”இது போதும் எனக்கு, இது போதுமே!” - கமல்ஹாசன் படத்தில் இணைந்த மகிழ்ச்சியில் சாண்டி மாஸ்டர்..!
"இது என் கெரியர்ல மிகப்பெரிய மைல் கல்லா இருக்கும். உங்க கூட வேலை செய்வது எனக்கு மிகப்பெரிய அனுபவமா இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை சார்."
வளர்ந்து வரும் இளம் இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்ற எதார்த்த கதைக்களம் கொண்ட படம் மூலமாக சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார். அதன் பிறகு கார்த்தியை வைத்து வித்தியாசமான ஆக்ஷன் படமாக ‘கைதி’- யை உருவாக்கியிருந்தார். அதன் பிறகு விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்தது. இந்நிலையில்தான் நடிப்பு ஜாம்பவான்களாக பார்க்கப்படும் கமல்ஹாசன், விஜய் சேதுபது , ஃபஹத் பாஸில் உள்ளிட்ட நடிகர்களை ஒரு ஃபிரேமுக்குள் அடைக்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளார். ‘விக்ரம் ‘ என பெயர் வைக்கப்பட்ட இந்த படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாகி பாலிவுட் வரையில் பேசப்பட்டது. சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருந்தார்.அதில் பஹத் பாஸிலும், விஜய் சேதுபதியும் உள்ளனர். இருவரும் கேமராவைப் பார்த்து நிற்பதுபோல அப்படம் இருக்கிறது. அதற்கு கேப்ஷனாக ‘பேரின்பம்’ என ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தார்.அது இணையத்தில் வைரலானது.
Absolute Bliss ✨@ikamalhaasan @VijaySethuOffl #FahadhFaasil @RKFI #Vikram#vikramsecondschedule pic.twitter.com/BVegxNoC86
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 25, 2021
படத்தில் சண்டை இயக்குநராக அன்பறிவு மாஸ்டர் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் நடன இயக்குநராக சாண்டி மாஸ்டர் களமிறங்கியுள்ளார். இது குறித்த அறிவிப்பை சாண்டி மாஸ்டர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.” எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி சார். விக்ரம் படத்துல கமல் சார் கூட வேலை செய்யப்போறேன் அதுவும் அவருக்கு நடன இயக்குநரா! இது என் கெரியர்ல மிகப்பெரிய மைல் கல்லா இருக்கும். உங்க கூட வேலை செய்வது எனக்கு மிகப்பெரிய அனுபவமா இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை சார். லவ் யூ தல! லோகேஷ். நம்ம ஒன்னா சேர்ந்து இன்னும் பல படங்களையும் , நினைவுகளையும் உருவாக்குவோம்! “ என குறிப்பிட்டு கமல்ஹாசனையும் , லோகேஷ் கனகராஜையும் டேக் செய்துள்ளார்.முன்னதாக பிக்பாஸ் நிகழ்சியின் ப்ரமோவை சாண்டி இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
விக்ரம் படத்தை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரித்து வருகிறது. படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கவுள்ளார். கிரிஷ் கங்காதரன் படத்திற்கான ஒளிப்பதிவை செய்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய முந்தைய படமான மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் ரசிகர்களுக்காக சில மாறுதல்களை செய்தாராம் லோகேஷ் . ஆனால் விக்ரம் படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜின் திரைப்படமாக இருக்கும் என விக்ரம் படத்தின் கதாசிரியர்களுள் ஒருவரான ரத்ன குமார் கூறியிருந்ததும் நினைவுக்கூறத்தக்கது. உச்ச நடிகர்களின் கூட்டணி என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு ஹைப்பில் உள்ளது.