்தேன். கிட்டதட்ட 4, 5 வருடங்கள் இந்த சீரியல் போகும். மாசத்துல 12 முதல் 15 நாட்கள் தேதி கொடுக்க முடியுமா என கேட்டார்.
நான் உடனே 3 நிபந்தனைகளை வைத்தேன். “நான் வசனங்களை பார்த்து படிக்க மாட்டேன், அப்படியே பேசமாட்டேன், சினிமாவில் வாங்கும் சம்பளத்தை விட கொஞ்சம் அதிகம் வேண்டும்” என திருச்செல்வத்திடம் சொன்னேன். அவரும் சரி என சொன்னார். முழுமூச்சாக சின்னத்திரையில் நடித்து வருகிறேன். இதுவரை ஒளிபரப்பான 313 எபிசோடில் 250க்கும் மேற்பட்ட எபிசோடில் நடித்துள்ளேன். இந்த சீரியலில் நடித்தப் பிறகு எங்கு போனாலும் கூட்டம். என்னை பாராட்டுகிறார்கள்” என மாரிமுத்து அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.