Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கத் தகுதியான படமாக நடிகர் சூர்யாவின் கங்குவா படம் இடம்பெற்றுள்ளது. இதனால், சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திரையுலகின் கலைஞர்களுக்கு வாழ்நாள் கவுரவமாக கருதப்படுவது ஆஸ்கர் விருது ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் சயின்சஸ் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்க தகுதியான படங்களை அறிவித்துள்ளது.
ஆஸ்கர் பரிந்துரைக்கு தகுதியான படங்களில் கங்குவா:
மொத்தம் 207 படங்களை அவர்கள் அறிவித்துள்ளனர். அதில் தமிழில் இருந்து நடிகர் சூர்யாவின் கங்குவா படம் இடம்பிடித்துள்ளது. இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்க தகுதியான படங்களில் கங்குவா படமும் இடம்பெற்றிருப்பது சூர்யா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், கடந்தாண்டு வெளியான கங்குவா படத்திற்காக நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் படம் கண்டிப்பாக 1000 கோடி ரூபாய் வசூலைக் கடக்கும் என்று பேசியது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரிலீசான இந்த படத்தின் டீசரும், ட்ரெயிலரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தைத் தூண்டியது. ஆனால், படம் ரிலீசாகிய பிறகு கங்குவா படம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. எதிர்மறையான விமர்சனங்களால் கங்குவா படம் படுதோல்வியை அடைந்தது. ஆனால், ஓடிடியில் ரிலீசான பிறகு கங்குவா படத்தைப் பலரும் பாராட்டினர். தொழில்நுட்ப ரீதியாக கங்குவா படத்தில் பணியாற்றிய குழுவினருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
ஒரே ஒரு தமிழ் படம்:
கடும் விமர்சனங்களைச் சந்தித்த கங்குவா படம் தற்போது ஆஸ்கருக்கு பரிந்துரைக்க தகுதியான 207 படங்களில் ஒரு படமாகவும், ஆஸ்கருக்கு பரிந்துரைக்கத் தகுதியான ஒரே ஒரு தமிழ் படமாகவும் இடம்பெற்றுள்ளது. இதை சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
ஸ்டூடியோ கிரீன் தயாரித்த கங்குவா படத்தில் இஷா பதானி, சன்னி தியோல், கருணாஸ், நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கங்குவா படம் மட்டுமின்றி பிரித்விராஜ் நடித்த மலையாள படமான ஆடுஜீவிதம் படமும், மலையாளத்தில் ரிலீசான ஆல் வி இமேஜின் அஸ் லைட் படமும், இந்தி படமான சந்தோஷ், ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர், கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ் ஆகிய இந்தி படங்களும் ஆஸ்கருக்குத் பரிந்துரைக்கத் தகுதியான படமாக தேர்வாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

