Rajinikanth | மனசுக்கு நெருக்கம்.. இளையராஜாவை அடிக்கடி சந்திக்கும் ரஜினி.. பின்னணி இதுதான்..!
இளையராஜா ஸ்டுடியோ மனதிற்கு நெருக்கமாகி விட்டதால் அடிக்கடி அங்கு சென்று இளையராஜாவை சந்தித்து வருகிறாராம் ரஜினிகாந்த்
கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி என பன்மொழிகளில் அவர் இசையமைத்துள்ளார். இதில் நேரடி படங்கள், டப்பிங் படங்கள், இசையமைத்து ரிலீசாகாத படங்கள், அடுத்து ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படங்கள் என இதுவரை மொத்தம் 1416 படங்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. இந்தநிலையில் அவரது இசையில் உருவாகும் 1417 படமாக ‘நினைவெல்லாம் நீயடா’ என்கிற படம் உருவாகிறது.
இசைஞானியின் இசையில் உருவாகும் இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குநர் ஆதிராஜன். இசைஞானி இளையராஜா கடந்த பிப்ரவரி மாதம் சென்னை கோடம்பாக்கத்தில் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கினார். “இளையராஜா ஸ்டுடியோ” என்ற பெயரிடப்பட்ட அந்த ஸ்டுடியோவில் படங்களுக்கு இசையமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இளையராஜா ஸ்டூடியோ தொடங்கியதும், நடிகர் ரஜினி, விஜய் சேதுபதி, வெற்றிமாறன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் ஸ்டூடியோவிற்கு நேரில் சென்று அடிக்கடி இளையராஜாவை சந்தித்து வருகிறார்.
கொரோனா ஊரடங்குக்கு பின்னர் தொடங்கிய ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு படக்குழுவில் சிலருக்கு கொரோனா பரவியதால் நிறுத்தப்பட்டது. அரசியல் ஓய்வு அறிக்கைக்கு பிறகு வெளியில் வராமல் இருந்த ரஜினி தனுசின் புது வீட்டு பூஜை, இளையராஜாவின் புது ஸ்டூடியோவுக்கு வருகை இரண்டுக்கு மட்டும் வெளியில் வந்தார். இளையராஜாவின் புது ஸ்டூடியோ ரஜினியின் மனதுக்கு நெருக்கமான இடமாகி விட்டதாம். வாரத்துக்கு ஒரு முறையாவது இளையராஜா ஸ்டூடியோவுக்கு சென்று வருகிறார். இளையராஜாவுடன் மணிக்கணக்கில் மனம்விட்டுப் பேசுகிறாராம். “நான் அடிக்கடி இங்கு வருவது உங்களுக்குத் தொந்தரவா இல்லையே...” எனக் கடந்த வாரம் ரஜினி கேட்க, “நீங்க வர்றது எனக்கு அவ்வளவு ஆறுதலா இருக்கு” என்றாராம் இளையராஜா.
சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'அண்ணாத்தே' நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். டி.இமான் இசையில் இந்தப் படத்தில் இருந்து எஸ்.பி.பி பாடிய அண்ணாத்த மற்றும் சாரைக் காற்றே பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த திரைப்படம் தீபாவளி வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. படத்தின் வெளியீட்டு வேலைகள் சென்றுகொண்டிருப்பதால், ரஜினிகாந்த் நிறைய நேரங்களை ஆசுவாசமாக செலவிட்டு வருகிறாராம். அண்ணாத்தே வெளியீட்டுக்கு பின்னரே அடுத்து நடிக்கவிருக்கும் 169 ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த திரைப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்குகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது