Laal Salaam: “மதத்தை விட மனிதநேயம் தான் இந்த நாட்டின் அடையாளம்” - ரஜினிகாந்த் அதிரடி!
லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அவருடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ்வும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் அதில் இடம் பெற்றுள்ள வசனங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம் “லால் சலாம்”. பிப்ரவரி 9 ஆம் தேதி இப்படம் ரிலீசாகவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் முதன்மை கேரக்டரில் நடித்துள்ளனர். மேலும் நிரோஷா, ஜீவிதா, கே.எஸ்.ரவிகுமார், செந்தில், தம்பி ராமையா, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அவருடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ்வும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதனிடையே லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அதில் பேசப்பட்டுள்ள பல விஷயங்கள் பற்றி காணலாம்.
1992 ஆம் ஆண்டு தென் ஆற்காடு மாவட்டத்தில் இந்த கதையானது நடப்பதாக காட்டப்பட்டுள்ளது.கிராமத்தில் வாழும் ஆதிக்க மற்றும் கீழ் சாதி மக்களிடையே ஏற்படும் பிரச்சினையாக காட்சிகள் நகர்கிறது. தேர்தலில் கிடைக்கும் ஓட்டுகளை காரணம் காட்டி ஊர் திருவிழாவில் இரு பிரிவினரும் பங்கேற்க அங்கே பிரச்சினை வெடித்து கலவரமாகிறது.
இதனைத்தொடர்ந்து கூட்டம் சேர்க்கிறவனை விட, யார் பின்னாடி கூட்டம் சேருதோ அவன் ரொம்ப ஆபத்தானவன். இனிமேல் அவனை உயிரோடு விடக்கூடாது என்ற வசனத்தின் பின்னணியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அறிமுகமாகிறார். நீங்களே கோர்ட்டை மதிக்கலன்னா எப்படி பாய்? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட, நான் கோர்ட்டை மதிக்கலன்னு யார் சொன்னா?. ஆனால் உள்ளே இருக்கிற சில ஆட்கள் மேல எனக்கு நம்பிக்கையில்லன்னு சொல்றேன் என நிகழ்கால அரசியலையும் பேசுகிறார்.
மேலும் பையன் சம்பாதிச்சா வீட்டுக்கு பெருமை, சாதிச்சா நாட்டுக்கு பெருமை என அட்வைஸையும் பொழிகிறார். இதன் பின்னர் ட்ரெய்லரில், ‘எந்த ஊரு சாமியாக இருந்தாலும், யார் கும்பிடுற சாமியா இருந்தாலும் சாமி சாமி தான்’ என்ற அழுத்தமான வசனம் வைக்கப்படுகிறது.
இதனையடுத்து, ‘ஊருல வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டைப் போட்டுகிட்டு, அல்லாஹூ அக்பர்ன்னு 5 வேளை நமாஸ் பண்ணிகிட்டு சாந்தி, சமாதானம் பேசுற ஆளுன்னு நினைச்சியா. பம்பாய்ல பாய் ஆளே வேறடா’ என ரஜினியின் கேரக்டருக்கு ஒரு கெத்தான வசனம் இடம் பெறுகிறது. மேலும், ‘மதத்தையும் நம்பிக்கையும் மனசுல வை. மனிதநேயத்தை அதுக்குமேல வை. அதுதான் இந்த நாட்டோட அடையாளம்’ என அசத்தலான வசனங்களையும் ரஜினி பேசியுள்ளார். இந்த ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.