Sai Pallavai Body Shaming: அந்த கிழவிக்கு என்ன தெரியும் எழுதுறாங்க.. சாய் பல்லவி உருவக்கேலி சர்ச்சை.. கொதித்தெழுந்த தமிழிசை செளந்தர்ராஜன்..!
உருவகேலி குறித்து புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் பகிர்ந்து கொண்டவற்றை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.
பிரேமம் படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமான சாய் பல்லவியின் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ஷியாம் சிங்கா ராய். தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள இந்தப்படத்தில் சாய் பல்லவியின் நடிப்பு பெரிதளவு கவனம் பெற்றிருக்கிறது.
இந்த நிலையில் பேஸ்புக் பயனாளர் ஒருவர் சாய் பல்லவியின் உருவத்தை விமர்சனம் செய்து கருத்து ஒன்றை வெளியிட்டு இருந்தார். இது மிகப் பெரிய சர்ச்சையான நிலையில், சாய் பல்லவிக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இணையத்தில் பல முறை உருவ கேலிக்குள்ளான புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தர் ராஜன் புதிய தலைமுறையின் நியூஸ் 360 நிகழ்ச்சியில் தான் எப்படி உருவகேலியை எதிர்கொண்டேன் என்பது குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, “ அதை மிக துணிச்சலாக எதிர்கொண்டேன்..அப்படித்தான் சொல்லணும். அந்த விமர்சனங்கள் என்னை மிகவும் காயப்படுத்தும். என்னைப் பார்த்து பரட்டை என்பார்கள். எல்லாவற்றிலும் அழகு இருக்கிறது.
ஆண்களுக்கு பெரும்பாலும் உருவகேலி சார்ந்த விமர்சனங்கள் இருப்பதில்லை. நேற்று கூட பார்த்தேன்.. ஒரு பிரபலமான நபரை அந்த கிழவிக்கு என்ன தெரியும் என்று எழுதியிருக்கிறார்கள். 50 யை கடந்த ஆண் என்றால் அவர்கள் இளைஞர்கள். 50 யை கடந்த பெண் என்றால் அவர்கள் கிழவியாகிவிடுகிறாள்.
அதிகப்படியான உருவகேலி விமர்சனங்கள் பெண்களுத்தான் வருகின்றன. அவர்கள் முன்னேறுவதை தடுக்க முடியாத ஒரு சமுதாயம் அவர்களை காயப்படுத்தி அதன் மூலம் அவர்களின் நடையை தடுத்து நிறுத்தும் ஒரு நிகழ்வுதான் இது. இதில் காயப்பட்டவர்கள் ஒல்லியாகணும், சிகப்பாகணும் என வேறு முயற்சிகளில் இறங்குகிறார்கள். அப்படியில்லை. நீங்கள் நீங்களாகவே இருங்கள்.. கருத்தால் எதிர்கொள்ள முடியாதவர்கள் நிறத்தால் எதிர்கொள்கிறார்கள்.
எங்கள் வீட்டில் எனக்கு மட்டும்தான் சுருட்டை முடி, சுருட்டை சோறு போடும் என்று கூறி வளர்த்திருக்கிறார்கள். அதனால் நான் கிண்டலுக்கு உள்ளாகும் போது, என்னை விட என் தாயார்தான் மிகவும் வருத்தப்படுவார். அதனால் இது போன்ற உருவ கேலிகளை பெண்கள் மன உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும்.” என்று பேசியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்