என் படத்தின் நடிகர்களுக்கு பெருந்தன்மை அதிகம்: இயக்குநராக எஸ்.ஜே.சூர்யா பகிர்ந்த ஃப்ளாஸ்பேக்...
என் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகளுக்கு பெருந்தன்மை அதிகம் என்று நடிகர் எஸ்.ஜே.சூர்யா கூறியிருக்கிறார். இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் இப்படி பல முகங்கள் எஸ்.ஜே.சூர்யாவுக்கு உண்டு.
என் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகளுக்கு பெருந்தன்மை அதிகம் என்று நடிகர் எஸ்.ஜே.சூர்யா கூறியிருக்கிறார். இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் இப்படி பல முகங்கள் எஸ்.ஜே.சூர்யாவுக்கு உண்டு. வில்லன், கவுரவ தோற்றம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்து ரசிகர்களின் மனதை கவர்பவர். மாநாடு படம் வரை அதை நிரூபித்திருக்கிறார்.
1966இல் அப்போதைய நெல்லை மாவட்டமான வாசுதேவநல்லூரில் பிறந்தவர். அவரது பெயர் எஸ். ஜஸ்டின் செல்வராஜ். சினிமாவுக்காக எஸ்.ஜே.சூர்யா என மாற்றிக் கொண்டார். சென்னை லயோலோ கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்ற அவருக்கு சினிமாவில் நடிகராக வேண்டுமென ஆசை. அதற்காக பல முயற்சிகளை செய்த அவருக்கு இயக்குநர் பாக்கியராஜுக்கு உதவியாளராக பணி செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அஜித் நடித்த உல்லாசம் படத்தில் உதவி இயக்குநராக பயணியாற்றியுள்ளார். அந்தப் படத்தின் ஷுட்டிங்கின் போதுதான் ‘வாலி’ படத்தின் கதையை சொல்லி, அதை அஜித்தை வைத்து இயக்குவதற்கான வாய்ப்பையும் பெற்றார். வாலி படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினம் தன் கம்பனிக்கு ஒரு படத்தை இயக்கும்படி எஸ்.ஜே. சூர்யாவை கமிட் செய்தார். அதன் மூலம் உருவானது தான் குஷி.
அஜித், விஜய்... அடுத்தடுத்து சக்சஸ் என டாப் கியரில் சென்றார் எஸ்.ஜே.சூர்யா. அடல்ட் காமடி ஜானராக வெளிவந்த நியூ படமும் தமிழ் சினிமாவுக்கு புதிதானதே.
அப்படிப்பட்ட எஸ்.ஜே.சூர்யா, முன்பு ஒரு பேட்டியில் தன்னைப் பற்றியும் தன் படைப்புகள் பற்றியும் பேசியிருக்கிறார். அந்த ஃப்ளாஷ்பேக் வீடியோவைப் பார்த்துப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
அதில் எஸ்.ஜே.சூர்யா பேசியிருப்பதாவது:
நான் இயக்கிய படங்களில் எனக்குக் கிடைத்த நடிகர்கள், நடிகைகள் பெருந்தன்மையானவர்கள். ஒரு இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதை உள்வாங்கி அப்படியே நடிப்பது என்பது பெருந்தன்மை. அதனால் தான் உங்களுக்கு எனது நாயகிகளின் நடிப்பில் என் சாயல் தெரிந்திருக்கும். அஜித் சார், விஜய் சார் எல்லோருமே அப்படி வாஞ்சையோடு நடித்துக் கொடுத்தனர். ஃபீல் குட் மேன் என்ற ஆங்கிலப் படத்தில் டாம் க்ரூஸ் நடிப்பை மேற்கோள் காட்டி குஷி படத்தில் விஜய்க்கு காட்சிகள் சொல்லியிருப்பேன். அதை அவரும் அப்படியே உள்வாங்கிக் கொண்டு நடித்திருக்கிறார். அத்தனை சிறப்பான நடிப்பு. அவர்களுக்கெல்லாம் தான் நன்றி சொல்ல வேண்டும். எனக்கு ஆரம்பத்தில் இருந்தே நடிகனாக வேண்டும் என்று தான் ஆசை. நான் நடிக்க ஆரம்பித்தபோது, முதல் நாள் ஃபோட்டோ ஷூட்டே பிரம்மாண்டமாக நடந்தது. சிம்ரன் இருந்தார். மனிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த ஆடைகள் அணிந்து கொண்டேன். பெஸ்ட் ஃபோட்டோகிராஃபர் தான் ஃபோட்டோ ஷூட் செய்தார். அதை நான் மகிழ்ச்சியாக செய்தேன்.
இவ்வாறு எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.