TN RED ALERT: ரெட் அலர்ட்... உடனே இந்த 12 மாவட்டங்களுக்கு செல்லுங்க- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
தமிழகத்தில் டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் 12 மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரியாக நியமித்துள்ளார்.

தமிழகத்தை நோக்கி வரும் புயல்
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில் டெல்டா மற்றும் வட மாவட்டங்களை குறி வைத்து புயல் நகர்ந்து வருகிறது. தெற்கு இலங்கை கடற்கரைப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Deep Depression) தற்போது புயலாக வலுபெற்றது. இதன் காரணமாக இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் – புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
இந்த நிலையில் நிவராண முகாம்களை தயார் நிலையில் வைத்தல், மாநில பேரிடர் மீட்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை தயார்நிலை, பேரிடரை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய ஆயத்த நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமைசெயலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன், வருவாய் துறை செயலாளர் அமுதா. காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மீட்பு பணி- முதலமைச்சர் உத்தரவு
தற்போது நிலவிவரும் வானிலை நிலவரம் குறித்தும், பேரிடர் மேலாண்மைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு முன்னெடுப்புகள் குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முகாம்களை தயார் நிலையில் வைத்தல், மாநில பேரிடர் மீட்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை தயார்நிலை, பேரிடரை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய ஆயத்த நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் விரைந்து அந்த அந்த மாவட்டங்களுக்கு செல்லும்படி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
1.திருவள்ளுர் மரு.கே.பி. கார்த்திகேயன், இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், எல்காட் நிறுவனம், சென்னை
2. காஞ்சிபுரம் கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், தாட்கோ, சென்னை
3. செங்கல்பட்டு கிரந்தி குமார் பாடி, இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், சென்னை
4. விழுப்புரம் எஸ்.ஏ. ராமன், இ.ஆப., இயக்குநர், தொழிலாளர் நலன், சென்னை
5. கடலூர் டி. மோகன், இ.ஆ.ப., இயக்குநர், சுரங்கம் மற்றும் கனிமவளம், சென்னை
6. மயிலாடுதுறை கவிதா ராமு, இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், கோ ஆப்டெக்ஸ், சென்னை
7. திருவாரூர் டி. ஆனந்த், இ.ஆ.ப., ஆணையர், ஆதிதிராவிடர் நலம், சென்னை
8. நாகப்பட்டினம் ஏ. அண்ணாதுரை, இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சென்னை
9. தஞ்சாவூர் எச். கிருஷ்ணனுன்னி, இ.ஆ.ப., தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம், சென்னை
10. கள்ளக்குறிச்சி பி. ஸ்ரீ வெங்கடபிரியா, இ.ஆ.ப., செயலாளர், மாநில தேர்தல் ஆணையம், சென்னை.
11. அரியலூர் எம். விஜயலட்சுமி, இ.ஆப., ஆணையர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி, சென்னை
12. பெரம்பலூர் எம். லட்சுமி, இ.ஆ.ப., ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நலம், சென்னை





















