Taapsee Agony :இந்தி திரையுலகில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம்... நடிகை டாப்சி வேதனை ..
இந்தி திரையுலகில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் உள்ளதாக நடிகை டாப்சி கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த டாப்சி தற்போது இந்திக்கு போய் அங்கும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். இந்தி திரையுலகில் நடிகர் நடிகைகளை பாரபட்சமாக நடத்துவதாக ஏற்கனவே சர்ச்சைகள் எழுந்தன. வாரிசு நடிகர் நடிகைகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.
நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை இந்தியில் இருந்து ஒதுக்கியதால் ஹாலிவுட் சென்றேன் என்று கூறியிருந்தார். வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்தினாலேயே மன உளைச்சலில் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக நடிகை கங்கனா ரணாவத் குற்றம் சாட்டி இருந்தார். நடிகை ஹன்சிகா மோத்வானியும், தான் தென்னிந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்துவதால் இந்தியில் பேஷன் டிசைனர்கள் தன்னை ஒதுக்கியதாக வருத்தம் தெரிவித்திருந்தார். அவர் அளித்த பேட்டி ஒன்றில் , பாலிவுட் ஃபேஷன் டிசைனர்கள் நான் தென்னிந்திய நடிகை என்பதால் எனக்கு ஆடை கொடுக்க மறுத்தனர். கடந்த சில ஆண்டுகளாக அந்த நிலை மாறியிருப்பதாகவும் தெரிவித்தார். தற்போது அவர்களே ஆடை கொடுக்க முன்வந்ததாகவும் அதனை அமைதியாக ஏற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டார். தற்போது டாப்சியும் இந்தி திரையுலக அரசியலை சாடி உள்ளார்.
இதுகுறித்து டாப்சி அளித்துள்ள பேட்டியில் கூறியிருந்ததாவது "இந்தியில் நடிகர் நடிகைகள் பாரபட்சமாக நடத்தப்படுவது புதிய விஷயம் இல்லை. இங்கு வேண்டியவர் வேண்டாதவர் என்று பிரித்து பார்க்கும் நிலைமை இருக்கிறது. நடிக்க வருவதற்கு முன்பே எனக்கு இது தெரியும். தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே நடிக்க வாய்ப்பு கொடுப்பார்கள். சாதகமான நிலைமைகள் இல்லை என்றாலும் தொடர்ந்து சினிமாவில் இருக்க வேண்டும் என்று நினைத்தால் அது அவரவர் விருப்பம். வளர்ந்து விட்டால் யாரும் வெளியேற்ற முடியாது'' இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து இந்தி திரையுலகில் நடைபெறும் பாரபட்சம் குறித்து நடிகைகள் குற்றம்சாட்டி வருவது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க