Parasakthi: ஒரு கை பார்க்கலாம்.. பராசக்தி ரிலீஸ் தேதி மாற்றம்.. விஜய்யுடன் நேரடி மோதல்!
ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனை எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்த நிலையில் பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டபோதே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஜனநாயகன் vs பராசக்தி
2026ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய சோகம் காத்திருக்கிறது. அரசியலில் களம் கண்டுள்ள முன்னணி நடிகரான விஜய் தனது கடைசி படமான “ஜனநாயகன்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஜனவரி 9ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, நரேன், பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதேபோல் பொங்கல் வெளியீட்டை பராசக்தி படம் உறுதி செய்துள்ளது. டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா என பலரும் நடித்திருக்கும் இப்படத்தை சுதா கொங்காரா இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
ரிலீஸ் தேதியில் மாற்றமா?
இந்த நிலையில் ஜனநாயகன், பராசக்தி ஆகிய இரு படங்களின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழா டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. அதேசமயம் பராசக்தி படத்தின் முன்கட்ட பணிகளும் சென்று கொண்டிருக்கிறது. இதனால் 2 படங்களின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.
அதேசமயம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனை எதிர்பார்த்து காத்திருக்கிறது. பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டபோதே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் படம் 5 நாட்கள் கழித்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதால் அது முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற படக்குழு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி ஜனவரி 14ம் தேதியில் இருந்து ஜனவரி 9 அல்லது 10ம் தேதிக்கு ரிலீஸ் தேதியை மாற்றவுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு செய்தால் நிச்சயம் இரண்டு படத்துக்கும் தியேட்டர்கள் கிடைக்காமல் பிரச்னை ஏற்படலாம் எனவும் சொல்லப்படுகிறது. விஜய், சிவகார்த்திகேயன் ஆகிய இரு நட்சத்திரங்களின் படங்களுக்கும் பேமிலி ஆடியன்ஸ் வருகை தருவார்கள். அதேசமயம் விஜயின் கடைசி படம் என்பதால் அதற்கே பலரும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். எனவே பராசக்தி படத்தின் வசூல் பாதிக்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது. இப்போதே இரண்டு படத்துக்கும் தியேட்டர் புக்கிங் நடைபெற்று வருகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.





















