Sengottaiyan joined TVK: ஜெ. படத்தை தூக்கி போட்ட செங்கோட்டையன்.? பாக்கெட்டில் ஜொலிக்கும் விஜய் படம்
அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இன்று தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். இதனையடுத்து தவெக உறுப்பினர் அட்டையை விஜய்யிடம் இருந்து செங்கோட்டையன் பெற்றுக்கொண்டார்.

ஜெயலலிதாவின் விசுவாசி செங்கோட்டையன்
அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் செங்கோட்டையன், 1980களில் இருந்தே ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்தவர். எம்ஜிஆருக்குப் பிறகு கட்சி பிளவுபட்டபோது ஜானகி பக்கம் செல்லாமல் ஜெயலலிதாவுடன் நின்றார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த அனைத்து காலகட்டங்களிலும் செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை, வனத்துறை, வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம் என முக்கிய பதவிகள் கொடுக்கப்படது. ஜெயலலிதா தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செல்லும் போதெல்லாம் செங்கோட்டையன் தான் முக்கிய தளபதியாக இருந்து ரூட் மேப் போட்டு கொடுப்பார்.
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்
ஜெயலலிதா உடல்நிலை மோசமாகி அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த 2016 செப்டம்பர்-டிசம்பர் காலகட்டத்தில், செங்கோட்டையன் மிகவும் நெருக்கமான சில தலைவர்களில் ஒருவராக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா-தினகரன் பிரிவு உருவானபோது, செங்கோட்டையன் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி பக்கம் உறுதியாக நின்றார். இதனையடுத்து அதிமுகவில் ஏற்பட்ட அதிகார மோதலால் பல பிரிவுகளாக தலைவர்கள் பிரிந்து சென்றனர். தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வி அதிமுகவிற்கு கிடைத்தது. எனவே 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் பிரிந்து சென்ற தலைவர்கள் ஒருங்கிணைய வேண்டும் என்பதே செங்கோட்டையனின் கோரிக்கையாக இருந்து வந்தது.
தவெகவில் செங்கோட்டையன்
இதனையடுத்து ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை சந்தித்து செங்கோட்டையன் பேசியிருந்தார். இதனால் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கினார். இதனால் செங்கோட்டையனின் அடுத்த கட்ட மூவ் தொடர்பாக எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் செங்கோட்டையனுக்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகள் யாரும் முன் வராத காரணத்தால் அதிமுக ஒருங்கிணைப்பு பணியை தூக்கி போட்டுவிட்டு நடிகர் விஜய் தொடங்கியுள்ள தவெகவில் இணைந்துள்ளார் செங்கோட்டையன்.
செங்கோட்டையன் பாக்கெட்டில் விஜய் படம்
கடந்த 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் செங்கோட்டையன் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்களை மட்டுமே தனது பாக்கெட்டில் வைத்திருந்தார். தற்போது தவெகவில் செங்கோட்டையன் இன்று இணைந்த நிலையில் தவெக தலைவர் விஜய் கொடுத்த தவெக உறுப்பினர் அடையாள அட்டையை தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டார் செங்கோட்டையன், விஜய் உருவம் பொறிக்கப்பட்ட அடையாள அட்டையை செங்கோட்டையன் தனது பாக்கெட்டில் வைத்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
இதனிடையே செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது. அதிமுக கொடி கட்டிய வேஷ்டியை பயன்படுத்தினால் சட்ட சிக்கல் உருவாகும் எனவே அதனை பயன்படுத்தவில்லையென தெரிவித்தார். சட்டையில் ஜெயலலிதா படம் ஏன்?’’ என்ற கேள்விக்கு, ஜனநாயக நாட்டில் யார் படத்தையும் வைத்துக் கொள்ளலாம் எனவும் பதில் அளித்தார்.





















