Sengottaiyan: தவெகவில் இணைந்ததற்கு இது தான் காரணம்.! இளவல் விஜய் தலைமையில் ஆட்சி- செங்கோட்டையன் அதிரடி
தூய்மையான ஆட்சி தமிழ்நாட்டில் உருவாகவே, இளவல் விஜயின் தலைமையை ஏற்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறேன் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தவெகவில் இணைந்த செங்கோட்டையன்
அதிமுகவின் மூத்த நிர்வாகியாக இருந்த செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் இன்று தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இதனை தொடர்ந்து தவெக உறுப்பினர் அடையாள அட்டையை விஜய்யிடம் இருந்து செங்கோட்டையன் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்விற்கு பிறகு தவெகவில் இணைய காரணம் என்ன.? என செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் விளக்கினார். அதிமுக கட்சி தொடங்கிய போது எம்ஜிஆரால் அடையாளம் காணப்பட்டேன். தலைவருக்கு பின்னால் அணிவகுத்து நின்ற தொண்டர்களில் நானும் ஒருவன், அதிமுக தொடங்கிய போது பொதுக்குழுவிற்கான முழு பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். அப்போது தலைவர் பாராட்டும் வகையில் எனது பணிகள் இருந்தது. எம்ஜிஆர் என்னை கட்டி பிடித்து பாராட்டினார்.
எம்ஜிஆரால் அடையாளம் காணப்பட்டேன்
எம்ஜிஆர் மறைந்த பிறகு அதிமுக இரண்டாக பிளவு பட்டபோது ஜெயலலிதா தலைமையில் பயணப்பட்டேன், சுற்றுப்பயணமாக இருந்தாலும் ஆலோசனை கேட்ட போதும் உடன் இருந்து பணியாற்றியுள்ளேன். ஜெயலலிதாவால் பலமுறை பாராட்டப்பட்டேன், ஆனால் இன்று இருக்கும் நிலை வேறு, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஆட்சி நடத்தினோம். பல கூறுகளாக இயக்கம் பிரிந்தது. அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்று தான் கருத்துகள் கூறினேன்.
’நான் என்று ஒருவன் நினைத்தால் ஆண்டவன் பார்த்து கொள்வார்’ இது தான் இன்றைய சூழ்நிலை, இறைவன் கண்காணித்து கொண்டுள்ளார். என்னுடைய அதிமுக பயணத்தில் முதலில் எனது பொறுப்புகளை இருந்து எடுத்தார்கள். தேவர் ஜெயந்தி விழாவில் அதிமுக முன்னாள் நிர்வாகிகளை சந்தித்ததால் உறுப்பினர் பதவியையும் பறிக்கப்பட்டது. என்னுடையது மட்டுமல்ல எனது ஆதரவாளர்கள் பதவி நீக்கப்பட்டது. துக்க நிகழ்வில் கட்சி நிர்வாகியை சந்தித்ததற்காக அவரின் பதவியையும் பறிக்கப்பட்டுள்ளது.
தவெகவில் இணைந்தது ஏன்.?
இந்த நிலையில் தான் தவெகவில் இணைந்துள்ளேன். தவெக இணைந்துள்ளது ஏன் என கேள்வி எழுந்துள்ளது. த.வெ.க.வில் நான் இணைந்ததற்கு காரணங்கள் உண்டு. திமுகவும், அதிமுகவும் வேறு வேறு அல்ல; ஒன்றாக இணைந்து பயணிக்கிறார்கள். தூய்மையான ஆட்சி தமிழகத்தில் மலர்வதற்காக தமிழக வெற்றி கழகம் மாபெரும் இயக்கத்தை தொடங்கியுள்ளார் விஜய், பள்ளிக்குழந்தைகள் தங்களது பெற்றோரிடம், ”அப்பா, அம்மா, விஜய்க்கு ஓட்டு அளியுங்கள்” என்று கூறும் நிலை தமிழ்நாட்டில் தற்போது உள்ளது. தூய்மையான ஆட்சி தமிழ்நாட்டில் உருவாகவே இளவல் விஜயின் தலைமையை ஏற்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறேன்.
தமிழகத்தில் புதிய மாற்றம் வர வேண்டும், புனித ஆட்சி, தூய்மையான ஆட்சி வேண்டும், அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பயணமாக அமைந்துள்ளது. மக்கள் விஜய் அரசியல் பயணத்தை வரவேற்றுள்ளார்கள். 2026ஆம் ஆண்டு மக்களால் வரவேற்கப்படுகிற மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிற புனித ஆட்சி தவெக தலைவர் இளவல் விஜய் வெற்றி பெறுவார்கள், மக்களின் புரட்சி மூலம் வெற்றி பெறுவார் என செங்கோட்டையன் தெரிவித்தார்.






















