(Source: ECI/ABP News/ABP Majha)
"அப்படியே காப்பி அடித்திருக்கிறார்கள்…", மலையாள திரைப்படத்தின் மீது குற்றம்சாட்டும் இயக்குநர்
நிறைய யோசித்து பின்னர் நிராகரித்த விஷயங்கள் கூட இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன என்று குறிப்பிடுவதற்கு காரணம் இரு திரைப்படத்திற்கும் கேமராமேன் 'தேனி ஈஸ்வர்' என்பதால்தான்
தனது 'ஏலே' திரைப்படத்தின் அழகியலை அப்படியே காப்பி அடித்து பதிவு செய்துள்ளதாக இயக்குனர் ஹாலிதா ஷமிம் மலையாள திரைப்படம் நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்தின் மீது குற்றம் சாட்டி ஒரு பேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார்.
ஏலே-நண்பகல் நேரத்து மயக்கம்
மலையாளத்தில் வித்யாசமான மேக்கிங்கிற்கு பேர்போன இயக்குனர் லிஜொ ஜோஸ் பெல்லிசேரி சமீபத்தில் மம்முட்டியை வைத்து நண்பகல் நேரத்து மயக்கம் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். அந்த திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ்-இல் இரு தினம் முன்பு வெளியானதில் இருந்து நல்ல வரவேற்புகளை பெற்று வருகிறது. கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேல் முழுக்க முழுக்க தமிழ் படமாகவே உள்ள இந்த படத்தில் ஒரு தமிழ்நாட்டு கிராமத்தில் நடப்பதே கதையாக உள்ளது. இந்த திரைப்படத்தில் தன்னுடைய ஏலே திரைப்படத்தில் இருந்து பல விஷயங்கள் திருடப்பட்டுள்ளதாக இயக்குனர் ஹாலிதா ஷமிம் தெரிவித்துள்ளார். ஏலே திரைப்படம் 2021 ஆம் ஆண்டில் வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். சமுத்திரக்கனி, மணிகண்டன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்த இந்த திரைப்படம் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ்-இல் வெளியாகியிருந்தது.
அதே கிராமத்தில் படப்பிடிப்பு
படத்தின் எல்லா அழகியலையும் திருடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று துவங்கும் இந்த பதிவில், தனது திரைப்படத்தின் லொகேஷன், வீடுகள், கதாபாத்திரங்கள் சற்றே மாற்றம் செய்யப்பட்டு பயணபடுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் அந்த பதிவில், "ஏலே படத்திற்காக ஒரு கிராமத்து மக்களை படப்பிடிப்பிற்காக தயார் செய்து முதன் முதலில் அக்கிராமத்தில் அவர்களையும் நடிக்க வைத்து படப்பிடிப்பு நடத்தினோம். அதே கிராமத்தில் 'நண்பகல் நேரத்து மயக்கம்' படமாக்கப்பட்டது மகிழ்ச்சியே. இருப்பினும், நான் பார்த்து பார்த்து சேர்த்த அழகியல் யாவும் இந்த படம் நெடுக களவாடப்பட்டிருப்பது, சற்றே அயற்சியை தருகிறது", என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள்
ஐஸ்காரர் இங்கே பால்க்காரர், செம்புலி இங்கே செவலை, Mortuary van பின்னே செம்புலி ஓடியது போல், இங்கே மினி பஸ் பின்னே செவலை ஓடுவது, நான் அறிமுகப்படுத்திய 'சித்திரை சேனன்' நடிகர்-பாடகர், ஏலே- வில் தான் ஏற்ற கலைக்குழு பாடகர் கதாபாத்திரம் போலவே, இங்கு மம்மூட்டி அவர்களுடன் பாடிக் கொண்டிருக்கிறார்.
அதே கேமரா மேன்
மேலும் "படமாக்கப்பட்ட வீடுகள்,பல முறை பார்த்து பின் படமாக்கப்பட வேண்டாம் என்று நிராகரித்த வீடுகள்- இவை யாவும் படத்தில் பார்த்தேன். நடக்கும் நிகழ்வுகள், பின்னே ஓடும் ஜாக்கி சான் பட வசனத்தோடு ஒத்துப்போவது போல், ஒப்பிட்டு சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றன! எனக்காக நான் தான் பேச வேண்டும், ஆதங்க பட வேண்டும் என்ற சூழலில் தவிர்க்க முடியாமல் இதை பதிவிடுகிறேன். நீங்கள் என் படத்தை புறக்கணிக்கலாம், ஆனால் என் ஐடியாவும், அழகியலும் திருடப்படுவதை பார்த்துக்கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியாது", என்று பதிவிட்டுள்ளார். அவர்கள் நிறைய யோசித்து பின்னர் நிராகரித்த விஷயங்கள் கூட திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன என்று குறிப்பிடுவதற்கு காரணம் அவர்கள் நிராகரித்தவைகள் ஏலே திரைப்படத்தின் கேமராமேன் தேனி ஈஸ்வருக்கு தெரியும் என்பதால்தான். ஏனென்றால் நண்பர்கள் நேரத்து மயக்கம் திரைப்படத்திற்கும் அவர்தான் கேமரா மேன் என்பது குறிப்பிடத்தக்கது.