Shah Rukh Khan: ஷாருக்கானின் 'மன்னத்' பங்களாவில் பிரம்மாண்ட கிருஷ்ணர் சிலை... பலரும் அறிந்திராத சுவாரஸ்யத் தகவல்!
ஒப்பனை, சமையல் அறைகள், நீச்சல் குளம், மினி தியேட்டர், மினி ரெஸ்டாரண்ட், ஜிம், நூலகம் என அனைத்தும் இருக்கும் ஷாருக்கானின் மன்னத் வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.200 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
Shah Rukh Khan: மும்பையில் உள்ள ஷாருக்கானின் மன்னத் வீட்டில் மார்பிளில் செய்யப்பட்ட ராதை கிருஷ்ணனின் மிகப்பெரிய சிலை இருப்பதாக பாலிவுட் நடிகர் குல்ஷன் தேவய்யா தெரிவித்துள்ளார்.
ஷாருக்கானின் மன்னத் இல்லம்:
அண்மையில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆக்ஷன்களில் அதிரடி காட்டும் ஜவான் படம் பாக்ஸ் ஆபிசில் ரூ.900 கோடிகளைக் கடந்துள்ளது. ஜவான் ரிலீசானது முதல் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மும்பையில் உள்ள பிரபலமான ஷாருக்கானின் வீடு குறித்த செய்தி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 2001ஆம் ஆண்டு ரூ.13 கோடிக்கு மும்பையில் இருக்கும் மன்னத் இல்லத்தை ஷாருக்கான் வாங்கினார். 6 அடுக்கு மாடிகளைக் கொண்ட அரண்மனை போன்ற இந்த பிரமாண்ட வீட்டைக் காண, ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் மன்னத் இல்லத்தின் மாடியில் இருந்து தனது ரசிர்களுக்கு ‘தரிசனம்’ தருவதை ஷாருக்கான் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அவரது பிறந்த நாள், புது படங்களின் ரிலீஸ், பண்டிகை போன்ற நாட்களில் மன்னத் இல்லத்தில் ஷாருக்கானை காண்பதற்காகவே ரசிகர்கள் கூட்டமாகக் காத்திருப்பார்கள்.
மினி தியேட்டர் முதல் ரெஸ்டாரண்ட் வரை...
அரண்மனை போன்ற இல்லத்தில், 5 படுக்கை அறைகள் இருப்பதாகவும், அதில் முன்னறை எம்.எஃப். ஹூசேனின் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஒப்பனை அறைகள், சமையல் அறைகள், நீச்சல் குளம், மினி தியேட்டர், மினி ரெஸ்டாரண்ட், ஜிம், நூலகம் என அனைத்தும் இருக்கும் மன்னத் வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.200 கோடி இருக்கும் என கணிக்கப்படுகிறது. இந்த வீட்டின் பிரம்மாண்டத்தைப் பார்க்க ரசிகர்கள் மட்டும் இல்லாமல் திரை பிரபலங்களும் பெரிதும் ஆசைப்படுவார்களாம்!
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றிற்காக ஷாருக்கானின் மன்னத் வீட்டிற்கு சென்ற பிரபல பாலிவுட் நடிகர் குல்ஷன் தேவய்யா, மன்னத் இல்லம் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில், ஷாருக்கானின் பிரமாண்ட வீட்டை பல பொருட்கள் அலங்கரித்துள்ளன. அதில் பிரமாண்டமாக மார்பிள் கல்லில் செய்யப்பட்ட கிருஷ்ணர் - ராதை சிலை இருப்பதாகவும், அலங்கார விளக்குகளின் ஒளியில் வீடு ஜொலிப்பதாகவும் கூறியுள்ளார்.
இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஷாருக்கான், அவரது மனைவி கௌரியை மதம் கடந்து காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் கான், ஆப்ரம் கான் எனும் இரண்டு மகன்களும் மற்றும் சுஹானா கான் எனும் மகளும் உள்ளனர்.
ஷாருக்கான் இந்து மற்றும் இஸ்லாம் மத சம்பிரதாயங்கள் என இரண்டையும் கடைபிடித்து வருகிறார். மெக்காவுக்கு ஹஜ் உம்ரா சென்று வருவதை வழக்கமாகக் கொண்ட ஷாருக்கான், அண்மையில் ஜவான் பட ரிலீஸை ஒட்டி திருப்பதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இந்த நிலையில் அவரது இல்லத்தில் ராதை - கிருஷ்ணனுக்காக பிரம்மாண்ட சிலை இருப்பதாக வெளியான தகவலை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Leo: கோட்சூட் கூட மாறல... ஹாலிவுட் பட போஸ்டர்களின் காப்பியா... லியோ பட போஸ்டர்களை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!
Kajal Aggarwal Photos : கணவருடன் தங்க போல் ஜொலிக்கும் காஜல் அகர்வால்!