Survivor Tamil: காடரும் லீடரும் மோதல்... அழுத காயத்ரி... அவுட் ஆவாரா பார்வதி? இது இன்றைய சர்வைவர்!
survivor tamil show: காயத்ரியிடம் பேசிய விக்ராந்த், ‛இங்கு இருப்பவர்களில் நான் தான் பெரியவன்; நான் கூறுவதை கொஞ்சம் கேளுங்கள்...’ என கூற, தனிமையில் சென்று அழுது புலம்பினார் காயத்ரி.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9:30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சியில் 4ம் நாளான இன்று பல முக்கிய சுவாரஸ்யங்கள் நடைபெற்றன. காயத்ரி தலைமையிலான காடர் அணியும், லட்சுமி தலைமையிலான வேடர் அணியும் தனித்தனியே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தீவில் பணிகளை துவக்கியுள்ளனர். நேற்று நடந்த ரிவார்டு சேலஞ்ச் போட்டியில், காடர் அணியை வேடர் அணி கடும் போராட்டத்திற்கு பின் வென்று, பல சலுகைகளை பெற்றனர்.
Survivor Tamil: சாப்பாடு கேட்டு கெஞ்சிய நந்தா... கொந்தளித்த சரண்... என்ன செய்யப்போகிறார் இந்திரஜா!#Survivor #SurvivorTamil#Saran #Nanda #Indrajahttps://t.co/6NCvhGPgSF
— ABP Nadu (@abpnadu) September 15, 2021
நெருப்பு இல்லாமல் சிரமப்பட்ட அவர்கள், போட்டியின் வெற்றி பெற்றதால் நெருப்பு பற்ற வைக்கும் கருவியை அர்ஜூனிடம் பெற்றனர். அது மட்டுமின்றி தார்பால், போர்வை உள்ளிட்ட சில சலுகை பொருட்களை வேடர் அணி பெற்றது. தீவியில் சிரமப்பட்ட அவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு பெரிய அளவில் அது உதவியாக இருக்கும் என்பதால், அந்த அணியினர் இந்த வெற்றியை கொண்டாடித் தீர்த்தனர். அதே நேரத்தில், தோல்வியால் துவண்டுபோயிருந்த காடர் அணியினர், ரொம்பவே அப்செட் ஆகினர். குறிப்பாக அணித்தலைவர் காயத்ரி இந்த விவகாரத்தில் ரொம்ப அதிருப்தி அடைந்தார். அந்த அதிருப்தி நான்காம் நாளான இன்றைய நிகழ்ச்சியில் எதிரொலித்தது. இதோ... இன்றைய போட்டியில் நடந்தவை....
உண்டு மகிழ்ந்த வேடர்... சண்டையிட்ட காடர்!
நெருப்பு பற்ற வைக்கும் கருவி கிடைத்ததால் 3 நாட்களுக்குப் பின் சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். ஆனால் காடர்கள் அணியில் குடில் அமைக்க பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதில் கருத்து ஒத்துப்போகாமல் போக, லீடர் காயத்ரி, அங்கிருந்து கோபமாக புறப்பட்டார். ராம் அவரை சமரசம் செய்ய முயற்சித்தார். நீண்ட அறிவுரைக்குப் பின் அவரை சக போட்டியாளர்களிடம் அழைத்து வந்து, சமரசம் செய்ய முயற்சித்தார். ஆனால் அங்கு மீண்டும் காயத்ரி கோபம்கொண்டார். அனைவரும் அமைதியாக இருங்கள் என கோபமாக காயத்ரி சொல்ல விக்ராந்த் கோபமானார்.
காடர்-லீடர்.... அணியில் மோதல்...!
லீடர் என்கிற முறையில் கருத்தை கேட்காமல் வெளிநடப்பு செய்த காயத்ரியின் செயலை இந்திரஜா கண்டித்தார். பின்னர் காயத்ரி சொல்லும் பாணியில் குடிசை அமைக்க முடிவு செய்தனர். காயத்ரி சொல்வதை தான் செய்ய வேண்டுமா என்கிற புரிதல் அனைவருக்கும் எழுந்தது. ஆனால் நான் அப்படி கூறவில்லை என்றார் காயத்ரி. பின்னர் காயத்ரியிடம் பேசிய விக்ராந்த், ‛இங்கு இருப்பவர்களில் நான் தான் பெரியவன்; நான் கூறுவதை கொஞ்சம் கேளுங்கள்...’ என கூற, தனிமையில் சென்று அழுது புலம்பினார் காயத்ரி. பின்னர் மீண்டும் குழுவினரிடம் பேசினார் காயத்ரி. ‛நான் கோபப்பட்டு சில நிமிடங்களில் இயல்பிற்கு திரும்புவேன்... அதை புரிந்த கொள்ளுங்கள்.. யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்,’ என்று காயத்ரி கூறினார். ‛3 நாளில் உங்களை எப்படி புரிந்து கொள்ள முடியும்,’ என விக்ராந்த் கூற, இருவருக்கும் இடையே மீண்டும் முட்டியது. சக போட்டியாளர்கள் அவரை சமரசம் செய்ய முயன்றனர். பின்னர் போட்டியாளர்களுடன் பேசிய விஜயலட்சுமி, காயத்ரியை கடுமையாக சாடினார். ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் காயத்ரியை ஒரு பிடி பிடித்தனர். அந்த கோபத்தில் உண்மையும் இருந்தது.
