P. Vasu Birthday: என்றென்றும் சின்னதம்பி! குடும்பங்கள் கொண்டாடும் படங்களை கொண்ட இயக்குநர் பி.வாசு!
ரஜினியுடன் மீண்டும் ஒன்று சேர்ந்த பி.வாசு மன்னன், உழைப்பாளி, பிரபு நடித்த சின்னத்தம்பி, சத்யராஜியின் வால்டர் வெற்றிவேல், நடிகன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்
P. Vasu Birthday: குறைந்த பட்ஜெட்டில் குடும்பங்கள் கொண்டாடும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்கும் படங்களை இயக்குபவர் என்ற பெருமையை கொண்ட இயக்குநர் பி.வாசு இன்று தனது 68 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப படங்களை எடுப்பதில் வல்லவரான பி.வாசு, ஒரு படத்தில் ஆக்ஷன், சென்டிமெண்ட், நகைச்சுவை, நல்ல கதை என அனைத்தையும் தவறாமல் கொடுத்து வசூலில் சாதனை படைப்பவர். நடிகனாக வேண்டும் என்ற ஆசையுடன் சினிமாவுக்குள் வந்த வாசுவுக்கு, இயக்குநரிடம் உதவியாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.
1977ம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்த நண்பன் படத்தில் உதவியாளராக பணிபுரிந்தார் பி. வாசு. அடுத்து சில படங்களில் உதவி இயக்குநராக இருந்த இவர், 1981ம் ஆண்டு வெளிவந்த பன்னீர் புஷ்பங்கள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்ததாக மதுமலர், மெல்ல பேசுங்கள், சிவாஜி மற்றும் பிரபு நடித்த நீதியின் நிழல் படங்களை பாரதி வாசு என்ற பெயரில் எழுதி இயக்கி இருந்தார்.
இத்தனை படங்களையும் நண்பருடன் இணைந்து இயக்கிய வாசு, 1988ம் ஆண்டு முதல்முதலாக பிரபு நடிப்பில் வெளிவந்த என் தங்கச்சி பச்சவ படத்தை தனியாக இயக்கினார். தொடர்ந்து விஜயகாந்த் நடித்த பொன்மனச்செல்வன், சத்தியராஜ் நடித்த வாத்தியார் வீட்டு பிள்ளை படங்களை இயக்கி முதன்மை இயக்குநராக உயர்ந்தார். இதனால் 1990ம் ஆண்டு முதன் முதலாக ரஜினியை வைத்து பணக்காரன் படத்தை இயக்கும் வாய்ப்பு வாசுவுக்கு கிடைத்தது. இதன் மூலம் உச்சக்கட்ட நட்சத்திரங்களை வைத்து படம் எடுக்கும் வாய்ப்பு வாசுவுக்கு கிடைத்தது.
ரஜினியுடன் மீண்டும் ஒன்று சேர்ந்த வாசு மன்னன், உழைப்பாளி, பிரபு நடித்த சின்னத்தம்பி, சத்யராஜியின் வால்டர் வெற்றிவேல், நடிகன் போன்ற படங்களை இயக்கி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றார். வால்டர் வெற்றிவேல், சாது, மலபார் போலீஸ், தொட்டால் பூ மலரும் படங்களை இயக்கியதுடன், தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார். ரஜினி, விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுத்து மகுடம் சூடிய இயக்குநராக வலம் வந்தார்.
இயக்குநர், தயாரிப்பாளர் என்று மட்டும் இல்லாமல் வல்லரசு, சுந்தரா டிராவலஸ், சீனு, தென்காசி பட்டிணம், தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் நடித்தும் உள்ளார். இதற்கிடையே நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் ஒன்றிணைந்த வாசு, சந்திரமுகி என்ற பிளாக்பஸ்டர் படத்தை எடுத்தார். காமெடி, ஆக்ஷன், த்ரில்லர், பாடல் என அனைத்திலும் ஹிட் அடித்த சந்திரமுகி படம் 200 நாட்களையும் தாண்டி திரையரங்குகளில் ஓடியது.
இப்படி தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குநராக வலம் வரும் வாசு தற்போது ராகவா லாரன்ஸ் நடித்து இருக்கும் சந்திரமுகி 2 படத்தை இயக்கியுள்ளார். வடிவேலு, கங்கனா ரணாவத், ராதிகா என பெரிய பட்டாளமே நடித்துள்ள இந்த படம் வரும் 28ம் தேதி திரைக்கு வருகிறது. முதல் பாகத்தை போன்று சந்திரமுகி 2 ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடத்திலும் சில படங்களை வாசு இயக்கியுள்ளார். இப்படி பன்முக இயக்குநராக வலம் வரும் வாசுவுக்கு திரை நட்சத்திரங்கள் பிறந்த நாள் கூறி வருகின்றனர்.