Redin Kingsley | ’கொரோனா டைம்ல கூட சம்பளம் கொடுத்தாரு ‘ - நடிகர் கிங்ஸிலி ப்ரேக் செய்த சீக்ரெட்!
“என்ன கோமதிக்கா ... வலிக்குதா? “ என முகத்தை சுருக்கிய மாதிரியான தொனியில் கேட்டிருப்பார் கிங்ஸ்லி.
தமிழ் சினிமா அவ்வப்போது சினிமாவிற்கு புதுப்புது கலைஞர்களை அறிமுகப்படுத்தி வருகிறது அந்த வகையில் நெல்சன் அறிமுகப்படுத்திய ரெடின் கிங்ஸ்லியும் ஒருவர். கோலமாவு கோகிலா மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானாலும் முன்னதாக அவள் வருவாளா திரைப்படத்தின் பாடல் ஒன்றிலும் குழுவில் நடன கலைஞராக இருந்திருக்கிறார். அதன் பிறகு சொந்தமாக நடன பள்ளி ஒன்றை தொடங்கி , ஈவெண்ட்ஸ்களை எடுத்து நடத்தி வந்திருக்கிறார். அதே போல தீவுத்திடன் பொருட்காட்சிகளின் ஆர்கனைஸராகவும் இருந்திருக்கிறார். இப்படியான சூழலில்தான் இயக்குநரான , நெல்சன் கல்லூரி மாணவராக அறிமுகமாகியிருக்கிறார். நெல்சன் முதன் முறையாக இயக்கவிருந்த திரைப்படம் வேட்டை மன்னன் , இந்த திரைப்படத்தில் காமெடியனாக நடித்திருந்தாராம் கிங்ஸ்லி . ஆனால் அந்த படம் பாதியிலேயே தடைப்பட்டது.
அதன் பிறகு கோலமாவு கோகிலாவில் நடித்து பலரின் கவனத்தை பெற்றார். அந்த படம் வெளியான சமயத்தில் மக்களோடு மக்களாக திரையரங்கில் படம் பார்க்க சென்ற கிங்ஸ்லியை மக்கள் சூழ்ந்து செல்ஃபி எடுத்த ஃபேம் மொமண்ட் தன் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று என்கிறார் கிங்ஸ்லி . டாக்டர் திரைப்படத்தில் கிங்ஸ்லியின் வசனம் இன்றைக்கும் ரீல்ஸை கலக்கி வருகிறது. “என்ன கோமதிக்கா ... வலிக்குதா? “ என முகத்தை சுருக்கிய மாதிரியான தொனியில் கேட்டிருப்பார் கிங்ஸ்லி. இதெல்லாம் எப்படி செய்கிறீர்கள் என கேட்டதற்கு இதற்கெல்லாம் காரணம் இயக்குநர் நெல்சன். அவரும் நானும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் பேசுவோம். அவர் என்ன சொல்லிக்கொடுக்கிறாரோ அதைத்தான் நான் திரையில் செய்கிறேன் என்கிறார்.
கிங்க்ஸ்லி எல்.கே.ஜி , கூர்கா, ஏ1, ஜாக்பாட், நெற்றிக்கண் உள்ளிட்ட பல படங்களில் பகுதி காமெடியனாக நடித்திருக்கிறார். குறிப்பாக சந்தானத்துடன் நடித்த ஏ1 படத்தின் அனுபவம் குறித்து பேசிய கிங்ஸ்லி , சந்தானம் சார் லொல்லு சபா மூலமா அறிமுகமானவர். அப்போ இருந்த தனது சக நடிகர்களுடன்தான் , இப்போது வரை பயணிக்கிறார். பலருக்கும் தனது படங்கள் மூலமாக வாய்ப்புகளை கொடுத்து வருகிறார்.
சந்தானம் சார் அலுவலகத்துல அவரின் ஆரம்ப காலத்தில் உடன் இருந்த நண்பர்கள் , பள்ளி நண்பர்கள் உள்ளிட்டவர்கள்தான் இருப்பாங்க. அந்த அளவுக்கு அவர் எல்லோரையும் தன்னோட பயணத்துல மாற்றாம வச்சிருக்காரு. கொரோனா ஊரடங்கு சமயத்துல வேலை இல்லாவிட்டாலும் , அவங்க அனைவருக்கும் சம்பளம் கொடுத்தாராம். அதுமட்டுமல்லாம ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி , பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பரிசுகள் எல்லாம் கொடுப்பாராம் , தனது அலுவலக நண்பர்களை குடும்பத்துடன் டூர் அழைத்து செல்வது என தனது சொந்த குடும்பத்தை கவனித்துக்கொள்வதுபோல கவனித்துக்கொள்கிறாராம் சந்தானம் . இந்த காலத்தில் யார் இதையெல்லாம் செய்கிறார்கள் என மெச்சுகிறார் கிங்ஸ்லி.