Erode Election: 'என் உயிரோடு கலந்தது ஈரோடு; ஏன்?' - பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்..!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், இன்றுடன் பரப்புரை ஓய்கிறது. இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சி வேட்பாளரான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பேசியதாவது,
“உங்களைத் தேடி வந்திருக்கிறோம். உங்களை நாடி வந்திருக்கிறேன். உங்களிடம் கை சின்னத்தில் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் வேட்பாளராக உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டிக்கிற இளங்கோவனை கைச்சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித்தர வேண்டும்.
கை சின்னத்தில் வாக்களியுங்கள்:
கலைஞர் பள்ளிப்படிப்பை முடித்தது ஈரோட்டில்தான். கலைஞர் கல்லூரிபடிப்பை முடித்தது காஞ்சிபுரத்தில்தான். அப்படிப்பட்ட வரலாறு நிறைந்த இந்த ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கை சின்னத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று உங்களைத் தேடி வந்திருக்கிறேன்.
கருணாநிதி நாடகம் நடத்துவதற்காக புதுச்சேரி சென்றார். அப்போது அந்த நாடகத்தை நடத்தவிடாமல் அங்கிருந்த கலவரக்காரர்கள் நாடகத்தை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துகிறார்கள். இதையடுத்து, கலைஞர் கிளம்புகிறார். அப்போது, அஙகிருந்த கலவரக்கும்பல் கலைஞர் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தி, கலைஞர் இறந்துவிட்டார் என்று கருதி சாக்கடையில் வீசி தூக்கியெறிந்து சென்றுவிட்டு சென்றனர்.
இதுதான் வரலாறு:
இந்த செய்தி பெரியாருக்கு செல்கிறது. அப்போது, இதையறிந்த பெரியார் ஓடியோடி வந்து கலைஞரை காப்பாற்றி தன் மடியில் படுக்க வைத்து காயம் பட்ட இடத்திற்கு எல்லாம் மருந்து போட்டார். மேலும், காயம் போட்ட கையோடு நீ இங்கு இருக்க வேண்டாம். என்னுடன் ஈரோட்டிற்கு வா என்று அழைத்து வந்து குடியரசு பத்திரிகையில் துணை ஆசிரியர் பணியை வழங்கினார்கள்.
அப்படிப்பட்ட வரலாற்றுக்குரிய திராவிட இயக்கத்தின் மிகச்சிறந்த சொல்லின் செல்வராக விளங்கியவர் ஈ.வி.கே.சம்பத். இந்த பகுதிக்கு பெயர்தான் சம்பத்நகர் என்று கேள்விபட்டேன். சம்பத் நகரில் சம்பத் மகன் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஓட்டு கேட்டு வந்துள்ளேன். சம்பத் சொல்லின் செல்வர். தந்தை பெரியாரின் அண்ணன் மகன். ஈ.வி.கே.எஸ். சம்பத்தின் திருமகன்தான் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். ஈ.வி.கே.சம்பத் மகனுக்கு கலைஞரின் மகன் ஓட்டு கேட்டு வந்துள்ளேன். இதுதான் வரலாறு.
யாருக்கும் வரக்கூடாத சூழல்:
இந்த இடைத்தேர்தல் ஏன் வந்தது? எப்படிப்பட்ட நிலையில் வந்தது? என்று நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த தொகுதியில் நமது காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக நின்ற அருமைத்தம்பி திருமகன் ஈவெரா பெருவாரியான வெற்றி பெற்று சட்டசபைக்கு அனுப்பி வைத்தீர்கள். அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய பணி, தொகுதி மக்களுக்காக அவையில் பேசிய பேச்சு, இந்த தொகுதிக்கு பாடுபட்டிருக்கும் நல்ல காரியங்களை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
46 வயதே ஆன ஒரு இளைஞன் மிகத்தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்தபோது சிறப்பாக கட்சிக்கு மட்டுமில்ல இந்த தொகுதிக்கும், சமுதாயத்திற்கும் பணியாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மரணம் அடைந்தார். அந்த செய்தி கேட்டு இந்த தொகுதி மக்கள் எல்லாம் மிகுந்த வேதனை அடைந்தனர் என்பதை நான் நன்றாக அறிவேன். எப்போதும் தந்தை இறந்து அந்த இடத்தை பூர்த்தி செய்ய மகன் வருவார். ஆனால், நமது சூழல் யாருக்கும் வரக்கூடாத சூழ்நிலை. மகன் இறந்து தந்தையான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வந்துள்ளார். இதைப்புரிந்து கொண்டு நீங்கள் மாபெரும் வெற்றியைத் தேடித்தர வேண்டும்.”
இவ்வாறு அவர் பேசினார்.