புதிய டாஸ்க்... பழைய பார்மட்!
போட்டியாளர்கள் தங்கள் கதைகளை கூறும் டாஸ்க் குறித்த ஓலை தீவுக்கு வந்தது. தீவுக்கு புதிய டாஸ்க், தமிழ் சின்னத்திரைக்கு ரொம்ப பழைய பார்மட். முதலில் காடர் டாஸ்கில் விஜயலட்சுமி பேசினார். ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் அவர் கூறிய அதே கதை தான். தன் காதல், தன் மகன் பற்றிய கதை. ஆரம்பிக்கும் முன்பே அழுகை, அருகே இருப்பவர் தேற்றுவது, பேக்ரவுண்ட் மியூசிக் உடன் உருக்கம் ஏற்படுத்த முயற்சித்தது என விஜய் டிவியின் அதே பிக்பாஸ் மிக்சரை, சர்வைவர் சால்னாவாக தெளித்தனர். அடுத்ததாக ரோபோ சங்கர் மகள் இந்திரஜா பேசத் தொடங்கினார். சொல்லவே வேண்டாம்... அவர் என்ன சொல்வார்... எப்படி அழுவார்... என்றெல்லாம். அதுவே நடந்தது. பின்னர் காயத்ரி கதை சொன்னார். அவர் புதியவர் என்பதால், அதை கேட்க வேண்டியதாக இருந்தது. இதே போல் தான் ஒவ்வொருவரும் தங்கள் உருக்கத்தை கொட்டினர். தொடங்கும் போதே தெரிந்து விட்டது... இன்று ஒரே அழு காட்சி தான் என்று. ஆனாலும் இளைஞர்கள் சிலர் தங்கள் கதையை கலகலப்பாகவே சொன்னார்கள். அது மட்டும் ஆறுதல்.
எலிமினேஷனில் நான் இருப்பேன்... அடித்து சொன்ன பார்வதி!
பரபரப்பாக பேசப்பட்டு வரும் வேடர் அணியின் பார்வதி தன் கதையை சொல்லி சக போட்டியாளர்களை உருக செய்தார். ‛‛மதுரையில் இருந்து வந்தேன். முதல் பெரிய இழப்பு. என் அப்பா இறந்தது. தூங்கிய போதே இறந்துவிட்டார். என் அம்மாவை பார்த்து ஓ ராமானு அழுதேன். என் அப்பா எனக்கு பெரிய மாற்றம் கொடுத்தார். சமீபமா ஒரு யூடியூப் சேனலில் சேர்ந்தேன். என்னுடைய உழைப்பை நம்பி வந்திருக்கிறேன்,’’ என்றார் பார்வதி. தான் ரவுடியாக சென்றதாகவும், நல்ல காசு கிடைத்ததாகவும், அதன் பின் வீட்டார் அனைவரும் அடித்து துவைத்ததாக தன் மோசமான அனுபவத்தை கூறினார். இப்படி ஒரு வழியாக தங்கள் பின்புலத்தை கூறி முடிக்க, அடுத்த டாஸ்க் செய்வதற்காக ஓலை வந்து சேர்ந்தது. டீமில் பலவீனமானவரை தேர்வு செய்ய வேண்டும். அந்த எலிமினேஷனில் நான் கண்டிப்பா இருப்பேன் என அடித்து சொன்னார் பார்வதி. அந்த வகையில் நாளைய எபிசோடில் ஓட்டெடுப்பு நடக்கவிருக்கிறது. அதில் தேர்வாகும் நபர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார்.
நாளை வெளியேற்றம்....!
ஓட்டெடுப்பு குறித்தும், அதிலிருந்து வெளியேற்றம் குறித்தும் நிகழ்ச்சி தொகுப்பாளரான அர்ஜூன் நாளை விளக்க உள்ளார். அவரது விளக்கத்தை கேட்டு போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். அத்துடன் இன்றயை எபிசோட் முடிகிறது. நாளை தீவுகள் பற்றி எரியும் என்றே தெரிகிறது.