Suriya Singam 4: ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா.. வருகிறது சிங்கம் பார்ட் 4.. எழுத்து வேலைகளில் இயக்குநர் ஹரி!
சூர்யா - ஹரி இணையும் சிங்கம் நான்காம் பாகம் தொடர்பான அப்டேட் வெளியாகி இருக்கிறது.
சூர்யா - ஹரி இணையும் சிங்கம் நான்காம் பாகம் தொடர்பான அப்டேட் வெளியாகி இருக்கிறது.
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி ‘சிங்கம்’. துரைசிங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா நடித்திருந்தார். இந்தப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில், இந்தப்படத்தின் இராண்டாம் பாகம் கடந்த 2013 ஆம் ஆண்டும், மூன்றாம் பாகம் 2017 ஆம் ஆண்டும் வெளியானது.
முதல் இரண்டு பாகங்களும் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மூன்றாம் பாகம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை.
இதனைத்தொடர்ந்து ஹரி ‘அருவா’ என்ற படத்தில் சூர்யாவுடன் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அந்தப்படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் ஹரி கூறியிருந்தார். இந்த நிலையில் இயக்குநர் ஹரி, சிங்கம் நான்காம் பாகத்தை உருவாக்குவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து வெளியான தகவலில், “ இயக்குநர் ஹரி தான் இயக்கும் அடுத்தப்படத்திற்கான வேலைகளில் கவனம் செலுத்தி வந்தாலும், அதே வேளையில் சிங்கம் 4 பாகத்திற்கான எழுத்து வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறாராம். படத்தின் ஐடியா குறித்த தற்போது டிஸ்கஷனில் இருக்கும் நிலையில், முழு கதையை தயார் செய்த பின்னர் ஹரி, சூர்யாவிடம் கதையை சொல்ல இருக்கிறாராம். சூர்யாவும் சிங்கம் 4 பாகத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
சூர்யா தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 42’ படத்தில் நடித்து வருகிறார். திஷா பதானி கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடந்து முடிந்த நிலையில், கடந்த அக்டோபர் 26 ஆம் தேதியில் இருந்து சென்னை மற்றும் புதுச்சேரி சார்ந்த இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறதாம்.
இதுமட்டுமல்லாது மூன்று நாடுகளில் படப்பிடிப்பு நடத்துவதற்கும் படக்குழு திட்டமிட்டு உள்ளதாம். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இந்தப்படத்தின் முதல் பாகத்தை 160 முதல் 170 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருக்கும் நிலையில், இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த உடன் அடுத்தப்பாகத்தை படக்குழு எடுக்க திட்டமிட்டுள்ளது.