TN Weather Red Alert: டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
டிட்வா புயலால் சென்னையில் அதிகப்படியான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், நாளை 4 மாவட்டங்கள், நாளை மறுநாள் 6 மாவட்டங்களக்கு ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், வட தமிழகத்தை நோக்கி நகர்வதாகவும், இதனால் சென்னையில் அதிக மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், வரும் நாட்களுக்கான ரெட் அலெர்ட்டையும் அறிவித்துள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
“‘டிட்வா‘ புயல் வட தமிழகத்தை நோக்கி நகர்வு - சென்னையில் அதிக மழை இருக்கும்“
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா, ‘டிட்வா‘ புயல் உருவாகியுள்ளதை உறுதி செய்தார். அதோடு, இந்த புயல் வட தமிழகத்தை நோக்கி நகரும் என்று கூறிய அவர், இதனால் சென்னையில் அதிக மழை பொழிவிற்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.
நவ. 28-ம் தேதி 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
மேலும், டிட்வா புயலால் நாளை(28.11.25) நாகை, திருவாரூர், தஞ்சாவூர் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பிருப்பதால், ரெட் அலெர்ட் விடுக்கப்படுவதாக தெரிவித்தார். அதோடு, மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். தொடர்ந்து, கடலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளளது.
நவ. 29-ம் தேதி 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
இதேபோல், நாளை மறுநாள்(29.11.25) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்படுவதாக அமுதா தெரிவித்தார்.
மேலும், சென்னை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்டும், தஞ்சாவூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார்.
அதோடு, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அமுதா தெரிவித்தார்.
வடக்கு, வடமேற்கு நோக்கி நகரும் ‘டிட்வா‘ புயல்
தொடர்ந்து பேசிய அவர், டிட்வா புயல் வடக்க, வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும், வரும் 30-ம் தேதி வட தமிழகம், தெற்கு ஆந்திர கடல் பகுதியை நெருங்கும் எனவும் தெரிவித்தார்.
புயல் நெருங்கி வருவதால், சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் மழைப் பொழிவு அதிகரிக்கும் என கூறிய அவர், 30-ம் தேதி வாக்கில் சென்னையில் மிக கனமழை பெய்யக் கூடும் எனவும் கூறினார். மேலும், வட தமிழகத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.





















