Yugendran : என்னோட முதல் டூயட் பவதாவோடுதான்..பவதாரிணி குறித்து பாடகர் யுகேந்திரன்
தனது முதல் டூயட் பாடலை தான் பவதாரிணியுடன் பாடியதாக பாடகர் யுகேந்திரன் தெரிவித்துள்ளார்.
![Yugendran : என்னோட முதல் டூயட் பவதாவோடுதான்..பவதாரிணி குறித்து பாடகர் யுகேந்திரன் singer yugendran says he sang his first duet with late singer bhavatharini Yugendran : என்னோட முதல் டூயட் பவதாவோடுதான்..பவதாரிணி குறித்து பாடகர் யுகேந்திரன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/26/2a270f73d8cb7c00cc9ba8e0fbcecca51706269674327572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாடகி பவதாரிணி புற்று நோயால் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து அவருடனான தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார் பாடகர் யுகேந்திரன்.
இசையுலத்தில் நிகழ்ந்த சோகம்
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணிப் பாடகியுமான பவதாரிணி (Bhavatharini) நேற்று (ஜன.25) காலமானார்.
47 வயதான பவதாரணி (Bhavatharini) புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இலங்கைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி நேற்று மாலை 5.30 மணிக்கு அவர் உயிரிழந்த நிலையில், பவதாரிணியின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது இறப்புக்கு திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.
எனது முதல் டூயட் பவதாவுடன்தான்
இப்படியான நிலையில் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனான பாடகர் யுகேந்திரன் பவதாரிணியுடனான தனது குழந்தை பருவ நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார். யூடியூப் சானல் ஒன்றில் பேசிய அவர் “நான் இப்போது நியுசிலாந்தில் இருக்கிறேன். அதிகாலை நான்கு மணிக்கு பவதாரிணி இறந்த செய்தி எனக்கு வந்து சேர்ந்தது. இந்த செய்தி கேட்டதில் இருந்து எங்கள் இருவருக்குமான நினைவுகள் ஒவ்வொன்றாக மனதில் ஓடிக் கொண்டிருக்கின்றன. நான் வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா, பவதா நாங்கள் எல்லாம் குழந்தைப் பருவத்தில் பெரும்பாலான நேரங்களை ஒன்றாக செலவிட்டிருக்கிறோம். இளையராஜா அவர்களை நான் ராஜா மாமா என்று தான் அழைப்பேன்.
சின்ன வயதில் நான் அடிக்கடி ராஜா மாமா வீட்டிற்கு கிளம்பி சென்றுவிடுவேன் . அங்கு ராஜா மாமாவின் தந்தை எங்கள் அனைவருக்கும் கதைகள் சொல்வார். நாங்கள் அனைவரும் சேர்ந்து கச்சேரிகளுக்கு சென்றிருக்கிறோம் . பாடல்கள் பாடியிருக்கிறோம். சமீபத்தில் நான் சென்னை வந்திருந்தபோது கூட பவதாவை சந்திக்க நினைத்தேன் ஆனால் அது முடியாமல் போனது இப்போது யோசித்து பார்க்கும் போது அன்று நான் அவரை சந்தித்து பேசியிருக்க வேண்டும் என்று வருத்தமாக இருக்கிறது.
எனக்கும் பவதாவுக்கும் நிறைய நினைவுகள் இருக்கின்றன. அதில் குறிப்பிட்டு சொல்லும்படியான ஒரு நிகழ்வு என்றால் பூஞ்சோலை என்கிற படத்திற்காக நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு டூயட் பாடலை பாடினோம். அது தான் நான் பாடிய முதல் டூயட். வெங்கட் பிரபு அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்த படம் வெளியாகவில்லை ஆனால் இந்தப் படத்தின் பாடல்கள் இப்போது கூட ஸ்பாடிஃபையில் இருக்கிறது.” என்று யுகேந்திரன் கூறினார்.
எங்களுக்கு தனி அடையாளம் இருக்கு
தொடர்ந்து பேசிய யுகேந்திரன் “ பவதாரிணி சொந்தமாக நிறைய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவரை இளையராஜாவின் மகள் என்று மட்டுமே அடையாளப்படுத்தக் கூடாது. எங்களது தந்தைகளின் வழியாக எங்களுக்கு ஒரு அங்கீகாரம் இருக்குதான் ஆனால் எங்களை எங்களது திறமைகள் சார்ந்து அடையாளப்படுத்துங்கள். பவதாரிணியை அவரது இசை வழியாக அடையாளப்படுத்த வேண்டும் . மேலும் அவரது இறப்பு குறித்து போதுமான தகவல்களை தெரிந்துகொண்ட பின்பே ஊடகங்கள் செய்தி வெளியிடும் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். தவறான செய்திகளை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள். ஒருவர் இறந்துபோன பின் அவரை நிம்மதியாக வழியனுப்ப நாம் இதை செய்ய வேண்டும் “ என்று அவர் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)